ரௌடி மணிகண்டன் என்கவுண்டர்: தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 

சென்னையில் செவ்வாயன்று விழுப்புரம் ரௌடி மணிகண்டன் போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விழுப்புரம் ரௌடி மணிகண்டன்
விழுப்புரம் ரௌடி மணிகண்டன்

சென்னை: சென்னையில் செவ்வாயன்று விழுப்புரம் ரௌடி மணிகண்டன் போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே உள்ள குயிலாப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரௌடி தாதா அ.மணிகண்டன் (39). இவர் மீது 8 கொலை வழக்குகள் உள்பட 27 வழக்குகள் உள்ளன. 

இவரது  கும்பலுக்கும், அதே மாவட்டத்தைச் சேர்ந்த பூபாலன் என்பவரின் கும்பலுக்கும் இருக்கும் முன்விரோதத்தின் காரணமாக சுமார் 20 பேர் கொலை செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், தாதா மணிகண்டன் மீதுள்ள ஒரு குற்ற வழக்குகள் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட போலீஸார் தேடி வந்தனர். ஆனால் மணிகண்டன் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் மணிகண்டன், சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் டபிள்யூ பிளாக் சி செக்டார் 4ஆவது தெருவில் குடும்பத்துடன் வசிப்பதாக விழுப்புரம் மாவட்ட போலீஸாருக்கு ரகசியத் தகவவல் கிடைத்தது.

அத் தகவலின் அடிப்படையில் ஆரோவில் காவல் உதவி ஆய்வாளர் பிரபு, தனிப்படை ஆய்வாளர் பிரகாஷ் உள்பட 7 போலீஸார் மணிகண்டனை கைது செய்வதற்காக சென்னை வந்தனர்.  அங்கு மணிகண்டன் தங்கியிருந்த வீட்டை செவ்வாய்க்கிழமை இரவு சுற்றி வளைத்தனர். இதைத் தொடர்ந்து, மணிகண்டனை கைது செய்ய அவரது வீட்டுக்குள் சென்றனர். போலீஸார் தனது வீட்டை சுற்றி வளைத்துவிட்டதை அறிந்த மணிகண்டன், வீட்டுக்குள் பட்டா கத்தியுடன், காவலர்களை தாக்க தயாராக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதில் வீட்டுக்குள் முதலில் சென்ற காவல் உதவி ஆய்வாளர் பிரபுவை மணிகண்டன், பட்டாக் கத்தியால் வெட்டினார்.  இதில் பிரபுவின் தலைப்பகுதியில் வெட்டு விழுந்ததால், அவர் மயங்கி கீழே விழுந்தார். இதைப் பார்த்த மற்றொரு காவல் உதவி ஆய்வாளர் பிரகாஷ், மணிகண்டனை தடுக்க முயன்றார். ஆனால் அவரையும் மணிகண்டன் வெட்ட முயன்றார்.

இதையடுத்து பிரகாஷ், தான் கையில் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் மணிகண்டனை நோக்கி இருமுறை சுட்டார். இதில் மார்பு பகுதியில் இரு துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்ததால், மணிகண்டன் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்தார்.  உடனே போலீஸார் பலத்தக் காயமடைந்த  உதவி ஆய்வாளர் பிரபு, தாதா மணிகண்டன் ஆகியோரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மணிகண்டனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அதேவேளையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரபு அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

மேலும் அந்தப் பகுதியில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதி பெரும் பரபரப்புடன் காணப்பட்டது. இச் சம்பவம் குறித்து கொரட்டூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  அதேவேளையில் இச் சம்பவம் தொடர்பாக நீதித்துறை நடுவர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்காப்புக்காகவே தாதா மணிகண்டன் மீது போலீஸார் துப்பாக்கியால் சுட்டதாக விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

இந்நிலையில் ரௌடி மணிகண்டன் போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னையில் 4 மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக என்கவுண்டர் சம்பவம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com