தமிழக முதல்வர் பழனிசாமி
தமிழக முதல்வர் பழனிசாமி

அதிமுகவுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபித்துக் காட்டுவோம்: சொன்னவர்?

அதிமுகவுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்பதை தேர்தலில் நிரூபித்துக் காட்டுவோம் என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை:  அதிமுகவுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்பதை தேர்தலில் நிரூபித்துக் காட்டுவோம் என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இன்று காலை கேரளா செல்ல சென்னை விமான நிலையம் வந்த முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளும் முதல்வர் அளித்த பதிலும்..

நீண்ட நாட்களாக இருக்கின்ற பரம்பிக்குளம்-ஆழியாறு நீர் பங்கீடு குறித்து பேசுவதற்காகவும், பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தைப் பற்றிப் பேசுவதற்காகவும், அதோடு நீராறு, நல்லாறு திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டுமென்பது குறித்தும், நெய்யாறு திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதற்காகவும், செண்பகவல்லி நீரமைப்புப் பாதையை சீரமைக்க வேண்டும் போன்ற பல்வேறு நீர்ப் பங்கீடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இன்றையதினம்  கேரள முதலமைச்சரை சந்தித்துப் பேச உள்ளேன்.

கேள்வி: குமரி மாவட்டத்திற்கு நொய்யாறு அணையிலிருந்து வழங்கப்பட்டு வந்த தண்ணீர் 15 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது, அதைப் பற்றியும் பேச்சுவார்த்தை நடக்குமா?


பதில்: ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த நீர் 2004ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டுமென்று அவரிடத்திலே கலந்து பேசி ஒரு நல்ல முடிவு எட்டுவதற்கான சூழ்நிலை உருவாகும்.

கேள்வி: தண்ணீர் பிரச்னை குறித்து ஏற்கனவே ஆந்திர மாநில அரசுடன் பேசினீர்கள், இப்பொழுது கேரள அரசுடன் பேசப் போகிறீர்கள், அண்டை மாநிலங்களுடன் இதற்கான நட்புறவு இன்னும் மேம்படுத்தப்படுமா?
தமிழகத்திற்குத் தேவையான உதவிகள் கிடைக்குமா?


பதில்: அண்டை மாநிலத்தோடு நல்லுறவு இருக்கின்ற காரணத்தினால்தான், கிருஷ்ணா நீர் இன்றைக்கு திறக்கப்படவிருக்கின்றது. ஆந்திர முதலமைச்சர் அவர்கள் தமிழக அரசினுடைய கோரிக்கையை ஏற்று, சென்னை மாநகர மக்களுடைய குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக இன்றையதினம் கண்டலேறு அணையிலிருந்து தண்ணீரை திறக்கவிருக்கின்றார்கள். அதேபோல, கேரளாவிற்கும், தமிழகத்திற்கும் உள்ள நீர் குறித்து பேசுவதற்காக இன்றைக்கு கேரளா செல்கின்றேன், நேரடியாக பேசி ஒரு நல்ல தீர்வு காணப்படும். 

கேள்வி: 19 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் மீண்டும் கேரளா செல்கிறார், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வின் மூலமாக கேரளா, தமிழ்நாடு ஆகிய இருமாநிலங்களுக்கு இடையிலான உறவு மேம்படுமா?

பதில்: நல்ல உறவு இருக்கின்ற காரணத்தினால்தான் நாங்கள் செல்கின்றோம். இது தமிழக விவசாயிகள், கேரள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் நலம் பெற வேண்டும் என்பதற்காக இந்தப் பேச்சுவார்த்தையை இரு மாநில முதலமைச்சர்களும் தொடங்கவிருக்கிறோம்.

கேள்வி: காவேரி பிரச்சினைக்குத் தீர்வு காண வசதியாக கர்நாடக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

பதில்: ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பைக் கொடுத்துவிட்டது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அரசு நடந்துகொள்ள வேண்டும். அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசால் குழு அமைக்கப்பட்டு அதனடிப்படையில் மாதாந்திரவாரியாக நமக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

கேள்வி: இந்த இடைத் தேர்தல் அதிமுக தலைமைக்கு சவாலாக இருக்குமா? 
 

பதில்: சவாலாக இல்லை. நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலிலும், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும், இது உறுதி.

கேள்வி: வரவிருக்கின்ற இடைத்தேர்தலில் உங்கள் வெற்றி வாய்ப்பு...

பதில்: நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தல் வந்திருக்கிறது, அதை நீங்கள் விட்டுவிட்டீர்கள். வேலூர் நாடாளுமன்றத் தேர்தலிலே எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஏற்கனவே நாங்கள் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பல தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கின்றோம், அதைவிடக் கூடுதலான வாக்குகள் வித்தியாசத்தில் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று சூளுரைத்தார்.

அதற்கு நேர்மாறாக மக்கள் தீர்ப்பளித்தார்கள், ஆனால் வெறும் 8,080 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார்கள். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளடங்கியுள்ளது. அதில் மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கின்றனர். குறிப்பாக, குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலுடன் நடைபெற்றது. அப்பொழுது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக போட்டியிட்ட வெற்றி பெற்ற வேட்பாளர் 28,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பிறகு நாடாளுமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் நடைபெற்ற போது, ஏறக்குறைய 12,000 வாக்குகள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார். அப்படியென்றால், ஏறக்குறைய இரண்டே மாதத்தில் மக்களுடைய மனநிலை எவ்வாறு மாறியிருக்கின்றது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். அதுமட்டுமல்ல, நாடாளுமன்ற பொதுத் தேர்தலின்போது, திட்டமிட்டு பொய்யான வாக்குறுதிகளை வாரியிறைத்தன் மூலமாக மக்களிடத்திலே வாக்குகளை பெற்றார். தேர்தல் முடிந்தபிறகு, உண்மை நிலவரம் மக்களுக்குப் புரிந்துவிட்டது, அதனால் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அது பிரதிபலித்ததை நாம் பார்த்தோம்.

கேள்வி: இந்தத் தேர்லில் திமுக-விற்கு பெரிய  set back என்று நினைக்கிறீர்களா?

பதில்: பின்னடைவு இருக்கிறதோ, இல்லையோ, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்பதை இந்தத் தேர்தலின் மூலமாக நிரூபித்துக் காட்டுவோம் என்று முதல்வர் பழனிசாமி பதிலளித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com