நான்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

விக்கிரவாண்டி, நான்குனேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிப்போம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
நான்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

அதிமுகவுக்கு பாமக ஆதரவு

விக்கிரவாண்டி, நான்குனேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிப்போம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

பாமக நிறுவனர் ராமதாஸின் முத்து விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது இடைத் தேர்தல் தொடர்பாக செய்தியாளர்கள், அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராமதாஸ், "விக்கிரவாண்டி, நான்குனேரி ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக சார்பில் களமிறங்கும் வேட்பாளர்களுக்கு பாமக ஆதரவளிக்கும்' என்றார்.

காங்கிரஸ், திமுகவுக்கு மதிமுக ஆதரவு

விக்கிரவாண்டி, நான்குனேரி இடைத் தேர்தலில் அதிமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவர் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இடைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு மதிமுக களத்தில் பணியாற்றும். அதுபோல, புதுவை காமராஜர் நகர் தொகுதி இடைத் தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றிக்கு மதிமுக களப்பணியாற்றும்.
தமிழகத்தை எல்லா வகையிலும் வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசுக்கு துணைபோகும் அதிமுக அரசுக்கு இடைத் தேர்தலில் மக்கள் உரிய பாடம் கற்பிப்பார்கள்  என வைகோ தெரிவித்துள்ளார்.

அதிமுகவுக்கு தமாகா ஆதரவு

இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு தமாகா முழு ஆதரவளித்து, வெற்றிக்கு உறுதியோடு களப்பணியாற்றும் என அக் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் அக்டோபர் 21 -இல் நடைபெற இருக்கும் விக்கிரவாண்டி, நான்குனேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தமாகா முழு  ஆதரவு அளித்து,  வாக்குச் சேகரித்து அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணிக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் ஆதரவு

விக்கிரவாண்டி, நான்குநேரி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பணியாற்றும் என அக் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளுடன் இணைந்து மதவாத, சாதிவெறி சக்திகளை எதிர்த்து சமரசமின்றி போராடி வருகிறது. நடந்து முடிந்த  மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்ததது.இப்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் பாடுபடுவது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு முடிவு செய்துள்ளது எனத் தெரிவித்துள்ளார். 

மநீம போட்டியில்லை

விக்கிரவாண்டி, நான்குனேரி சட்டபேரவை  இடைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் (மநீம) போட்டியிடாது என அக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவைத் தொடர்ந்து, இப்போது மக்கள் நீதி மய்யம் கட்சியும் போட்டியிடப் போவதில்லை என அறிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக அக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை:

பழைய கட்சிகளையும், அதன் கூட்டுப் பங்காளிகளையும், பெருவாரி மக்களின் எண்ணப்படி ஆட்சியிலிருந்து அகற்றி, 2021-ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பினை மக்களின் பேராதரவுடன் கைப்பற்றி மக்களாட்சிக்கு வழி வகுக்கும் முனைப்போடு  மநீம விரைவாக முன்னேறி வருகிறது. 

விக்கிரவாண்டியிலும், நான்குனேரியிலும் தங்கள் தலைவர்களையும் அவர்களின் தலைப்பாகைகளையுமாவது தக்க வைத்துக் கொள்ளலாம் என்கின்ற எண்ணத்துடன்,  ஆட்சியிலிருந்தவர்களும் ஆள்பவர்களும் போடும் இடைத்தேர்தல் எனும் இந்த ஊழல் நாடகத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கெடுக்காது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டம்:  கே.எஸ்.அழகிரி

நாகர்கோவில்/தூத்துக்குடி, செப். 22: நான்குனேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.

நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:  நான்குனேரி தொகுதி தேசிய இயக்கத்தின்ஆணிவேர். அத்தொகுதியில் வெற்றி பெறுவோம். அதிமுக, பாஜக அரசுகளின் தவறுகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி, ஒரு சிறந்த அரசு, சிறந்த முதல்வர் வேண்டும் என்று மக்களுக்கு உணர்த்தி  பிரசாரம் மேற்கொள்வோம்.  மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 39 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றது. அதேபோல இந்த இடைத்தேர்தலிலும் வெற்றி பெறுவோம். இந்த இடைத்தேர்தல் முடிவுகள் நடைபெறவுள்ள உள்ளாட்சி மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும்.

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத பொருளாதாரச் சரிவை நாடு தற்போது சந்தித்துள்ளது. பெருநிறுவனங்களுக்கு 10 சதவீத வரிச் சலுகை அளித்துள்ளதால் மக்களுக்கு பயன் கிடைக்கப் போவதில்லை.  பாஜக அரசின் பொருளாதாரக் கொள்கை இந்தியாவுக்கு ஏற்றதல்ல. விருப்பப்பட்டு படித்தால் யார் வேண்டுமானாலும் ஹிந்தி படிக்கலாம். மொழியைத் திணிக்காதீர்கள் என்றுதான் கூறுகிறோம். மத்திய அரசுப் பணியாளர் தேர்வுகள் நடைபெறும்போது அந்தந்த மாநிலத்தில் மாநில மொழியில் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கொள்கை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com