கர்நாடகத்தில் தமிழ்க் கல்விக்கு கை கொடுக்குமா தமிழக அரசு?

கர்நாடகத்தில் தமிழ்க் கல்வி கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து போகும் ஆபத்தான நிலை உருவாகி வருவது,  தமிழார்வலர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
கர்நாடகத்தில் தமிழ்க் கல்விக்கு கை கொடுக்குமா தமிழக அரசு?

பெங்களூரு: கர்நாடகத்தில் தமிழ்க் கல்வி கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து போகும் ஆபத்தான நிலை உருவாகி வருவது,  தமிழார்வலர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

கர்நாடகத்தில் தமிழ்க் கல்வியைக் காப்பாற்ற தமிழக அரசு உதவி செய்யும் என்ற நம்பிக்கையில் கர்நாடகத் தமிழர்கள் உள்ளனர்.

விடுதலைக்கு முந்தைய ஆங்கிலேயர் இந்தியாவில் சென்னை மாகாணத்தில் அங்கம் வகித்த பெங்களூரு,  கோலார், சாமராஜ்நகர், மண்டியா, மைசூரு தவிர,  தாவணகெரே, சிவமொக்கா, தும்கூரு, சிக்மகளூரு,  மங்களூரு உள்பட பல பகுதிகளில் தமிழர்கள் அதிகளவில் வாழ்ந்து வந்துள்ளனர்.

தமிழர்கள் குடியிருந்து வந்த பகுதிகளில் தாய்மொழியைக் கற்பதற்காக தமிழ்ப் பள்ளிகள் திறக்கப்பட்டன.  இதில் தமிழ்க் குழந்தைகள் ஆர்வமாகப் படித்து வந்துள்ளனர்.

விடுதலைக்குப் பின்னர் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு,  தமிழர்கள் வாழ்ந்த பல பகுதிகள் அன்றைய மைசூரு மாநிலத்தில் (கர்நாடகம்) சேர்க்கப்பட்டுவிட்டன.  ஆனாலும், தமிழ்ப் பள்ளிகள் வழக்கம்போல இயங்க அனுமதிக்கப்பட்டன.  இந்த காலகட்டத்தில் கர்நாடகத்தில் 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகளும், அதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் பயின்று வந்துள்ளனர்.  விடுதலைக்கு பிறகு கிட்டதட்ட 35 ஆண்டுகள் எவ்வித தங்குதடையின்றி தமிழ் வழிக் கல்வி எனப்படும் தமிழர்களின் தாய்மொழிக் கல்வி நீடித்தவண்ணம் இருந்துள்ளன.

1956-இல் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, அன்றைய மைசூரு மாநிலத்தில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்பட்டது. கன்னடம் பயின்றால் மதிப்பெண் குறைவாக கிடைக்கும் என்று கருதி, பெரும்பாலான மாணவர்கள், முதல்மொழியாக வடமொழி (சம்ஸ்கிருதம்), இரண்டாம் மொழியாக ஆங்கிலம், மூன்றாம் மொழியாக இந்தி படிக்கத் தொடங்கினர். கன்னடம் படிக்காமலே கர்நாடகத்தில் முதுநிலை பட்டம் வரை படிக்க முடியும் என்ற நிலை உருவானது. இதை எதிர்த்து கன்னட எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, 1980-களில் மொழிக் கொள்கை குறித்து ஆராய்வதற்காக கன்னடப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் வி.கே.கோகாக் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 1982-இல் அக் குழு அளித்த பரிந்துரையில், கன்னட மொழிக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும், அதற்காக பள்ளிகளில் முதல்மொழியாக கன்னட மொழியைக் கொண்டுவர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. இதற்கு கன்னடம் பேசாத மக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில், கோகாக் குழு அறிக்கையை செயல்படுத்தக் கோரி, நடிகர் ராஜ்குமார் தலைமையில் போராட்டம் வெடித்தது. கோகாக் குழு அறிக்கைக்கு எதிராக தமிழர்கள், மராத்தியர்கள் நடத்திய போராட்டத்தை பொருள்படுத்தாது, அன்றைய குண்டுராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு கோகாக் குழு அறிக்கையை ஏற்றுக்கொண்டு முதல்மொழியாக கன்னட மொழியை அறிவித்தது. இதை கட்டாயக் கன்னடம் என்று கூறினார்கள்.

கோகாக் குழு அறிக்கையைச் செயல்படுத்தக் கோரி நடத்தப்பட்ட போராட்டம், கன்னட மொழிக்கு ஆதரவானதே தவிர, தமிழ் மொழிக்கு எதிரானது அல்ல. கோகாக் குழு அறிக்கை செயல்படுத்தப்பட்டால் தமிழ் மொழிக்கு ஆபத்து நேர்ந்துவிடும் என்று அஞ்சி, தமிழர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு பிறகும், தமிழ்க் குழந்தைகள் முதல் மொழியாக தமிழ், இரண்டாம் மொழியாக ஆங்கிலம், மூன்றாம் மொழியாக கன்னடம் பயில அனுமதிக்கப்பட்டனர். கன்னடர்கள் நடத்திய போராட்டம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு, கர்நாடகத்தில் கன்னடம் படித்தால் தான் வேலை என்ற மாநில அரசின் அறிவிப்பை நம்பி தமிழர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ்மொழியைக் காட்டிலும், கன்னட மொழியைக் கற்பிக்க விரும்பினர்.

இதன் விளைவாக, கர்நாடகத்தில் செயல்பட்டு வந்த தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் மாணவர்களின் வருகை மளமளவென சரியத் தொடங்கியது. மாணவர் பற்றாக்குறையைக் காரணம் காட்டி, தமிழ்ப் பள்ளிகளை வேகவேகமாக கர்நாடக அரசும் மூடிவிட்டது. எஞ்சியிருந்த தமிழ்ப் பள்ளிகளிலும் தமிழ் ஆசிரியர்களை கர்நாடக அரசு நியமிக்கவில்லை. ஒரு பக்கம் தமிழ் மாணவர்கள் இல்லை,  மறுபக்கம் தமிழ் ஆசிரியர்கள் இல்லை என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டி தமிழ்ப் பள்ளிகளுக்கு படிப்படியாக மூடுவிழா நடத்தப்பட்டது.

இப்போது, கர்நாடகத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகளை விரல்விட்டு எண்ணிவிடுமளவுக்கு 100-க்கும் குறைவான பள்ளிகளே  செயல்பட்டு வருகின்றன. அண்மையில் சாமராஜ்நகர் மாவட்டத்தின் நெல்லூர் கிராமத்தில் 1956-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த அரசு ஆரம்ப தமிழ்ப் பள்ளி மூடப்பட்டது.  கடந்த 5 ஆண்டுகளில் பெங்களூரில் மட்டும் பயனிர்சேரிசாலை, பிளாக்பள்ளி, வசந்த்நகர், பிரேசர்டவுன், மாருதி சேவா நகரில் அரசுப் பள்ளிகள், பின்னமங்களா, பிரேசர் டவுன், பெரியார் நகர், அல்சூர், கம்மனஹள்ளி, என்.எஸ்.லேன் பகுதிகளில் தனியார் பள்ளிகள் உள்பட 15 பள்ளிகள்,  குடகு மாவட்டத்தில் 3, சித்ரதுர்கா மாவட்டத்தின் ஹிரியூர் 1, சிவமொக்காவில் 3, பத்ராவதியில் 4, மைசூரில் 2, தென்கன்னட மாவட்டத்தில் 2, சாமராஜநகர் மாவட்டத்தில் 2, பெல்லாரி மாவட்டத்தில் 3 பள்ளிகள் என மொத்தம் 35 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

1980-களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ்க் கல்வியில் பயின்று நிலை மாறி, கடந்த ஆண்டு நடந்த பத்தாம் வகுப்புக்கான தேர்வை எழுதிய தமிழ்வழி மாணவர்களின் எண்ணிக்கை 122-ஆக குறைந்துள்ளது.

"கர்நாடகத்தில் தமிழ்க் கல்வி கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து போகுமோ என்று பதறும் தமிழ் ஆர்வலர்களால் என்ன செய்துவிட முடியும்?  கர்நாடகத்தில் தமிழ் மொழிக்கு மீண்டும் உயிரும் ஊக்கமும் தரமுடியும்.  அதற்கான மருந்தும் விருந்தும் தமிழக அரசிடம் மட்டுமே உள்ளது' என்கிறார் கர்நாடக தமிழ் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் அ.தனஞ்செயன்.

அவர் மேலும் கூறுகையில், "கர்நாடகத்தில் தமிழ்க் கல்விக்கு இதுநாள் வரை ஆதரவளித்து வந்த கர்நாடக அரசு, அண்மைக்காலமாக அந்த ஒத்துழைப்பை அளிக்கத் தவறிவிட்டது. கர்நாடகத்தில் எஞ்சியுள்ள தமிழ்ப் பள்ளிகளையும், இங்குள்ள தமிழர்களிடையே தமிழ்க் கல்வியையும் நிலைக்கவைக்க தமிழக அரசால் மட்டுமே முடியும்.

கர்நாடகத்தில் மட்டுமல்லாது, பிற மாநிலங்களில் எஞ்சியுள்ள தமிழ்ப் பள்ளிகளைக் காக்க தனி ஆணையம் அல்லது வாரியத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும்.

கர்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் தமிழ்ப் பள்ளிகளில் குறிப்பாக 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்க வேண்டும்.  தமிழ் மொழியில் இளநிலை, முதுநிலை, முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களின் முழுக் கல்விச் செலவையும் தமிழக அரசே ஏற்கவேண்டும். கர்நாடகத்தில் தமிழ்ப் பள்ளிகளில் தேவைப்படும் தமிழாசிரியர்களை தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்க வேண்டும். பிற மாநிலங்களில் தமிழ் மொழியில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பில் 2 விழுக்காடு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். பிற மாநிலங்களில் பள்ளிப் படிப்பை பயின்று பட்டம் படிக்க தமிழகம் வந்தால், இலவச கல்வி வழங்க வேண்டும். பிற மாநிலங்களில் எஞ்சியுள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு உள்கட்டமைப்பு வசதியைச் செய்துதர தனி நிதியம் உருவாக்க வேண்டும்.  பிற மாநிலங்களில் தமிழ்ப் பள்ளிகளை தனியார் நடத்த நிதியுதவி வழங்கலாம்.

கர்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் மொழி சிறுபான்மையினராக வாழும் தமிழர்களுக்கு அதற்குண்டான சலுகைகளை வழங்க சம்பந்தப்பட்ட மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்ள வேண்டும்' என்றார் அவர்.பெங்களூரு தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் து.சண்முகவேலன் கூறுகையில், "கர்நாடகத்தில் ஆரம்பக் கல்வியை தமிழ் பயிற்று மொழியில் கற்க வாய்ப்புத் தர வேண்டும். கன்னடம், ஆங்கிலப் பயிற்று மொழியில் பயின்றாலும்,  ஒரு மொழிப் பாடமாக தமிழை கற்க வாய்ப்பு ஏற்படுத்திதர வேண்டும்.  தமிழ் தெரியாத புதிய தலைமுறை உருவாகிவிடக் கூடாது என்பதே நமது நோக்கம்.

இதற்கு தமிழக அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும்.  தமிழக அரசு மனம் வைத்தால், கர்நாடகத்தில் தமிழ்க் கல்வியைக் காப்பாற்ற முடியும்' என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com