விக்கிரவாண்டி, நான்குனேரி இடைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

விக்கிரவாண்டி, நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் வரும் அக்டோபர் 21}ஆம் தேதி நடைபெற உள்ள இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (செப். 23) தொடங்குகிறது.
விக்கிரவாண்டி, நான்குனேரி இடைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

விக்கிரவாண்டி, நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் வரும் அக்டோபர் 21}ஆம் தேதி நடைபெற உள்ள இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (செப். 23) தொடங்குகிறது.

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ஹெச்.வசந்தகுமார், மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார். இதனால், அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

அதுபோல, விக்கிரவாண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ராதாமணி, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் காலமானார். 
இதையடுத்து, அந்தத் தொகுதியும் காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

சட்டப்பேரவைத் தொகுதி காலியான தினத்திலிருந்து 6 மாதங்களுக்குள், அவற்றுக்கு இடைத்தேர்தல் நடத்தவேண்டும் என்பது விதி. அதன் அடிப்படையில், நான்குனேரி, விக்கிரவாண்டி இரு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்தது.

இன்று வேட்புமனு தொடக்கம்: இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (செப். 23)தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கு செப்டம்பர் 30 கடைசி நாளாகும். 

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 1}ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்பப் பெற அக்டோபர் 3 கடைசி நாள்.

வாக்குப் பதிவு அக்டோபர் 21}ஆம் தேதி நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் அக்டோபர் 24-இல் எண்ணப்பட உள்ளன என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கட்சி அலுவலகங்களில் விருப்ப மனுக்கள் விநியோகம்: இடைத் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து அதிமுக, திமுக கட்சிகள் விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியுள்ளன. 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டன. விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் திங்கள்கிழமை நேர்காணல் நடத்தப்படுகிறது. நேர்காணல் முடிந்ததும், அன்றைய தினமே இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெயர்களை அதிமுக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுபோல திமுக திங்கள்கிழமை முதல் விருப்ப மனுக்களைப் பெறுகிறது. அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

நான்குனேரி தொகுதியில் போட்டியிட உள்ள திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ் சார்பில், சென்னையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படுகின்றன.

அமமுக, மநீம போட்டியில்லை: விக்கிரவாண்டி, நான்குனேரி தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்ட உடனேயே, இடைத் தேர்தலில் அமமுக போட்டியிடாது என அதன் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டார்.

அமமுக}வைத் தொடர்ந்து, இடைத் தேர்தலில் போட்டியில்லை என்ற அறிவிப்பை கமல்ஹாசன் தலைமையிலான மநீம}வும் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி நான்குனேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளிலும்போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இந்த இடைத் தேர்தலில் மும்முனை போட்டி இருந்தாலும் அதிமுக - திமுக கூட்டணி இடையே நேரடி போட்டி  உள்ளதாகவே அரசியல் விமர்சர்கள் கருதுகின்றனர்.


வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள்    செப்டம்பர் 30
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை    அக்டோபர் 1
வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள்    அக்டோபர் 3
வாக்குப் பதிவு    அக்டோபர் 21
வாக்கு எண்ணிக்கை    அக்டோபர் 24

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com