அண்ணா பல்கலை.க்கு மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்து: அரிய வாய்ப்பைப் பயன்படுத்த கல்வியாளர்கள் வலியுறுத்தல்

நாட்டிலுள்ள 398 மாநில அரசு பல்கலைக்கழகங்களுக்கு கிடைத்திராத அரிய வாய்ப்பை அண்ணா பல்கலைக்கழகம் தவற விடப்போகிறதோ என்ற அச்சம் கல்வியாளர்களிடையே எழுந்துள்ளது. மத்திய அரசின் மேம்பட்ட
அண்ணா பல்கலை.க்கு மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்து: அரிய வாய்ப்பைப் பயன்படுத்த கல்வியாளர்கள் வலியுறுத்தல்


நாட்டிலுள்ள 398 மாநில அரசு பல்கலைக்கழகங்களுக்கு கிடைத்திராத அரிய வாய்ப்பை அண்ணா பல்கலைக்கழகம் தவற விடப்போகிறதோ என்ற அச்சம் கல்வியாளர்களிடையே எழுந்துள்ளது. மத்திய அரசின் மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்துதான் அந்த அரிய வாய்ப்பு.
இதற்காக அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கிடைக்கப் போவது ரூ. 1000 கோடி. ஆண்டுக்கு ரூ. 200 கோடி வீதம், 5 ஆண்டுகளுக்கு இந்த நிதி பிரித்தளிக்கப்படும். மாநில அரசு பல்கலைக்கழகம் என்பதால், இந்த நிதியில் 50 சதவீதத்தை மாநில அரசு ஏற்கவேண்டும். தென் மாநிலங்களிலிருந்து தேர்வாகியிருக்கும் ஒரே மாநில அரசு பல்கலைக் கழகம் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமே. 
நாடு முழுவதும் மத்திய அரசுப் பல்கலைக்கழகங்கள், ஐஐடி-க்கள், தனியார் பல்கலைக்கழகங்கள் என 800-க்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் மாநில அரசு பல்கலைக்கழகங்கள் 399. இந்த 399 பல்கலைக்கழகங்களில் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 2 மாநில அரசு பல்கலைக்கழகங்கள் மட்டுமே இந்த மேம்பட்ட கல்வி நிறுவன (இன்ஸ்டிடியூட் ஆப் எமினன்ஸ்) அந்தஸ்துக்கு தேர்வாகியுள்ளன.
நாடு முழுவதும் 10 அரசு பல்கலைக்கழகங்கள், 10 தனியார் பல்கலைக்கழகங்களை இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்து, உலகத் தரத்திலான பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தும் நோக்கத்தோடு மத்திய அரசு அறிமுகம் செய்ததுதான் இந்தத் திட்டம்.
என்னென்ன சலுகைகள்: இதன் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள 20 பல்கலைக்கழகங்களுக்கும் எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி முழுச் சுதந்திரம் அளிக்கப்படும். குறிப்பாக இந்தப் பல்கலைக்கழகங்களை இனி யுஜிசி ஆய்வு செய்ய முடியாது.  இந்தக் கல்வி நிறுவனங்கள் அவர்களுக்கான பாடத் திட்டங்களை உருவாக்கிக் கொள்ள முடியும். 
புதிய பட்டப் படிப்புகளை அறிமுகம் செய்யும் அதிகாரம். ஆன்-லைன் படிப்புகளை வழங்கும் அதிகாரம். தடையின்றி வெளிநாட்டு மாணவர், ஆசிரியர் பரிமாற்ற அனுமதி. 25 சதவீத ஆசிரியர்களை வெளிநாட்டிலிருந்து நியமித்துக்கொள்ளும் அனுமதி. அரசின் அனுமதி பெறாமலே, வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் கல்வி - ஆராய்ச்சி புரிந்துணர்வு செய்துகொள்ளும் அனுமதி என கல்வியிலும் நிர்வாகத்திலும் இந்த 20 மேம்பட்ட கல்வி நிறுவனங்களுக்கும் முழுச் சுதந்திரம் அளிக்கப்படும். இதில், 10 அரசு பல்கலைக் கழகங்களுக்கு மட்டும் கூடுதலாக ரூ. 1,000 கோடி மேம்பாட்டு நிதி உதவி அளிப்பது கூடுதல் சிறப்பு.
இந்தச் சிறப்பைத்தான் நாட்டிலேயே இரண்டு மாநில அரசு பல்கலைக்கழகங்களில் ஒன்றாக, அண்ணா பல்கலைக்கழகமும் தேர்வாகி தமிழகத்துக்குப் பெருமை சேர்த்திருக்கிறது.
தொடரும் சிக்கல்: இந்த திட்டத்தில் தேர்வாகியிருக்கும் 10 தனியார் பல்கலைக்கழகங்களில் தமிழகத்தைச் சேர்ந்த வேலூர் விஐடி மற்றும் அமிர்தா விஷ்வ வித்யபீடம் ஆகிய இரண்டு கல்வி நிறுவனங்களும் அடங்கும். இந்த இரண்டு தனியார் கல்வி நிறுவனங்களும், அதற்கான ஆயத்தப் பணிகளை ஏற்கெனவே தொடங்கி விட்ட நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் இதுவரை எந்தவொரு பணியையும் தொடங்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதாவது, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு இந்தத் திட்டத்தில் கீழ் வழங்கப்பட உள்ள ரூ. 1000 கோடி நிதியில், தமிழகத்தின் பங்களிப்பை ஏற்பதாக மாநில அரசு ஒப்புதல் அளித்தால்தான், இந்த அந்தஸ்தை அண்ணா பல்கலைக்கழகம் பெற முடியும்.அண்ணா பல்கலைக்கழகம் தேர்வான அறிவிப்பை கடந்த 5-ஆம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டது. அதன் இணையதளத்திலும் இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. 
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறியது:
நாட்டில் 800 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இவற்றில் 20 பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே இந்த அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிலும், இரண்டு மாநிலப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டிருப்பது, நமக்கெல்லாம் பெருமை சேர்க்கக்கூடிய விஷயம்.
இதன் மூலம் அண்ணா பல்கலைக்கழகம் மிகப் பெரிய உச்சத்தை அடைய முடியும். ஆராய்ச்சியிலும், கல்வித் திட்டத்திலும் மேம்பட்டு, உலக அளவில் தலைசிறந்த தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக உருவாகும் வாய்ப்பு அண்ணா பல்கலைக்கழகத்துக்குக் கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை தவற விட்டுவிடக் கூடாது. இதுதொடர்பாக அரசுக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன். ஆனால், இதன் பலனை அறியாமல் சில அதிகாரிகள் ஒப்புதல் அளிக்க அலட்சியம் காட்டுவதாகத் தெரிகிறது. இதே நிலை தொடர்ந்தால், அரசிடம் நேரில் முறையிடவும் தயாராக இருக்கிறோம் என்றார் அவர்.


ஆய்வுக்குப் பின் அறிவிக்கப்படும்
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்துக்கான நிதி பங்களிப்புக்கு மாநில அரசு ஒப்புதல் அளிப்பது குறித்து ஆய்வுக்குப் பின் அறிவிக்கப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறினார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அமைச்சரிடம், இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
மத்திய அரசின் மேம்பட்ட கல்வி நிறுவனத் திட்டத்துக்கு தமிழகத்திலிருந்து 5 மாநில அரசு பல்கலைக்கழகங்கள் விண்ணப்பித்தன. இதில் முதல் கட்டமாக அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்தை அறிவிப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
இந்தத் திட்டத்தில் என்னென்ன குறைபாடுகள் இருக்கின்றன, நடைமுறைகள் என்னென்ன என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்தத் திட்டத்தின் கீழ் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்படும் நிதியில் மத்திய - மாநில அரசுகளின் பங்களிப்பு என்ன- இந்த நிதி ஒரே கட்டமாக வழங்கப்படுமா, அல்லது ஆண்டுக்கு ஆண்டு வழங்கப்படுமா என்பன குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இந்த ஆய்வுக்குப் பின்னர், தமிழக அரசின் முடிவு குறித்து அறிவிக்கப்படும்.
உயர் கல்வித் துறையின் கீழ் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களுக்கு தேவைப்படும் நிதியை வழங்க தமிழக அரசு எப்போதும் தயாராக இருக்கிறது. ஒருபோதும் தடையாக இருக்காது என்றார் அவர்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.கே.சூரப்பா கூறியது:
மத்திய அரசின் மேம்பட்ட கல்வி நிறுவனத் திட்டத்தின் கீழ் தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஒரே மாநில அரசு பல்கலைக்கழகம் அண்ணா பல்கலைக்கழகம் மட்டும்தான். தமிழகத்திலிருந்து விண்ணப்பித்த பிற மாநில அரசு பல்கலைக்கழகங்கள் தேர்வு செய்யப்படவில்லை. அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன. அவை இனி தேர்வு செய்யப்படவும் வாய்ப்பு இல்லை.
இந்த அறிவிப்பு வெளியான உடனேயே, தமிழக அரசுக்கு இதுதொடர்பாக  உயர் கல்வித் துறைச் செயலருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். மாநில அரசு ஒப்புதல் அளித்தால், மத்திய அரசு உடனடியாக அறிவித்துவிடும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com