ரூ.186 கோடியில் கடலோரக் காவல் படைக்கு புதிய ரோந்து கப்பல் 'வராஹ'

காட்டுப்பள்ளி எல் அன் டி கப்பல் கட்டும் தளத்தில் ரூ.186 கோடியில்  கட்டப்பட்ட கடலோரக் காவல்படை ரோந்து கப்பலான "வராஹ' வை பாதுகாப்புத்துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங் புதன்கிழமை சென்னையில் நடைபெற்ற
கம்பீரமாக நிற்கும் 'வராஹ' ரோந்து கப்பல்.
கம்பீரமாக நிற்கும் 'வராஹ' ரோந்து கப்பல்.

காட்டுப்பள்ளி எல் அன் டி கப்பல் கட்டும் தளத்தில் ரூ.186 கோடியில்  கட்டப்பட்ட கடலோரக் காவல்படை ரோந்து கப்பலான "வராஹ' வை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புதன்கிழமை சென்னையில் நடைபெற்ற  நிகழ்ச்சியில்  நாட்டுக்கு அர்ப்பணித்தார். 

சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் எல் அன்ட் டி தனியார் கப்பல் கட்டும் தளம் உள்ளது.  பாதுகாப்பு அமைச்சகமும், எல் அன்ட் டி நிறுவனமும் இக்கப்பல் தளத்தில்  ஏழு அதிநவீன ரோந்து கப்பல்களைத்  தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை கடந்த 2015-ஆம் ஆண்டு  மேற்கொண்டன.  

இதில்  "விக்ரம்', "வீரா', "விஜயா' எனப் பெயரிடப்பட்ட மூன்று ரோந்து கப்பல்கள்  ஏற்கெனவே கட்டப்பட்டு கடலோரக் காவல் பணியில் இணைக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.   இந்நிலையில் ரூ.186 கோடியில் கட்டப்பட்டு வந்த நான்காவது ரோந்து கப்பல் கட்டமைக்கப்பட்டு கடந்த நவ.2, 2018- இல் வெள்ளோட்டம் விடப்பட்டது.  

கப்பலில் தொலைத்தொடர்பு, ஆயுதங்கள், பாதுகாப்புக் கருவிகளைப் பொருத்தும் பணி நிறைவடைந்த நிலையில் "வராஹ' வை முறைப்படி கடலோரக் காவல் படையில் இணைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை சென்னைத் துறைமுகத்தில்  கடலோரக் காவல் படை தலைமை இயக்குநர் கே.நடராஜன் தலைமையில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு புதிய ரோந்து கப்பலான "வராஹ' வை நாட்டுக்கு அர்ப்பணித்தார். 

கடலோரக் காவல் படையின் பலம் அதிகரிக்கும்: 

நிகழ்ச்சியில்  ராஜ்நாத் சிங் பேசியது:  இப்புதிய ரோந்து கப்பலுக்கு விஷ்ணுவின் அவதாரமான "வராஹ' பெயர் சூட்டப்பட்டுள்ளது.  சோழ சாம்ராஜ்ய மன்னர்கள் கிழக்கு மற்றும் தென்கிழக்கு நாடுகளையெல்லாம் கடற்படை மூலம் கைப்பற்றி ஆட்சி நடத்தினர். இதேபோல் இப்போதும் கடல் வழி பாதுகாப்பில் இந்தியா சிறந்து விளங்குகிறது.  

பாதுகாப்பு துறைக்குத் தேவையான கப்பல்கள், படகுகள், கருவிகளைத் தனியாருடன் இணைந்து உள்நாட்டிலேயே தயாரிக்கும் திட்டத்தை "மேக் இன் இந்தியா' மூலம் செயல்படுத்தி வருகிறோம்.  புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய விமானங்கள், கப்பல்கள் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு வருகின்றன. இவை படிப்படியாக கடலோரக் காவல்படையில் இணைக்கப்பட்டு வருவதால் இதன் பலம் பன்மடங்கு அதிகரிக்கும். புதிய ரோந்து கப்பலான "வராஹ' சுமார் 20 ஆண்டுகள் வரை சேவையாற்றும் திறன் பெற்றது.

இக்கப்பலில் 14 அதிகாரிகள், 89 வீரர்கள் பணியில் இருப்பார்கள்.  இக்கப்பல் கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள கடலோரக் காவல்படை நிலையத்தில் சேர்க்கப்பட்டு கன்னியாகுமரி முதல் லட்சத்தீவு பகுதிகளுக்கு இடையே ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படும். புதிய ரோந்து கப்பல்கள் தொடர்ந்து இணைக்கப்படுவதன் மூலம் கடலோரக் காவல் படையின் முக்கிய குறிக்கோள்கள், கடமைகள் நிறைவேற்றப்படும் என்றார் ராஜ்நாத் சிங். 

142 ரோந்து கப்பல்கள், படகுகள்: நிகழ்ச்சியில் கடலோரக் காவல்படை தலைமை இயக்குநர் கே.நடராஜன் பேசியது:  

2,100 மெட்ரிக் டன் எடையும்  98 மீட்டர் நீளமும் கொண்ட "வராஹ' கப்பல் மணிக்கு அதிகபட்சமாக 26 கடல் மைல் வேகத்தில் செல்லக் கூடியது. 

மேலும் கரைக்குத் திரும்பாமலேயே சுமார் 5,000 கடல் மைல் தூரம் பயணிக்கும் வகையில் பல்வேறு நவீன கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதிநவீன ரக துப்பாக்கிகள் உள்பட  பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இக்கப்பலின் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் வசதி ஒரே அறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இரண்டு இயந்திரங்கள் கொண்ட ஹெலிகாப்டர் இறங்கும் வசதி , மாசுக் கட்டுப்பாட்டுக் கருவிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.  

தற்போது கடலோரக் காவல் படையில் 142 ரோந்து கப்பல்கள், படகுகளும், 62 ரோந்து விமானங்கள், ஹெலிகாப்டர்களும் உள்ளன. மேலும் 65 ரோந்து கப்பல்கள் இந்தியாவின் பல்வேறு இடங்களில் கட்டப்பட்டு வருகின்றன.  இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் மூலம் 16 இலகு ரக ஹெலிகாப்டர்கள் கட்டமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் 2025-ஆம் ஆண்டுக்குள் சுமார் 200 கப்பல்கள், 100 ரோந்து விமானங்கள், ஹெலிகாப்டர்கள் கடலோரக் காவல்படையில் இருக்கும் என்றார் நடராஜன்.

இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், கடலோரக் காவல்படை கிழக்கு பிராந்திய தளபதி எஸ்.பரமேஷ்,  எல் அன்ட் டி நிறுவன இயக்குநர் ஜே.டி.பாட்டீல்,   கட்டும் தள மேலாண்மை இயக்குநர் பி.கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தயார் நிலையில் இந்திய ராணுவம் 

எத்தகைய சவால்களையும் சமாளிக்கும் வகையில் இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

டிரோன்கள் (ஆளில்லா சிறு விமானம்) மூலமாக பாகிஸ்தானிலிருந்து பஞ்சாப்புக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவதாக அந்த மாநிலத்தின் முதல்வர் அமரீந்தர் சிங் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கடிதம் அனுப்பியுள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, எத்தகைய சவால்களையும் சமாளிக்கும் வகையில் இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது என ராஜ்நாத் சிங் பதிலளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com