கேரள-தமிழக முதல்வர்கள் இன்று பேச்சுவார்த்தை

இரு மாநில நதிநீர் பிரச்னைகள் குறித்து கேரள, தமிழக முதல்வர்கள் புதன்கிழமை (செப். 25) முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர். 
கேரள-தமிழக முதல்வர்கள் இன்று பேச்சுவார்த்தை

இரு மாநில நதிநீர் பிரச்னைகள் குறித்து கேரள, தமிழக முதல்வர்கள் புதன்கிழமை (செப். 25) முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர். 

கேரள மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்தில் பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க புதன்கிழமை காலை சென்னையில் இருந்து புறப்படுகிறார், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம், பாண்டியாறு-புன்னம்புழா திட்டம் போன்ற முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், பம்பா-அச்சன்கோயில் நதிநீர் இணைப்புத் திட்டம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம்: பரம்பிக்குளம் மற்றும் அதன் கிளை நதியான ஆழியாறில் கிடைக்கக் கூடிய நீரைப் பயன்படுத்தும் வகையில் கேரள அரசின் ஒப்புதலுடன், தமிழக அரசால் இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த நதிகளில் இருந்து கிடைக்கக் கூடிய நீரை இரு மாநிலங்களின் தேவைகளுக்கு பயன்படுத்தும் வகையில் 1958-இல் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இதன்மூலம், கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம் ஆகியன பயன்பெறுகின்றன. இந்த ஒப்பந்தம், ஒவ்வொரு 30 ஆண்டுகளுக்குப் பிறகும் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். அதன்படி, கடந்த 1988-ஆம் ஆண்டு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தம், 1989-ஆம் ஆண்டு செப்டம்பர் 21-இல் பரிமாற்றம் செய்யப்பட்டன. இதன்பின், இந்த ஒப்பந்தங்களில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள், திருத்தங்கள் ஆகிய குறித்து 2002-ஆம் ஆண்டு அமைச்சர்கள் நிலையிலும், 2011-ஆம் ஆண்டில் தலைமைச் செயலாளர்கள் நிலையிலும் கூட்டங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு சாத்தியக்கூறு அறிக்கையை தமிழக அரசுக்கு கேரள அரசு அனுப்பியது. 

கடந்த 1989-ஆம் ஆண்டு பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட ஒப்பந்தமானது, ஏற்கெனவே திட்டமிட்டபடி 30 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது மீண்டும் புதுப்பிக்கப்படவுள்ளது. திருவனந்தபுரத்தில் புதன்கிழமை நடைபெறும் இந்த நிகழ்வில் இரு மாநில முதல்வர்கள் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுகிறது.

மேலும், கேரளத்தில் உள்ள பம்பா-அச்சன்கோவில் ஆறுகளின் மிகை நீரை தமிழகத்துக்குத் திருப்பும் திட்டத்துக்கான ஒப்புதலை தமிழக அரசு கடந்த 1995-ஆம் ஆண்டு வழங்கியது. இதற்கு கேரள அரசு ஆதரவாக இல்லை. இந்தத் திட்டம் குறித்தும் கேரள முதல்வருடனான சந்திப்பின் போது, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தவுள்ளார்.

பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தின் இப்போதைய ஒப்பந்தப்படி, சோலையாறு மற்றும் ஆழியாறு அணைகளில் இருந்து கேரளத்துக்கு 19.55 டி.எம்.சி. நீரும், தமிழகத்துக்கு 30.5 டி.எம்.சி. நீரும் கிடைக்கப்பெறும். திருவனந்தபுரத்தில் நடைபெறும் கூட்டத்தில் புதுப்பிக்கப்படும் ஒப்பந்தங்களில் எத்தகைய மாற்றங்கள் செய்யப்பட இருக்கின்றன என்பது குறித்து கூட்டத்தில்தான் தெரிய வரும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தக் கூட்டமானது, இரு மாநிலங்களுக்கும் பயனளிக்கக் கூடிய வகையில் இருக்கும் என பொதுப்பணித் துறை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. தமிழகத்தின் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.சி.கருப்பணன், பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்கவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com