ரஜினிகாந்த் கட்சி தொடங்குவாரா? பிரசாந்த் கிஷோருடன் ரஜினி பேசியது என்ன?

ரஜினிகாந்த் விரைவில் தனிக்கட்சி தொடங்குவார். நடைபெறவிருக்கும் 2021 பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு அரசியல்
ரஜினிகாந்த் கட்சி தொடங்குவாரா? பிரசாந்த் கிஷோருடன் ரஜினி பேசியது என்ன?

ரஜினிகாந்த் விரைவில் தனிக்கட்சி தொடங்குவார். நடைபெறவிருக்கும் 2021 பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்துவார் என்று அவப்போது தமிழக அரசியல் கள நிலவரத்துக்கு தலைப்பு செய்தியாகி வரும் ரஜினிகாந்த், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை மும்பையில் சந்தித்து பேசியதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சி தொடங்கி போட்டியிடுவார் என்று அறிவித்துள்ள நிலையில், தேர்தல் வியூக நிபுணராக இருக்கும் பிரசாந்த் கிஷோரை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வியூக நிபுணர்கள் என்று அழைக்கப்படும் ஸ்டாட்டர்ஜிஸ்ட்களின் கருத்துகள் தற்போது அனைத்து துறைகளிலும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அமெரிக்க தேர்தல்களில் இருந்து உள்ளூர் தேர்தல் வரை இந்த ஸ்டாட்டர்ஜிஸ்ட்களின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது.

இந்தியாவின் முக்கியமான தேர்தல் வியூக நிபுணராக கருதப்படுபவர் பிரசாந்த் கிஷோர். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவை தேர்தலின் போதும், 2014 இல் நடைபெற்ற 16வது மக்களவைத் தேர்தலின் போதும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் பாஜக ஆட்சியை அதிகாரத்தில் அமைவுதற்காக பணியாற்றினார். குஜராத் கலவரத்தின் கறைகள் ஒட்டியிருந்த மோடியின் முகத்தை, சமூக ஊடகங்கள், விளம்பரங்கள் என்று ‘மோடியே இந்தியாவின் மீட்பர்’ என்ற உச்சத்திற்கு வியூகங்கள் வகுத்து அவரது முகத்தை வேறு விதமாக நாட்டு மக்களுக்கு காட்டியதுடன், 2014 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிப்பதற்கு பிரமாண்ட வெற்றிக்கு வித்திட்டவர் பிரசாந்த்.

குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் பாஜக 82 தொகுதிகளை வென்றது. இதனை அடுத்து, பீகார் சட்டசபை தேர்தலில், நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்காக பணியாற்றிய பிரசாந்த் அங்கும் வெற்றியை தேடிக் கொடுத்தார்.

யானைக்கும் அடிச்சறுக்கும்: பிரசாந்த் தேர்தல் வியூக திட்டத்தில் உத்தரப்பிரதேசத்தில் 82 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றதும், பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்காக சமயோசிதமாக திட்டமிட்டு வெற்றியை தேடித் தந்த பிரசாந்த், 2017 உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றிய பிரசாந்த்துக்கு யானைக்கும் அடிச்சறுக்கும் என்ற பழமொழிக்கேற்ப காங்கிரஸ் தோல்வியையே சந்தித்தது. இருப்பினும் தேர்தல் காலத்தில் பிரியங்கா காந்தியை காங்கிரசின் தலைவராக்க வேண்டும் என்ற அவரது கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

2019 ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்,எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, தங்களுக்காக பணியாற்றுமாறு பிரசாந்த் கோரிக்கை விடுக்க, அதனை தட்டாமல் ஏற்றுக்கொண்ட பிரசாந்த் தேர்தல் கள வியூகம் வகுத்து 175 இடங்களில் 151 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் அமருவதற்கு பிரசாந்த்தின் தேர்தல் வியூகமே முக்கியமாக பேசப்படுகிறது. 

அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் பிரசாந்த்தின் மதிப்பு உயர்ந்து வரும் நிலையில், மேற்கு வங்கத்தில் பாஜகவின் எழுச்சியால் ஆட்டம் கண்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜியும் 2021 தேர்தல் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தற்போது பிரசாந்த் கிஷோருடன் கைகோர்த்துள்ளார். 

இந்நிலையில், விரைவில் தனிக்கட்சி தொடங்குவார். நடைபெறவிருக்கும் 2021 பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்துவார் என்று அவப்போது தமிழக அரசியல் கள நிலவரத்துக்கு தலைப்பு செய்தியாகி வரும் ரஜினிகாந்த், பிரசாந்த் கிஷோரை மும்பையில் சந்தித்து பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2021 தேர்தலில் முழு வீச்சாக இறங்க உள்ள ரஜினிகாந்த், விரைவில் கட்சியை அறிவிக்க உள்ளார். இதற்காக, பிரசாந்த் சில ஆலோசனைகளை வழங்கியதாகவும், தமிழக அரசியல் கட்சிக்கும், தலைமைக்கும் உள்ள செல்வாக்கு குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ரஜினியின் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து கேலியும் கிண்டலுமாக பேசப்பட்டு வந்தாலும், தற்போது ரஜினிகாந்த் அரசியல் தொடங்குவதற்காக முக்கிய பிரமுகர்களுடன் ரகசியமாக ஆலோசனை நடத்தி வந்தாலும், அரசியல் கட்சிகளின் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தியிருக்கும் தகவல்கள் மூலம் ஆனந்தம் அடைந்திருக்கும் அவரது ரசிகர்கள், தொண்டர்களாக 2021 பேரவைத் தேர்தல் களத்துக்கு அழைக்கப்படுவார்களா? அல்லது காத்திருப்பு தொடருமா? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

எது எப்படியோ தமிழக அரசியல் களத்திலும் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் செல்வாக்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com