வரி விலக்குகளைப் படிப்படியாக நீக்கும் திட்டம்: ஜிஎஸ்டி குழுக் கூட்டத்தில் தமிழகம் கடும் எதிர்ப்பு

வரி விலக்குகளைப் படிப்படியாக நீக்கும் நிதிக் குழுவின் கருத்துக்கு, சரக்கு மற்றும் சேவைகள் வரி குழுக் கூட்டத்தில் தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 
வரி விலக்குகளைப் படிப்படியாக நீக்கும் திட்டம்: ஜிஎஸ்டி குழுக் கூட்டத்தில் தமிழகம் கடும் எதிர்ப்பு


வரி விலக்குகளைப் படிப்படியாக நீக்கும் நிதிக் குழுவின் கருத்துக்கு, சரக்கு மற்றும் சேவைகள் வரி குழுக் கூட்டத்தில் தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 
 37-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கோவாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பாக அமைச்சர் டி.ஜெயக்குமார் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் 15-ஆவது நிதிக் குழு சார்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
ஜிஎஸ்டி வருவாய் போதிய அளவுக்கு அதிகரிக்கும் பட்சத்திலும், சுமுகமான பொருளாதார நிலை நிலவும் சூழலிலும் வரி விகிதங்களைச் சீரமைப்பது குறித்து முடிவெடுக்கலாம் என அமைச்சர் டி.ஜெயக்குமார்  தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
ஜிஎஸ்டி சட்டத்தின் கீழுள்ள வரி விலக்குகளைப் படிப்படியாக நீக்கிக் கொள்ள வேண்டுமென்ற நிதிக் குழுவின் கருத்து ஏற்புடையது அல்ல.
வரிச் சலுகைகள் அனைத்தும் சிறு வணிகர்கள், விவசாயிகள், கைவினைத் துறையினர் போன்றோருக்கு வழங்கப்பட்டுள்ளதால் அதனை அகற்றும் போது அவர்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவார்கள்.
 மேலும், மாநிலத்தின் நிதி தன்னாட்சியைக் கருத்தில் கொண்டு பெட்ரோலியப் பொருள்கள், மின்சாரம் ஆகியன ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு உட்படுத்தக் கூடாது. ஜிஎஸ்டி வரி அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை ஈடுகட்டுவதற்கான தொகை ஐந்தாண்டு காலத்துக்குப் பிறகும் அளிக்கப்பட வேண்டும்.
ரூ.2 கோடி வரை விற்பனை அளவைக் கொண்டிருக்கும் வணிகர்கள், தங்களது கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டியதில்லை என சட்டக்குழு பரிந்துரை செய்துள்ளது. இதேபோன்று, ரூ.5 கோடி வரை ஆண்டு மொத்தத் தொகை உள்ள வரி செலுத்துவோர் தணிக்கைச் சான்று பெறுவதை கட்டாயமாக்கக் கூடாது.
மீன் துகள்களுக்கு வரி விலக்கு தேவை: தமிழகத்திலுள்ள மீனவ மக்களின் நலன் கருதி மீன் துகள்களுக்கு முற்றிலும் வரி விலக்கு அளிக்க வேண்டும். வரி விகிதங்களைச் சீரமைத்தல், சாதாரண மக்களின் பயன்பாட்டுக்கான பொருள்கள், விவசாயிகள், மீனவர்கள் பயன் பெறுவதற்கான பொருள்கள், சமய உணர்வு சார்ந்த பொருள்கள் ஆகியவற்றுக்கு வரி விலக்குகளையும், வரிச் சலுகைகளையும் அளிக்க வேண்டும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் வணிகவரி மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலாளர் கா.பாலச்சந்திரன், வணிகவரிகள் ஆணையர் டி.வி.சோமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com