பருவமழையை எதிர்கொள்ள ரூ.38.52 கோடிக்கு நவீன கருவிகள்: முதல்வர் பழனிசாமி உத்தரவு

வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ள ரூ.38.52 கோடி செலவில் நவீன கருவிகளை வாங்குவதற்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 
வடகிழக்குப் பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில்  நடைபெற்ற  ஆய்வுக்கூட்டம். 
வடகிழக்குப் பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில்  நடைபெற்ற  ஆய்வுக்கூட்டம். 


வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ள ரூ.38.52 கோடி செலவில் நவீன கருவிகளை வாங்குவதற்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 
வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக, முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் பழனிசாமி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதன் விவரம்:
மழைக் காலங்களில் விழும் மரங்களை உடனடியாக அகற்றத் தேவையான ஆள்கள், மரம் அறுக்கும் இயந்திரங்களையும், மழை நீர் தேங்கும் இடங்களில் நீரை வெளியேற்ற மின் மோட்டார்களையும் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். மீட்புக் குழுக்கள் குறுகிய கால அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சென்றடைய ஏதுவாக தேவையான கருவிகளுடன் தயாராக இருக்க வேண்டும்.
இருப்பில் மருந்துகள்: வடகிழக்குப் பருவமழையின் காரணமாக தொற்று நோய் ஏதும் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போதுமான அளவில் பிளீச்சிங் பவுடர், மற்ற பொருள்கள், மருந்துகளை இருப்பில் வைக்க வேண்டும். தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதுடன், போதுமான மருந்துகளையும் வைத்திருக்க வேண்டும்.
பேரிடர் காலங்களில் பற்றாக்குறையைத் தவிர்க்கும் வகையில், இரண்டு மாத காலத்துக்குத் தேவைப்படும் அத்தியாவசியப் பொருள்கள் நியாய விலைக் கடைகளில் போதுமான அளவில் இருப்பில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழைக்கான முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் தலைமையில் உடனடியாக மத்திய-மாநில அரசுத் துறைகள் மற்றும் முப்படையைச் சேர்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டத்தை நடத்த வேண்டும்.
அனைத்து மாவட்டங்களிலும், பெருநகர சென்னை மாநகராட்சியிலும் பேரிடர் காலங்களில் கண்காணிப்பு மற்றும் அறிவுரைகள் வழங்குவதற்காக நியமனம் செய்யப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நிலையிலான கண்காணிப்பு அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வரும் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து மேற்கொள்ள வேண்டும்.
நிதி ஒதுக்கீடு: வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் உயிர்ச் சேதத்தையும், பொருள் சேதத்தையும் குறைக்க அனைத்து துறைகளைச் சேர்ந்த செயலாளர்களும், துறைத் தலைவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையை வலுப்படுத்துவதற்காக கூடுதல் உபகரணங்கள், சிறப்புக் கருவிகள் வாங்குவதற்காக ரூ.30.27 கோடியும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு நவீன கருவிகள் வாங்குவதற்காக ரூ.7.25 கோடியும், மீன்வளத் துறையின் பயன்பாட்டுக்கு கருவிகள் வாங்க ரூ.1 கோடியும் என மொத்தம் ரூ.38.52 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம், உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, வருவாய் நிர்வாக ஆணையர் கொ.சத்யகோபால், காவல் துறை தலைமை இயக்குநர் ஜே.கே.திரிபாதி, நிதித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com