பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகை எதிரொலி:  மாமல்லபுரத்தில் புத்தர் சிலை அமைப்பு

பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் வரும் அக்.11-இல் மாமல்லபுரத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு, கடற்கரைக் கோயில் நுழைவு வாயில் அருகே புத்தர் சிலை ஒன்று  வியாழக்கிழமை நிறுவப்பட்டுள்ளது
பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகை எதிரொலி:  மாமல்லபுரத்தில் புத்தர் சிலை அமைப்பு

பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் வரும் அக்.11-இல் மாமல்லபுரத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு, கடற்கரைக் கோயில் நுழைவு வாயில் அருகே புத்தர் சிலை ஒன்று  வியாழக்கிழமை நிறுவப்பட்டுள்ளது. 

சர்வதேச சுற்றுலா மையமாக விளங்கும் மாமல்லபுரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் அக்டோபர் 11-இல் வருகை தருகின்றனர். 

இதனை முன்னிட்டு, கடற்கரைக் கோயில், அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டைப்பாறை உள்ளிட்ட பாரம்பரிய நினைவுச் சின்னங்களை இருநாட்டு தலைவர்களும் சுற்றிப் பார்க்கும் வகையில், பெங்களூருவில் இருந்து கொண்டு வரப்பட்ட கிரானைட் கற்களை தரையில் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

சீன மக்கள் புத்தரை வழிபடுபவர்கள் என்பதால்,  மாமல்லபுரத்திற்கு வருகை தரும் சீன அதிபரை மகிழ்விக்கும் வகையில் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் நுழைவு வாயில் பகுதியில் புத்தர் அமர்ந்திருக்கும் நிலையிலும் அதன் இரண்டு பக்கங்களிலும்  யானைகள் துதிக்கையைத் தூக்கி நிற்பது போலவும்  சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்தச் சிற்பங்கள் புதன்கிழமை இரவோடு இரவாக நிறுவப்பட்டதால் வியாழக்கிழமை காலை நடைப்பயிற்சி மேற்கொண்டவர்களும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் வியப்புடன் பார்த்தனர். 

கடற்கரைக் கோயில் உள்பக்கம் சுற்றுலாப் பயணிகள் செல்வதைத் தடுக்க தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கண்ணன், கூடுதல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், காவல்  ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் புராதனச் சின்னங்கள் உள்ள பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உளவுப் பிரிவு போலீஸாரும் சாதாரண உடையில் கண்காணித்து வருகின்றனர். 

மாமல்லபுரத்தில் இன்னும் இரண்டு தினங்களில் சீரமைப்புப் பணிகள் முடிக்கப்பட்டு புராதனச் சின்னங்கள் புதுப் பொலிவுடன் காட்சியளிக்கும் என தொல்லியல் துறை, சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com