தில்லியில் சர்வதேச திருக்குறள் மாநாடு தொடங்கியது: 10 நாடுகளில் இருந்து அறிஞர்கள் பங்கேற்பு

மூன்றாவது சர்வதேச திருக்குறள் மாநாடு திங்கள்கிழமை தில்லியில் தொடங்கியது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டை தமிழக தமிழ் வளர்ச்சி, கலாசாரம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர்
தில்லியில் திங்கள்கிழமை தொடங்கிய மூன்றாவது சர்வதேச திருக்குறள் மாநாட்டில் உலக நூல் திருக்குறள் எனும்  நூலை வெளியிடுகிறார்  தமிழக அமைச்சர் க. பாண்டியராஜன். 
தில்லியில் திங்கள்கிழமை தொடங்கிய மூன்றாவது சர்வதேச திருக்குறள் மாநாட்டில் உலக நூல் திருக்குறள் எனும்  நூலை வெளியிடுகிறார்  தமிழக அமைச்சர் க. பாண்டியராஜன். 


மூன்றாவது சர்வதேச திருக்குறள் மாநாடு திங்கள்கிழமை தில்லியில் தொடங்கியது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டை தமிழக தமிழ் வளர்ச்சி, கலாசாரம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தொடக்கி வைத்தார்.
10 நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
மோரீஷஸ் சர்வதேச திருக்குறள் பவுண்டேசன் மற்றும் சென்னை ஆசியவியல் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் இந்த மாநாடு, தில்லி சாணக்கியபுரியில் உள்ள யுனெஸ்கோ கலையரங்கில் நடைபெறுகிறது. யுனெஸ்கோவின் முன்னாள் இயக்குநரும், மோரீஷஸ் சர்வதேச திருக்குறள் பவுண்டேசனின் தலைவருமான ஆறுமுகம் பரசுராமன் வரவேற்றுப் பேசினார். திருக்குறள் மாநாட்டின் நோக்கம் குறித்து சென்னையில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தின் நிறுவனரும், இயக்குநருமான டாக்டர் ஜி. சாமுவேல் விரிவாக எடுத்துரைத்தார்.
 உலக நூல் திருக்குறள் எனும் நூலை தமிழக அமைச்சர் கே. பாண்டியராஜன் வெளியிட்டுப் பேசுகையில், தமிழின் பெருமையை உலகுக்கு பறைசாற்றும் வகையில் திருக்குறள் திகழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த நூலை உலக நூலாக அறிவிக்கச் செய்யும் நடவடிக்கையில் இதுபோன்ற மாநாடுகள் நடத்தப்படுவது மிக்க மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது. அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவை குறித்து திருக்குறள் அழகாக விவரிக்கிறது. மனித வாழ்க்கை செம்மையுற அமைத்துக் கொள்வதற்கான வழிகாட்டியகாவும் திகழ்கிறது. உலகில் உள்ள தொன்மையான மொழிகளில் ஒன்றாகத் தமிழும் உள்ளது. உலகின் தொன்மையான நாகரிகம் இருந்ததற்கான சான்றுகள் தமிழகத்தில் மதுரை அருகே கீழடியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி மூலம் தெரிய வந்திருக்கிறது. இதனால், அதன் சிறப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்றார்.
கீழடி எனும் ஆய்வு விவர நூலை நிகழ்ச்சியில் பங்கேற்ற யுனெஸ்கோவின் இயக்குநர் டாக்டர் எரிக் ஃபால்ட்டிடம் அமைச்சர் கே. பாண்டியராஜன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் டாக்டர் எரிக் ஃபால்ட் பேசுகையில், உலக அமைதி, நல்லிணக்கம் எனும் பொருளை அடிப்படையாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த இரு நாள் மாநாட்டில் அமைதி, நல்லிணக்கத்திற்கான பல்வேறு அரிய கருத்துகள் பகிரப்பட வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் ஹாங்காங்கில் உள்ள நல்லிணக்கம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான சர்வதேச நிறுவனத்தின் தலைவரும், சீனாவைச் சேர்ந்தவருமான டாக்டர் டி.டபிள்யு. என்ஜி. டென்னிஸ் அளித்த வாழ்த்துரையில், எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை நினைத்துப் பெருமை கொள்கிறேன். இந்தியா ஓர் அழகான இடம். 
எனக்கு நிறைய இந்திய நண்பர்கள் நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க விரும்புகிறேன். குறிப்பாக பரஸ்பரம் உதவுபவர்களாகவும், ஒற்றுமைக்கு குரல் கொடுப்பவர்களாகவும் நட்பைப் பாராட்ட விரும்புகிறேன் என்றார்.
 சென்னை விஜிபி குழும நிறுவனத்தின் தலைவர் விஜி. சந்தோஷம், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹெச்.எஸ். சிவபிரகாஷ் உள்ளிட்டோர் பேசினர். 
பிற்பகலில் மாநாட்டின் மூன்று அமர்வுகள் இடம் பெற்றன. அதில் திருக்குறள், அதன் சிறப்பு குறித்து கட்டுரை வாசிக்கப்பட்டது. மாநாட்டின் முதலாவது அமர்வுகள் டாக்டர் பி.மருதநாயகம் தலைமையில் நடைபெற்றது. ஹாங்காங்கைச் சேர்ந்த டாக்டர் கிரேகரி ஜேம்ஸ், சீனாவைச் சேர்ந்த டாக்டர் டென்னிஸ் உள்ளிட்டோர் திருக்குறள் தொடர்புடைய பல்வேறு தலைப்புகளில் கட்டுரை வாசித்தனர். இதைத் தொடர்ந்து, ú மலும், இரு அமர்வுகள் நடைபெற்றன.
மாநாட்டில் சீனா, ஆஸ்திரேலியே ô, மலேசியா, கனடா உள்பட 10 நாடுகளில் இருந்து ஏராளமான அறிஞர்கள் பங்கேற்றனர். தில்லி பல்கலைக்கழக தமிழ்த் துறைப் பேராசிரியை உமா தேவி, தில்லி தமிழ்ச் சங்கப் பொதுச் செயலாளர் இரா.முகுந்தன் மற்றும் தில்லி தமிழ் அமைப்பினர் பங்கேற்றனர். தேசிய சித்தா நிறுவனத்தின் அறிவியல் ஆலோசனைக் குழுத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் நன்றி கூறினார். இதேபோன்று, செவ்வாய்க்கிழமையும் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பல்வேறு கருத்தரங்கு அமர்வுகள் இடம் பெறவுள்ளன.
வரலாற்றுப் பதிவு!
இந்த மாநாடு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் தமிழக அமைச்சர் பாண்டியராஜன் கூறுகையில், திருக்குறளை உலக நூலாக ஐ.நா. சபையில் அங்கீகரிக்கக் கோரி இந்த மாநாடு நடைபெறுகிறது. முதல் மாநாடு தமிழகத்திலும், இரண்டாவது மாநாடு லண்டன் அருகில் லிவர்பூலிலும், மூன்றாவது மாநாடு தில்லியிலும் தற்போது நடைபெறுகிறது. நான்காவது மாநாடு பாரீஸில் நடைபெறவுள்ளது. உலகின் உன்னத நினைவுகள், உலகின் பாரம்பரியங்கள் எனும் தலைப்பின் கீழ் திருக்குறள் நூலுக்கு அங்கீகாரம் கிடைக்க தமிழக அரசு பெரும் முயற்சி எடுத்து வருகிறது. இதுபோன்ற அமைப்புகள் மாநாடுகளை நடத்துவது பாராட்டுக்குரியது. இந்த மாநாடு முக்கியமான வரலாற்றுப் பதிவாக அமையும் என நம்புகிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com