கோப்புப் படம்
கோப்புப் படம்

சட்டவிரோத அடுக்குமாடிக் கட்டடங்களை ஏன் இடிக்கவில்லை?: கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

கேரளத்தின் கொச்சி நகரில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட நான்கு அடுக்குமாடிக் கட்டடங்களை இடிக்குமாறு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததற்காக கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்


கேரளத்தின் கொச்சி நகரில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட நான்கு அடுக்குமாடிக் கட்டடங்களை இடிக்குமாறு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததற்காக கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கொச்சி நகரின் மரடு பகுதியில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி நான்கு அடுக்குமாடிக் கட்டடங்கள்  கட்டப்பட்டது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்தக் கட்டடங்களை இடிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. 
அந்தக் கட்டடங்களை இடித்த பின் அது தொடர்பாக ஓர் அறிக்கையை செப். 20-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அவ்வாறு செய்யத் தவறினால் செப். 23-ஆம் தேதி கேரள தலைமைச் செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது. எனினும், இதுவரை அந்தக் கட்டடங்கள் இடிக்கப்படவில்லை.
இந்நிலையில், இந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, வினீத் சரண், எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கேரள தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ் நேரில் ஆஜராகியிருந்தார். அவர் தாக்கல் செய்ய மனுவில், நீதிமன்றத்தின் உத்தரவு பின்பற்றப்படும் என்றும் வெடிகுண்டுகளைக் கொண்டு நான்கு கட்டடங்களையும் இடிப்பதில் நிபுணத்துவம் பெற்ற அமைப்பைத் தேர்வு செய்யும் பணி நடந்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது.
அதைப் பரிசீலித்து நீதிபதிகள் கூறுகையில், மரடு பகுதியில் விதிகளை மீறி நூற்றுக்கணக்கான கட்டடங்கள் கட்டப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இவ்வாறு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால் சுற்றுச்சூழல் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். மேலும், சட்டவிரோதமாக கட்டப்பட்ட நான்கு அடுக்குமாடிக் கட்டடங்களை இதுவரை இடிக்காதது நீதிமன்ற உத்தரவை மீறிய செயல் என்று கேரள தலைமைச் செயலாளர் டாம் ஜோஸுக்கு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். சட்டவிரோத கட்டடங்களால் இயற்கைக்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஆய்வு நடத்துமாறு அவரை அறிவுறுத்தினர். நீதிபதிகள் மேலும் கூறியதாவது:
விதிகளை மீறி கட்டப்பட்ட நான்கு கட்டடங்களையும் இடிக்க எவ்வளவு கால அவகாசம் தேவை என்பது குறித்து தலைமைச் செயலாளர் தனது மனுவில் குறிப்பிடவில்லை. நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக அவர் சிரமத்தை சந்திக்க வேண்டியிருக்கும். இந்தக் கட்டடங்களைக் கட்டுவதற்கு கடலோர மண்டல ஆணையத்திடம் அனுமதி பெறவில்லை. 
இதற்கு யார் பொறுப்பு என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும். மரடு பகுதியானது, அலைகள் உயரமாக எழும்பக் கூடிய கடலோரப் பகுதியாகும். அங்கு நூற்றுக்கணக்கான சட்டவிரோத கட்டடங்கள் எழுப்பப்பட்டுள்ளன என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 
இவ்வழக்கில் வரும் 27-ஆம் தேதி விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அவர்கள் கூறினர்.
உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தைத் தொடர்ந்து, கேரள அமைச்சர் ஏ.சி.மொய்தீன், கொச்சியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாநில அரசு கட்டுப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com