சென்னையில் குடியேறவே விரும்புகிறேன்: சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தஹிலராமாணீ 

சென்னையில் குடியேறவே விரும்புகிறேன் என்று சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி வி.கே. தஹிலராமாணீ தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தஹிலராமாணீ
உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தஹிலராமாணீ

சென்னை: சென்னையில் குடியேறவே விரும்புகிறேன் என்று சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி வி.கே. தஹிலராமாணீ தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த வி.கே.தஹிலராமாணீ, கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில் அவரை மேகாலயா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்தும், மேகாலயா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்தும் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

இந்த பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு வழக்குரைஞர்கள் சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், ஒரு நாள் பணி புறக்கணிப்பிலும் ஈடுபட்டன. இந்த நிலையில் தனது பணி இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்யக் கோரி, தலைமை நீதிபதி வி.கே.தஹிலராமாணீ உச்சநீதிமன்ற கொலீஜியத்துக்கு அனுப்பிய கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்த  உத்தரவுக்கு அதிருப்தி தெரிவித்த தலைமை நீதிபதி வி.கே.தஹிலராமாணீ, கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி தனது ராஜிநாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆகியோருக்கு அனுப்பி வைத்தார். 

இந்த நிலையில் கடந்த 9-ஆம் தேதி முதல் தஹிலராமாணீ உயர் நீதிமன்றத்துக்கு வரவில்லை. இதனையடுத்து அவர் விசாரிக்க வேண்டிய வழக்குகள் அனைத்தும் உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான வினீத் கோத்தாரி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. இந்த நிலையில், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த சில நாள்களுக்கு முன்பு நாடு திரும்பினார். அவர், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில ராமாணீயின் ராஜிநாமா கடிதத்தை பரிசீலித்து, அதனை ஏற்றுக்கொண்டார். மேலும், உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி வினீத் கோத்தாரியை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து, மற்றொரு உத்தரவையும் பிறப்பித்தார்.

இந்நிலையில் சென்னையில் குடியேறவே விரும்புகிறேன் என்று சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி வி.கே. தஹிலராமாணீ தெரிவித்துள்ளார்.

ராஜிநாமா செய்து விட்ட தஹிலராமாணீக்கு மெட்ராஸ் பார் அசோசியேஷன் வெள்ளியன்று பிரிவு உபசார விழாவைநடத்தியது. இதில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது:

பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓராண்டுக்கு மேல் பணியாற்றியது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த ஓராண்டில் 5000-க்கு மேலான வழக்குகளை முடித்து வைத்துள்ளது நிறைவாக உள்ளது. இதற்காக நீதிபதி எம்.துரைசாமிக்கு நன்றி.

மும்பையை விட சென்னையே சிறந்தது. மும்பையை ஒப்பிடும் போது சீதோஷ்ண நிலை, சாலை வசதி மற்றும் உள்கட்டமைப்பு வசதி  என எல்லாற்றிலும் சென்னை நன்றாக உள்ளது.  எனவே மும்பையில் இருப்பதை விட தமிழகம் பிடித்ததால்தான் சென்னையில் குடியேற விரும்புகிறேன். இதன் காரணமாகவே இங்கு நிலம் வாங்கியுள்ளோம்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com