நெல்லை அருகே 2 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் அருகேயுள்ள வெள்ளங்குளியில் தேசிய புலனாய்வு முகமையினர் (என்ஐஏ) சனிக்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
வெள்ளங்குளியில் திவான் முஜிபீர் வீட்டில் சோதனை முடித்து வெளியே வரும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள். (உள்படம்) திவான் முஜிபீர். (வலது) புளியங்குடியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் சோதனையிடப்பட
வெள்ளங்குளியில் திவான் முஜிபீர் வீட்டில் சோதனை முடித்து வெளியே வரும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள். (உள்படம்) திவான் முஜிபீர். (வலது) புளியங்குடியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் சோதனையிடப்பட

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் அருகேயுள்ள வெள்ளங்குளியில் தேசிய புலனாய்வு முகமையினர் (என்ஐஏ) சனிக்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றி வந்த சிலர் பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 பேரை ஐக்கிய அரபு அமீரகம் கைதுசெய்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது. அவர்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து, சென்னை, கீழக்கரை, நாகப்பட்டினம், மேலப்பாளையம் உள்ளிட்ட இடங்களிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில், வீரவநல்லூர் அருகேயுள்ள வெள்ளங்குளி வடக்குத் தெருவைச் சேர்ந்த திவான்முஜிபீர் என்பவரது வீட்டில் சனிக்கிழமை காலை 7 மணி முதல் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, திவான் முஜிபீர் வீட்டில் இல்லை. சுமார் 4 மணி நேரம் அவரது உறவினர்களிடம் விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகள், திவான் முஜிபீரின் பாஸ்போர்ட், 2 அறிதிறன் செல்லிடப்பேசி, ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருந்ததற்கான சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றனர். மேலும், திவான் முஜிபீரை திருநெல்வேலி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டனர். 

வெள்ளங்குளியில் சோதனை நடைபெற்ற அதேநேரத்தில், திவான் முஜிபீர், புளியங்குடியில் உறவினர் மைதீனுடன் இணைந்து நடத்திவந்த கடை மற்றும் உறவினர் வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.  

திவான் முஜிபீர், ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றியபோது, அங்கு வேலை செய்த புளியங்குடியைச் சேர்ந்த மைதீனுடன் நட்பு ஏற்பட்டதாம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டு வேலையை விட்டுவிட்டு, புளியங்குடி வந்த மைதீன் அங்கு பெயிண்ட் கடை நடத்தி வருகிறார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து வெள்ளங்குளிக்கு வந்த திவான்முஜிபீர், புளியங்குடியில் மைதீனுக்கு சொந்தமான வீட்டில் மற்ற பணியாளர்களுடன் தங்கி, அவரது கடையில் பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

மைதீனுக்கு சொந்தமான வீட்டில் சனிக்கிழமை காலை சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற சோதனையின் போது, செல்லிடப்பேசி மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடைபெற்றதையடுத்து, இரு இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com