ஏற்றுமதிக்குத் தயாராகும் நவராத்திரி கொலு பொம்மைகள்

நவராத்திரியையொட்டி ஏற்றுமதிக்காக செங்கல்பட்டில் கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.  
ஏற்றுமதிக்குத் தயாராகும் நவராத்திரி கொலு பொம்மைகள்

நவராத்திரியையொட்டி ஏற்றுமதிக்காக செங்கல்பட்டில் கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.  

செங்கல்பட்டில் சுமார் 4 லட்சம் களிமண் கொலுபொம்மைகள் தயாரிக்கப்பட்டு வர்ணம் தீட்டும் பணியில்  முழுமையாக ஈடுபட்டுள்ளனர். தயாரிக்கப்படும்   நவராத்திரி கொலு பொம்மைகள் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட உள்ளதோடு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யவும் கொலுபொம்மைகள் தயாராகி வருகிறது.

ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் நவராத்திரி  விழா நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது  பாரம்பரியமாக நவராத்திரியைக் கொண்டாடி வரும் குடும்பத்தினர் வரும் புரட்டாசி மாதத்தில் வரும் மஹாலய அமாவாசையன்று கலசம் நிறுவி அதில் அம்மனை எழுந்தருளச் செய்து நவராத்திரி கொலு வைத்து வழிபாடு நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

நவராத்திரி விழாவை முன்னிட்டு வீடுகளில் பொம்மை கொலு வைப்பார்கள். நவராத்திரி தினங்களில் அன்றாடம் வெண்பொங்கல், சர்க்கரைப்பொங்கல், நவதானிய சுண்டல், கொண்டைக் கடலை  ஆகியவற்றை தயார்செய்து கொலு பார்க்க வருபவர்களுக்கு  வழங்கி மகிழ்ச்சி அடைவார்கள். கொலு பார்க்கவரும் சுமங்கலிகளுக்கு ரவிக்கைத் துண்டு, மஞ்சள்கயிறு, மஞ்சள், குங்குமம்  ஆகியவற்றை வழங்குகிறார்கள். 

கன்னிப்பெண்கள் மற்றும் பெண்குழந்தைகளுக்கு வளையல், புத்தாடை வழங்குவதோடு அவர்களை அமரவைத்து சந்தனம், குங்குமம் இட்டு பாதபூஜை செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். 

இவ்வாறு வீட்டில் கொலு வைத்து வழிபாடு செய்பவர்களின்  வீட்டிற்கு  அம்மன் சுமங்கலியாகவோ கன்னிப்பெண்ணாகவோ, பெண்குழந்தை வடிவமாகவோ வந்து செல்வதாக ஐதீகம்.

இந்த ஆண்டு  செப். 28-ஆம் தேதி சனிக்கிழமை மஹாலய அமாவாசையன்று கலசம் நிறுவப்பட்டு நவராத்திரி விழா தொடங்கும். விழாவை முன்னிட்டு வீடுகளில் பாரம்பரியமாக பொம்மைகள் கொலு வைக்கும் வழக்கத்தை இந்துக்கள் மேற்கொண்டுள்ளனர்.  

பொதுவாக வீடுகளில் கொலு வைப்பவர்கள்அவரவர் வசதிக்கேற்ப  11, 9, 7, 5 என்ற ஒற்றைப்படை எண்ணில் கொலுப்படிகள்  அமைத்து அதில் ஓரறிவு முதல் ஆறறிவு உயிர்களை சித்தரிக்கும் பறவைகள் மற்றும்  ஆடு, மாடு, பூனை, நாய் உள்ளிட்ட வீட்டு விலங்குகள், சிங்கம் , புலி, மான் உள்ளிட்ட காட்டு விலங்குகள், பறவைகள், மனிதர்கள் தெய்வ உருவங்கள் இவற்றை கீழிருந்து மேலாக கொலுப்படிகளில் பொம்மைகள் வைக்கப்படும். 

மேலும் அவரவர் கற்பனைக்கும் வசதிக்கும் ஏற்ப விழாக்கள், கடவுள் அவதாரங்கள் மற்றும் நிகழ்வுகளை விளக்கும் செட் பொம்மைகளும் மின்அலங்கார விளக்குகளுடன் கொலுப்படிகளில் இடம்பெறும்.  சமீப காலமாக கோயில்களிலும், தனியார் நிறுவனங்களிலும் நவராத்திரியையொட்டி பொம்மை கொலு வைக்கப்படுகிறது. 

நவராத்திரி விழாவை முன்னிட்டு பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கலைஞர்கள் பல்வேறு பொம்மைகளைத் தயாரிக்கின்றனர். தயாரிக்கப்படும் பொம்மைகளை உள்நாடு மட்டும் அல்லாமல் வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கின்றனர் .

பொம்மை தயாரிப்பில் 4 தலை முறைகளுக்கும் மேலாக ஈடுபட்டு வரும் சங்கர் என்பவரை அணுகி பொம்மை தயாரிப்பு குறித்து கேட்டபோது: 
அரசாங்கம் களிமண் ஏலம் விடும் நேரத்தை எதிர்பார்த்து களிமண்ணை ஏலத்திற்கு எடுத்து வந்து அதை நன்கு பிசைந்து கல் எல்லாவற்றையும் சுத்தம் செய்து களிமண் பொம்மைகள் செய்யப்பட்டு ஈரம் உலர்ந்த பின் சூளையில் இட்டு பதமாக வேக வைத்து, அதில் பல்வேறு வர்ணம் தீட்டப்பட்டு முழுமையான பொம்மைகளை உருவாக்கி வருகிறோம்.

எங்கள் குடும்பத்தினருடன் 9 பேருக்கு வண்ணம் தீட்டும் பயிற்சி அளிக்கப்பட்டு  இந்த வர்ணம் தீட்டும் பணியினை மேற்கொள்கிறோம்.   நவராத்திரி விழாவிற்கு கொலுவைப்பதற்காக 10 செ.மீ. முதல் 3 அடி உயரம் வரை சுமார் 4 லட்சம் பொம்மைகள்  தயார் செய்து விற்பனைக்காக வைத்திருக்கிறோம். 

இந்த பொம்மைகளை காஞ்சிபுரம் மாவட்டம் மட்டுமின்றி  தமிழ்நாட்டின் பல்வேறுமாவட்டங்கள்மற்றும்  இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் விற்பனைக்காகவும், வீடுகளிலும் கோயில்களிலும் கொலு வைப்பதற்காக வாங்கிச்செல்வார்கள். 

அதுமட்டுமின்றி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகிறோம். ஆர்டரின் பேரில் பாதுகாப்பாக பேக்கிங் செய்து வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கிறோம்.  தற்போது கூலி கொடுத்து கட்டுபடியாகாததால் சிறிய சிறிய பொம்மைகள் செய்வதை விட்டுவிட்டோம். 
நவராத்திரிவிழா என்பது அனைத்து விநாயகர், கிருஷ்ணர் மட்டுமல்லாமல், சரஸ்வதி, துர்கை, மஹாலட்சுமி, அஷ்டலட்சுமி, மகிஷாசுரமர்த்தினி, காமாட்சியம்மன், மதுரைமீனாட்சியம்மன், மீனாட்சி திருக்கல்யாணம் கோலம், நவகிரக நாயகிகள், மகாவிஷ்ணு, ரங்கநாதன், அன்னபூரணி, பிரம்மா, பெருமாள் தாயார், பால திரிபுரசுந்தரி, அண்ணாமலையார், அர்த்தநாரீஸ்வரர்  தசாவதாரம், குருவாயூரப்பன், ராகவேந்திரர், ரிஷிகள் மற்றும் மகான்கள் வள்ளலார், விவேகானந்தர், காந்தி உள்ளிட்ட உருவபொம்மைகள், தேசத்தலைவர்கள் உள்ளிட்ட பொம்மைகள் உருவாக்கப்பட்டு வர்ணம் தீட்டி தயார் நிலையில் வைத்திருக்கிறோம்.  

இந்தமுறை அதிக அளவில் நவகிரஹ நாயகிகள், தசாவதாரம் சிலைகள் வாங்கிச் செல்வதாகவும் மற்ற பொம்மைகள் எதிர்பார்த்த அளவிற்கு இன்னும் விற்பனையாகவில்லை. நவராத்திரிக்கு இடையில் இருக்கும் நாள்களில் விற்பனையாகும் என்ற நம்பிக்கையில் பொம்மைகளைத் தயாரித்து  தயார் நிலையில் வைத்திருக்கிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com