சிவகங்கை அருகே பாண்டியர் கால கல்வெட்டுகள்

சிவகங்கை அருகே கோவானூரில் உள்ள ஊருணி படித்துறையில் கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுகளை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் கோவானூரில் உள்ள ஊருணி படித்துறையில்  கண்டறியப்பட்ட கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுகள். 
சிவகங்கை மாவட்டம் கோவானூரில் உள்ள ஊருணி படித்துறையில்  கண்டறியப்பட்ட கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுகள். 

சிவகங்கை அருகே கோவானூரில் உள்ள ஊருணி படித்துறையில் கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுகளை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், கோவானூர் பகுதியில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு, தொல்லியல் ஆய்வாளர்கள் கொல்லங்குடி புலவர் காளிராசா, ராமநாதபுரம் மோ. விமல்ராஜ் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, கோவானூரில் உள்ள ஊருணி படித்துறையில் பழமையான 6 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. அவை அனைத்தையும் படியெடுத்த பின்னர் கல்வெட்டு ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியது:
கோவானூர் முகப்பில் உள்ள ஊருணியின் கிழக்குக் கரையில் படித்துறையும், வடக்கில் ஒரு வரத்துக் கால்வாயும் உள்ளன. அந்த ஊருணி படித்துறையில் வெவ்வேறு தகவல்களைக் கொண்ட பழைமையான கல்வெட்டுகள் 6 துண்டுகளாக காணப்படுகின்றன. அதில் ஒரு கல்வெட்டின் மூலம் கோவானூர் பகுதியில் திருவகத்தீஸ்வரமுடையார் என்ற சிவன் கோயில் இருந்துள்ளதை அறிய முடிகிறது. ஆனால் அக்கோயில் தற்போது இல்லை. கால மாற்றங்களால் அது சிதைந்து போயிருக்கலாம்.
மேலும், அங்குள்ள மற்றொரு கல்வெட்டில் கி.பி.1216 முதல் கி.பி.1244 வரை மதுரையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் "பூமருவிய திருமடந்தையும் புவிமடந்தையும்' எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தி 9 வரிகளில் உள்ளன. இதில், தஞ்சையும், உறந்தையும் செந்தழல் கொளுத்தியது, மாளிகையும், மண்டபமும் இடித்தது உள்ளிட்ட தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பகுதியிலிருந்த சிவன் கோயிலுக்கு இறையிலி (வரி நீக்கப்பட்ட) தேவதானமாக இரு ஊர்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த ஊர்களில் ஏற்கெனவே வழங்கப்பட்ட ஒரு வேலி இரு மா அளவுள்ள நிலம் நீக்கி மீதமுள்ள பகுதி தானமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. பறை வரி, கடமை வரி ஆகிய வரிகள் குறித்தும், பாண்டீஸ்வரமுடையார் எனும் கோயிலைச் சேர்ந்த சிவபிராமணர் குறித்தும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன.
இக்கல்வெட்டுகளில், அரசின் வரிக்கணக்கை நிர்வகிக்கும் திணைக்கள நாயகம் பற்றியும், உழக்குடி முத்தன், தச்சானூருடையன், வீரபஞ்சான், முனையத்தரையன், அழகனான வானவன், விழயராயன், வந்தராயன் ஆகிய அரசு அதிகாரிகளின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்று, கீழ்க்கூற்று, மதுரோதய வளநாடு, கீரனூர் நாடு, காஞையிருக்கை ஆகிய நாடுகளும், நல்லூர், மிழலைக் கூற்றத்து தச்சனூர், புல்லூர்க்குடி, மதுரோதய வளநாட்டு புறப்பற்று, காஞையிருக்கை உழக்குடி ஆகிய ஊர்களும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.
கல்வெட்டில் வேலி, இருமா ஆகிய நில அளவுகளைக் குறிக்க குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. நெடில் எழுத்துகள் பெரும்பாலும் கல்வெட்டில் வருவதில்லை. ஆனால் இங்குள்ள ஒரு கல்வெட்டில் நீக்கி நீக்கி என்ற சொல் நெடிலாகவும், மற்றொன்றில் நிக்கி நிக்கி என குறிலாகவும் இடம்பெற்றுள்ளன.
இதுதவிர, இந்தப் பகுதியில் சங்க காலத்தைச் சேர்ந்த கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் அதிகளவில் காணப்படுகின்றன. மேலும் அங்குள்ள கோயிலில் அமர்ந்த நிலையிலான ஒரு திருமால் சிற்பம் உள்ளது. இதனை அந்தப் பகுதி மக்கள் காளி தெய்வமாக தற்போது வழிபட்டு வருகின்றனர்.
ஆகவே, கி.பி.13-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் இந்த பகுதியில் உள்ள கோயில்களுக்கு பாண்டியர்கள் திருப்பணி செய்திருக்கலாம். அவ்வாறு அமைக்கப்பட்ட கோயில்கள் காலப்போக்கில் இயற்கை சீற்றம், நகர் மயமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிதிலமடைந்திருக்கலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com