கீழடியில் உலகத் தரமிக்க அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்

மதுரை அருகே உள்ள கீழடியில் உலகத் தரமிக்க அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று தில்லியில் மத்திய கலாசாரம், சுற்றுலாத் துறை
தில்லியில் மத்திய கலாசாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேலை திங்கள்கிழமை சந்தித்து மனு அளித்த தமிழக எம்பிக்கள் கனிமொழி, சு. வெங்கடேசன், கார்த்தி சிதம்பரம்.
தில்லியில் மத்திய கலாசாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேலை திங்கள்கிழமை சந்தித்து மனு அளித்த தமிழக எம்பிக்கள் கனிமொழி, சு. வெங்கடேசன், கார்த்தி சிதம்பரம்.


மதுரை அருகே உள்ள கீழடியில் உலகத் தரமிக்க அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று தில்லியில் மத்திய கலாசாரம், சுற்றுலாத் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) பிரகலாத் சிங் பட்டேலிடம்  தமிழகத்தின் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் எம்.பி.க்கள் திங்கள்கிழமை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். 
தில்லியில் சாஸ்திரி பவனில் உள்ள அமைச்சர் அலுவலகத்தில் அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேலை நாடாளுமன்ற  திமுக குழு துணைத் தலைவர் கனிமொழி, சிவகங்கை  தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்,  மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் ஆகியோர் நேரில் சந்தித்தனர். அப்போது,  கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தல்;  மதுரையில் தொல்லியல் துறை அலுவலகம் அமைத்தல்; கீழடியில் அருங் காட்சியகம் அமைத்தல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை மத்திய அமைச்சரிடம்  அவர்கள் அளித்தனர்.
இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி. கூறியதாவது: கீழடியில் மத்திய அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட  அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த பொருள்களை கரிம வேதியியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட பிறகு,  அது கி.மு. 3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என ஒரு சான்று வழங்கப்பட்டது. அதன் பிறகு தமிழக அரசு மூலம் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த பொருள்கள் மீண்டும் கரிம வேதியியல் பரிசோதனைக்கு அனுப்பட்டன. அதில், கி.மு. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து,  இந்த அகழ்வாராய்ச்சிகள் தொடர வேண்டும் என மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினோம்.
அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட உத்தரப் பிரதேச மாநிலம்,  சனோவ்லி என்கிற இடம் பாதுகாக்கப்பட்ட  பகுதியாக  மத்திய அரசு அறிவித்துள்ளது.  அதேபோன்று, கீழடி பகுதியையும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகஅறிவிக்கவும்,   மதுரையில் தொல்லியல் துறைக்கான தனி மையம்,  கீழடியில் உலகத் தரத்திலான ஓர் அருங்காட்சியகம் ஆகியவற்றை  அமைக்கவும் அமைச்சரிடம் வலியுறுத்தினோம்.  
அவரும் தமிழக அரசிடமிருந்து கோரிக்கை வந்த பிறகு, மாநில அரசு நிலம் தருவதாக இருந்தால், நிச்சயமாக  கீழடியில்அருங்காட்சியகம் அமைக்க முடியும் என உறுதியளித்துள்ளார். மேலும்,  கீழடியில் அகழ்வாராய்ச்சிப் பணிகளைப் பார்வையிட உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
கீழடியில் தமிழ் நாகரிகம் குறித்த சில முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன.அன்றைய காலத்தில் விவசாயம் முக்கியத் தொழிலாக இருந்துள்ளதாகக் கண்டுபிடிப்பு வெளி வந்துள்ளது.  அகழ்வாராய்வு என்பது மனம் போன போக்கில் முடிவெடுக்கும் விஷயமல்ல. அறிவியல் அடிப்படையிலான கண்டுபிடிப்பாக அதன் கால மதிப்பீட்டை வெளியிடுகின்றனர் என்றார் கனிமொழி. 
மதுரை எம்.பி.  சு.வெங்கடேசன்  கூறுகையில், கீழடியில் முதல் மூன்று ஆண்டுகளாக மத்திய தொல்லியில் துறை அகழ்வாராய்வை மேற்கொண்டது. அதன்பிறகு கைவிட்டது. அதைத் தொடர்ந்து, நான்காம் ஆண்டு அகழாய்வை  தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டு அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் மிகப் பண்பட்ட ஒரு நாகரிகத்தின் கட்டுமானம்  நான்காவது கட்ட அகழாய்வில் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கே உள்நாட்டு,  வெளிநாட்டு வணிகம் நடைபெற்றதாகவும், எழுத்தறிவு பெற்ற சமூகமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
மேலும், கி.மு. ஆறாம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்தது என்பதும் கரிம வேதியியல் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.  வட  இந்தியாவில் கங்கைச் சமவெளியில் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் நகர நாகரிகம் செழித்திருந்ததாக இதுவரை கூறப்பட்டது.  ஆனால்,  அதே காலத்தில் தென்னிந்தியாவில் ஒரு செழித்தோங்கிய நாகரிகம் இருந்தது தற்போது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.  கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும், சங்ககால வாழ்விடப் பகுதியாகவும்  மத்திய அரசு  அறிவிக்கவும்,  மதுரையை மையமாகக் கொண்டு தொல்லியல் துறையின் மற்றொரு கோட்டத்தை அமைக்கவும் அமைச்சரிடம்  கோரியுள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com