சிமென்ட் ஆலைகளால் கைவிடப்பட்ட சுண்ணாம்புக் கல் சுரங்கங்களை நீர்நிலைகளாக மாற்றக் கோரிக்கை

அரியலூர் மாவட்டத்தில் சிமென்ட் ஆலைகளால் கைவிடப்பட்ட சுண்ணாம்புக் கல் சுரங்கங்கள் அனைத்தும் நீர்நிலைகளாக மாற்றப்படுமா என அனைத்துத் தரப்பு மக்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
செந்துறை அடுத்த ஆலத்தியூர் பகுதிகளில் சிமென்ட் ஆலைகளால் கைவிடப்பட்ட சுண்ணாம்புக் கல் சுரங்கங்கள்.
செந்துறை அடுத்த ஆலத்தியூர் பகுதிகளில் சிமென்ட் ஆலைகளால் கைவிடப்பட்ட சுண்ணாம்புக் கல் சுரங்கங்கள்.


அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் சிமென்ட் ஆலைகளால் கைவிடப்பட்ட சுண்ணாம்புக் கல் சுரங்கங்கள் அனைத்தும் நீர்நிலைகளாக மாற்றப்படுமா என அனைத்துத் தரப்பு மக்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கிரானைட், ஜிப்சம், குவார்ட்ஸ் கற்கள், புளூ மெட்டல், சிலிக்கா, லைம் ஸ்டோன், பாக்சைட், வெள்ளைக்கல், குவார்ட்ஸ், சுண்ணாம்புக் கல் மற்றும் மணல் உள்பட பல்வேறு வகையான கனிம வளங்கள் தமிழகத்தில் கிடைக்கின்றன. இதில் சுண்ணாம்புக் கல் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டத்தில் பெண்ணாடம், திட்டக்குடி ஆகிய பகுதிகளில் அதிகளவில் கிடைக்கின்றன. இதில் அரியலூர் மாவட்டத்தில் சிமென்ட் உற்பத்திக்கு தேவையான அனைத்து வகை கனிமங்கள் அதிகளவில் கிடைக்கின்றன.

ராஜேந்திர சோழனின் தலைநகராக இருந்த கங்கை கொண்ட சோழபுரத்தை உள்ளடக்கிய அரியலூர் மாவட்டத்தில் ஒரு பகுதி டெல்டா பகுதியாகவும், அரியலூர், ஜயங்கொண்டம், செந்துறை உள்ளிட்ட பகுதிகள் வறட்சி பகுதியாகவும் உள்ளது.

இம்மாவட்டம், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்து நிலப்பரப்பாக மாறியதால் கனிம வளம் பெற்றுள்ள பூமியாகும். கால்சியம், இரும்பு, அலுமினியம், வேதிப்பொருள், கலவையான கடல் அடிவண்டல் இன்று சுண்ணாம்புக் கல் ஜிப்சம், நாடியூல்ஸ் என்ற படிகவகை பாறையும்,அதனிடையில் பாசில் என்ற தொல்லுயிரிகளும் நிறைந்த மாவட்டமாகும். அரியலூர் பகுதியில் சுமார் 60 கோடி டன் சுண்ணாம்பு படிவு, 1 கோடி ஜிப்சம் படிவு இருப்பதால் இம்மாவட்டத்தில் அதிகளவில் சிமென்ட் ஆலைகள் உருவாகியுள்ளன.

அழிந்து போன கொத்தமல்லி சாகுபடி....: ஒரு காலத்தில், கொத்தமல்லிக்கு பெயர்போன மாவட்டமான அரியலூர், தற்போது சிமென்ட் நகரமாக மாறியுள்ளது. கனிமங்கள் அதிகமாக உள்ளதால் சிமென்ட் ஆலை நிறுவனங்கள் இங்குள்ள விவசாயிகளிடம் நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி, அதில் கனிமங்களை எடுத்து வருகின்றனர்.

கேரளத்தில் 45-க்கும் மேற்பட்ட ஆறுகள் இருக்கின்றன. அங்கு ஆற்றில் இருந்து மண்ணை எடுக்காமல் மாற்று முயற்சியை மேற்கொள்கிறார்கள். ஆனால் இங்குள்ள சிமென்ட் ஆலைகள் விளைவுகளை அறியாமல் இம்மாவட்டத்தில் சுண்ணாம்புக் கல் கிடைக்கிறது என்பதற்காக கோடிக்கணக்கில் உற்பத்தி செய்து வெளி மாநிலத்துக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்புகிறார்கள்.

சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் மூடப்படாமல் திறந்து கிடப்பதால் மக்கள், கால்நடைகள், விவசாயத்திற்கும் பேரழிவுகள் உண்டாகின்றன. இதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன. இவ்வளவு விதி மீறல்கள் இம்மாவட்டத்தில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

மாவட்டத்தில் 3 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் கனிம சுரங்கள் உள்ளன. அதில் 166-க்கும் மேற்பட்ட சுண்ணாம்புக் கல் சுரங்கங்களில் இருந்து லட்சம் டன் மண் எடுக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 11 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கனிம விதிகளை மீறி இங்குள்ள ஒவ்வொரு சுண்ணாம்புக் சுரங்கங்களையும் 200 அடி முதல் 300 அடிவரை தோண்டப்பட்டு,அதில் இருந்த கனிமங்கள் அனைத்தும் எடுக்கப்பட்டு வருகிறது. அப்படி கனிமங்கள் எடுக்கப்பட்டு விட்டு, கைவிடப்பட்ட சுரங்கங்கள் ஏராளம். அந்த சுரங்கங்கள் எல்லாம் தற்போது கழிவுநீர் தேங்கி விஷ நீராக மாறி வருகின்றன. தண்ணீர், காற்று, விளைநிலங்கள் என எல்லாமே மாசு அடைந்துள்ளன.  நிலத்தை வெட்டி குடையப்பட்டு, சுண்ணாம்புக் கல் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயமும் அழிந்து போனது.

கைவிடப்பட்ட சுண்ணாம்புக் கல் சுரங்கங்களில் விழுந்து பலியாகும் கால்நடைகள்...:  சிமென்ட் ஆலைகள் பயன்படுத்திவிட்டு கைவிடப்பட்ட சுரங்கங்கள் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன. அந்தப் பகுதிகளில் மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் தண்ணீரைத் தேடி வரும் போது,சுரங்கங்களில் விழுந்து பலியாகி வருவதும் தொடர் கதையாகி வருகிறது. இதே போன்று மனிதர்களும் தற்கொலைக்கு தூண்டுகோலாகவும் இந்த சுரங்கங்கள் உள்ளன. 

கைவிடப்பட்ட சுரங்கங்களில்,ஆற்று நீரை நிரப்பினால் விவசாயம் செழிக்கும்...: கொள்ளிடம், மருதையாறு,காற்றாறு,வெள்ளாற்று மற்றும் புள்ளம்பாடி வாய்க்கால் நீரைக்கொண்டு இங்குள்ள கைவிடப்பட்ட சுரங்கங்களில் நிரப்பினால், சுரங்கங்களைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கு பயனுள்ளதாக அமையும். மேலும் இப்பகுதி மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்கும். இந்தத் திட்டத்தை தமிழக அரசு ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தால் மீண்டும் அரியலூர் விவசாயம் நிறைந்த பகுதியாக மாறும்.

இது குறித்து அரியலூர் மக்கள் கூறியது: அரியலூர் மாவட்டத்தில் 8-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் சிமென்ட் ஆலைகள் இயங்கி வருகின்றது. இந்த ஆலைகளுக்கு தேவையான மூலப் பொருள்களான ஜிப்சம், நாடியூல்ஸ், உள்ளிட்டவை மாவட்டத்தின் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தோண்டி எடுக்கப்படுகின்றது. சுண்ணாம்புக்கல் முழுவதுமாக எடுக்கப்பட்ட பிறகு கைவிடப்பட்ட சுரங்கங்களை உடனடியாக மூட வேண்டும் என்பது அரசின் விதி. 

ஆனால் இங்குள்ள சில சிமென்ட் ஆலைகள் விதிகளுக்கு மாறாக காலாவதியான சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை மூடாமல் உள்ளன. 

எனவே, அவற்றை உடனடியாக மூடிவிட்டு அங்கு அழகிய பசுமைக் காடுகளை அமைத்து சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க வேண்டும் அல்லது நீர்நிலைகளாக மாற்றப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com