பலத்த மழையால் சாய்ந்த குறுவை நெற்பயிர்கள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் சில நாள்களாகப் பெய்து வரும் பலத்த மழை காரணமாகக் குறுவை பருவ நெற்பயிர்கள் சாய்ந்துவிட்டன. 
திருவையாறு அருகேயுள்ள அம்மையகரம் கிராமத்தில் மழையால் சாய்ந்து, நீரில் மூழ்கியுள்ள குறுவை நெற்பயிர்கள்.
திருவையாறு அருகேயுள்ள அம்மையகரம் கிராமத்தில் மழையால் சாய்ந்து, நீரில் மூழ்கியுள்ள குறுவை நெற்பயிர்கள்.


தஞ்சாவூர் மாவட்டத்தில் சில நாள்களாகப் பெய்து வரும் பலத்த மழை காரணமாகக் குறுவை பருவ நெற்பயிர்கள் சாய்ந்துவிட்டன. 
காவிரி நீர் வரத்து இல்லாததால், மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்படவில்லை. என்றாலும், மாவட்டத்தில் ஆழ்குழாய் மோட்டார் பம்ப்செட் மூலம் விவசாயிகள் குறுவை சாகுபடியைத் தொடங்கினர். மாவட்டத்தில் நிகழாண்டு 35,000 ஹெக்டேரில் குறுவை சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதையும் விஞ்சி 37,167 ஹெக்டேரில் பயிரிடப்பட்டது.
இதில்,  இதுவரை 22,000 ஹெக்டேரில் அறுவடைப் பணிகள் முடிவடைந்துவிட்டன. தாமதமாகத் தொடங்கப்பட்ட குறுவை சாகுபடியில் ஏறத்தாழ 15,000 ஹெக்டேரில் தற்போது நெற்பயிர்கள் அறுவடை செய்யப்படும் நிலையிலும், பால் பிடித்த தருணத்திலும் உள்ளன.
இந்நிலையில், மாவட்டத்தில் ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. சில நாள்கள் பலத்தக் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால், திருவையாறு அருகேயுள்ள அம்மையகரம்,  நடுக்காவேரி, வரகூர், செந்தலை, கோனேரிராஜபுரம், மணத்திடல், கண்டமங்கலம், ஒரத்தநாடு அருகேயுள்ள மேல உளூர் உள்ளிட்ட பகுதிகளில் குறுவை நெற்பயிர்கள் சாய்ந்துவிட்டன. சில இடங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
ஆழ்குழாய் மூலம் மிகுந்த சிரமங்களுக்கு இடையே செய்யப்பட்ட குறுவை சாகுபடி தற்போது மழையால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதால் விவசாயிகள் வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் அம்மையகரம் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர் தெரிவித்தது:
பாதிக்கப்பட்டுள்ள குறுவைப் பயிர்கள் அனைத்தும் ஒரு வாரம் முதல் 15 நாள்களுக்குள் அறுவடை செய்யப்படும் நிலையில் இருந்தன. இந்நிலையில், காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் பயிர்கள் சாய்ந்துவிட்டன. இதில், நெற் கதிர்கள் சாய்ந்து மண்ணில் விழுந்துள்ளதால், மீண்டும் முளைத்து நாற்றுவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. வடிகால்களை முறையாகப் பராமரித்திருந்தால் இந்தப் பாதிப்பு ஏற்பட்டிருக்காது. ஆனால், வடிகாலைத் தூர் வாராததால், வயலில் தேங்கியுள்ள தண்ணீர் வடிவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இதனால், பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றார் ரவிச்சந்தர்.
தொடர்ந்து ஒரு வாரத்துக்கு வெயில் இருந்தால், வயலில் உள்ள தண்ணீரை வடிய வைத்து, பயிர்களை ஓரளவுக்குக் காப்பாற்றலாம். என்றாலும்,  மகசூல் இழப்பு ஏற்படும். ஆனால், நாள்தோறும் மாலை நேரத்தில் மழை பெய்கிறது. இதேபோல, வியாழக்கிழமை மாலையும்,  இரவும் பலத்த மழை பெய்தது. இதனால், வயலில் தேங்கியுள்ள தண்ணீர் வடிந்து செல்ல வாய்ப்பில்லாத நிலை தொடர்கிறது. இந்த நிலைமை தொடர்ந்தால், ஏக்கருக்கு சராசரியாக 25 மூட்டைகள் கிடைக்கும் நிலையில்,  6 மூட்டைகள் கிடைத்தாலே பெரிய விஷயமாக இருக்கும் என்றனர் விவசாயிகள். 
ஆனால், பால் பிடித்த பருவத்தில் உள்ள பயிர்களைக் காப்பாற்றுவது கடினம் என்பதால் விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com