கனிமொழி எம்.பி.க்கு எதிரான வழக்கு: தெலங்கானா ஆளுநர் தமிழிசை மனு

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க கோரி தொடர்ந்துள்ள வழக்கை வாபஸ் பெற அனுமதி கோரி, தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மனு தாக்கல்
கனிமொழி எம்.பி.க்கு எதிரான வழக்கு: தெலங்கானா ஆளுநர் தமிழிசை மனு


தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க கோரி தொடர்ந்துள்ள வழக்கை வாபஸ் பெற அனுமதி கோரி, தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மனு தாக்கல் செய்துள்ளார். 
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழிசை செளந்தரராஜன் தாக்கல் செய்திருந்த மனுவில்,  தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழியும், பாஜக சார்பில் நானும் போட்டியிட்டோம். கனிமொழி 3.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி தாக்கல் செய்த வேட்புமனுவில் ஏராளமான குறைபாடுகள் இருந்தன. அவரது வேட்புமனு முறையாக தாக்கல் செய்யப்படவில்லை. கனிமொழி தனது கணவர், மகன் ஆகியோரை சிங்கப்பூர் குடிமக்கள் எனவும், அவர்களது வருமான விவரங்களை குறிப்பிடத் தேவையில்லையென்றும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். 
மேலும், தேர்தல் பரப்புரையின் போது கனிமொழிக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. இதுதொடர்பான விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியது. 
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. 
எனவே கனிமொழி பெற்ற வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும்ட என கோரியிருந்தார். 
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம், தேர்தல் அதிகாரி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்திருந்தது. 
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழிசை செளந்தரராஜன் தரப்பில், தமிழிசை செளந்தரராஜன் தற்போது ஆளுநராக பதவி வகிப்பதால், அவர் தொடர்ந்துள்ள வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. 
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக முறைப்படி உரிய நோட்டீஸை அரசிதழில் வெளியிட உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் அக்டோபர் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com