நதிநீர்ப் பிரச்னை பேச்சு: செப். 25-இல் கேரளம் செல்கிறார் முதல்வர் பழனிசாமி

நதிநீர்ப் பிரச்னை பேச்சு: செப். 25-இல் கேரளம் செல்கிறார் முதல்வர் பழனிசாமி

முல்லை பெரியாறு, பரம்பிக்குளம்- ஆழியாறு மற்றும் நெய்யாறு பிரச்சினைகள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் பழனிசாமி, புதன்கிழமை (செப்.25) காலை திருவனந்தபுரம் செல்கிறார்.

முல்லை பெரியாறு, பரம்பிக்குளம்- ஆழியாறு மற்றும் நெய்யாறு பிரச்சினைகள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் பழனிசாமி, புதன்கிழமை (செப்.25) காலை திருவனந்தபுரம் செல்கிறார்.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திய நிலையில், அதை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அத்துடன், பராமரிப்பு பணிக்கான அலுவலர்கள், பணியாளர்களை யும் அணையில் அனுமதிக்க மறுத்து வருகிறது.

இதுதவிர, கடந்த 1970-ஆம் ஆண்டு போடப்பட்ட பரம்பிக்குளம்- ஆழியாறு ஒப்பந்தம் அடுத்த 30 ஆண்டுகளில் அதாவது 2000-ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட வேண்டும். அந்த ஒப்பந்தம் இன்னும் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. இதுதவிர, நெய்யாறு விவகாரமும் இழுபறியாக உள்ளது.

2004-ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் மறைந்த ஜெயலலிதாவும் அப்போதைய கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் சென்னையில் சந்தித்து பேசினர். அதன்பிறகு, கடந்த 2017-ஆம் ஆண்டு செப். 21-ஆம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழகம் வந்து முதல்வர் பழனிசாமியைச் சந்தித்து பேசினார். "இரு மாநில பிரச்சினைகளை பேசி தீர்வு காண்போம்' என்று செய்தியாளர்களிடம் அப்போது தெரிவித்தார்.

இந்நிலையில், முல்லை பெரியாறு, பரம்பிக்குளம்-ஆழியாறு. பாண்டியாறு- பொன்னம்புழா உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு மாநில முதல்வர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதன்படி, செப்டம்பர் 25-ஆம் தேதி திருவனந்தபுரம் தைக்காட்டில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில், கேரள முதல்வர் பினராயி விஜயனை தமிழக முதல்வர் சந்தித்து பேசுகிறார். அண்மையில், தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், கேரள அமைச்சர் கிருஷ்ணன் குட்டியை சந்தித்து பேசினார்.

அப்போது, தமிழகம்- கேரளம் இடையிலான நதிநீர் பிரச்சினை கள் குறித்து எங்கு, எப்போது பேசலாம் என்பது குறித்து முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே தற்போது பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது குறிப் பிடத்தக்கது.
இதற்காக செப்.25-ஆம் தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம், திருவனந்தபுரம் செல்லும் முதல்வர் பழனிசாமி, அங்கு கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்கிறார். முதல்வருடன் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன், தலைமைச் செயலாளர் க. சண்முகம் ஆகியோர் திருவனந்தபுரம் செல்கின்றனர் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com