தமிழ் தெரியாதவர்கள் சிவில் நீதிபதிகள் தேர்வை எழுத அனுமதிக்கக் கூடாது: ராமதாஸ்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளை இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் எழுதலாம் என்ற விதிமுறை
தமிழ் தெரியாதவர்கள் சிவில் நீதிபதிகள் தேர்வை எழுத அனுமதிக்கக் கூடாது: ராமதாஸ்



சென்னை: தமிழ் தெரியாதவர்கள் சிவில் நீதிபதிகள் தேர்வை எழுத அனுமதிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர்  ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு நீதித்துறையில் சிவில் நீதிபதி பணிகளுக்கான போட்டித் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ்மொழி தெரியாதவர்களும் இந்தப் போட்டித் தேர்வுகளை எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டிருப்பது குறித்தும், அதுகுறித்த வழக்கறிஞர்களின் எதிர்ப்பு - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் விளக்கம் ஆகியவற்றையும் தினத்தந்தி நாளிதழ் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சிவில் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை, சாட்சியம் உள்ளிட்ட அனைத்தும் தமிழ்  மொழியில் தான் நடக்கும். சிவில் நீதிமன்றங்களில் சொத்துகள் குறித்த வழக்குகள் தான் அதிக எண்ணிக்கையில் நடைபெறும். இந்த வழக்குகளை தீர்மானிப்பதற்கான முக்கிய ஆதாரங்கள் நிலப்பதிவு  பத்திரங்கள் தான். இவை பெரும்பாலும் தமிழில் தான் இருக்கும். பத்திரங்களில் உள்ள வாசகங்களை அறிந்து கொள்ள தமிழ் மொழி மட்டும் தெரிந்திருந்தால் போதாது; உள்ளூர் மொழிநடையும் தெரிந்திருக்க வேண்டும். சிவில் வழக்குகளை கையள்வதில் மொழி சார்ந்து இவ்வளவு சிக்கல்கள் இருக்கும் நிலையில், தமிழ் மொழி அறியாதவர்கள் கூட சிவில் நீதிபதிகள் பணிக்கான போட்டித் தேர்வுகளை எழுதலாம் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருப்பது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விதிமுறைகள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தழுவி வகுக்கப்பட்டதாகவும், பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ் அறிந்திருக்காவிட்டாலும் கூட தமிழகத்தில் தேர்வு எழுதலாம் என்று விதிமுறைகளில் இருப்பதை மாற்ற முடியாது என்றும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலர் நந்தகுமார் விளக்கம் அளித்திருக்கிறார். இந்த விதிகள் இப்போது கொண்டு வரப்பட்டவை அல்ல... தேர்வாணையம் அமைக்கப்பட்ட நாளில் இருந்தே இவ்விதிகள் நடைமுறையில் இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். அவை அனைத்தும் உண்மை; அவற்றில் எதையும், மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. ஆனால், அந்த விதிமுறைகளின் காரணமாக இதுவரை பாதிப்புகள் ஏற்பட்டதில்லை; இப்போது தான் பாதிப்புகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. அதன்காரணமாகத் தான் இந்த விதிகளுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது என்பதை அரசு உணர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளை இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் எழுதலாம் என்ற விதிமுறை பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. ஆனால், அப்போதெல்லாம் தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எவரும் தமிழ்நாடு அரசுப் பணிகளில் சேர ஆர்வம் காட்டியதில்லை. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தொடர்வண்டித் துறை, அஞ்சல்துறை, வங்கிகள் என மத்திய அரசு பணிகள் மூலம் தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை அபகரித்து வரும் வெளிமாநிலத்தவர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விதிகளில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட தமிழக அரசுப் பணிகளையும் கைப்பற்றத் தொடங்கியுள்ளனர். இதனால் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவது ஒருபுறமிருக்க பண்பாடு, கலாச்சாரம் சார்ந்த பிரச்சினைகளும் ஏற்படும் ஆபத்து உள்ளது.

இதுஒருபுறமிருக்க, அலுவலகம் சார்ந்த பணிகளுக்கும் மக்களுக்கும் நீதி வழங்குவதற்கான நீதிபதிகள் பணிக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அலுவலகப் பணிகளை மேற்கொள்வோர் பெரும்பாலான நேரங்களில் உள்ளூர் மொழி தெரியாவிட்டாலும், தெரிந்த மொழியைக் கொண்டு சமாளித்து விட முடியும். ஆனால், வழக்கறிஞர்களின் வாதங்களையும், மக்களின் சாட்சியங்களையும் கேட்டறிந்து தீர்ப்பு வழங்க வேண்டிய நீதிபதிகளுக்கு உள்ளூர் மொழி தெரிந்திருக்காவிட்டால் அவர்களால் பணியை  சரியாக செய்ய முடியாது. சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்பதற்காகத் தான் பாட்டாளி மக்கள் கட்சியும், வழக்கறிஞர்கள் சமுதாயமும் போராடி வருகின்றன. அவ்வாறு இருக்கும் போது தமிழ் தெரியாதவர்களை சிவில் நீதிபதிகளாக நியமித்தால் கீழமை நீதிமன்றங்கள் இந்தியிலும், பிற மொழிகளிலும் இயங்கும் நிலை உருவாகி விடும். இது நல்லதல்ல.

எப்போதோ எழுதப்பட்ட விதிகளை காட்டி தவறுகள் தொடர்வதை அரசுப் பணியாளர் தேர்வாணையம்  அனுமதிக்கக்கூடாது. விதிகள் எனப்படுபவை காலத்திற்கு ஏற்றவாறு திருத்தப்பட வேண்டும். எனவே, சிவில் நீதிபதிகள் உள்ளிட்ட தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் எந்த பணிகளாக இருந்தாலும் அவற்றில் தமிழர்களை மட்டுமே நியமிக்கும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய விதிகளில் திருத்தங்களைச் செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com