என் வேலையை நான் பார்க்கும் வரை தான் உங்களுக்கு நல்லது: வானிலை ஆய்வு மைய அதிகாரிக்கு தமிழ்நாடு வெதர்மேன் பதிலடி

என் வேலையை நான் பார்க்கும் வரை தான் உங்களுக்கு நல்லது என இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரியை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சாடியுள்ளார்.
என் வேலையை நான் பார்க்கும் வரை தான் உங்களுக்கு நல்லது: வானிலை ஆய்வு மைய அதிகாரிக்கு தமிழ்நாடு வெதர்மேன் பதிலடி

என் வேலையை நான் பார்க்கும் வரை தான் உங்களுக்கு நல்லது என இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரியை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சாடியுள்ளார். முன்னதாக, சென்னை அண்ணா பல்கலை.யில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர், பிரதீப் ஜான் முகநூல் பதிவுகள் குறித்து விமர்சித்திருந்தார். மேலும் மழைச் செய்திகளுக்காக அவர் பயன்படுத்தும் சில வாசகங்களால் விளம்பரத்துக்காக அறிவியலை கொச்சைப்படுத்துவதாகவும் சரமாரியாகச் சாடினார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் வியாழக்கிழமை விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது.

இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி விமர்சித்திருந்தது தொடர்பாக அறிந்துகொண்டேன். எனது வானிலைப் பதிவுகளில் நான் பயன்படுத்தும் வாசகங்கள் மூலம் நான் எவ்வித விளம்பரத்தையும் தேடிக்கொள்ளவில்லை. கடந்த 2 மாதங்களில் மட்டும் வானிலை தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் இருந்து சுமார் 300 அழைப்புகள் வரை வந்துள்ளது. ஆனால், அதில் ஒரு அழைப்பைக் கூட நான் ஏற்கவில்லை. ஏனென்றால் புகழ் தேடிக்கொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை. 

எனது முகநூல் பதிவுகள் தான் எனது வரமும், சாபமும். இதனால் எனது உடல்நலன், குடும்பத்தினருடன் செலவிடும் நேரம் என பலவற்றை நான் இழந்துள்ளேன். என்னை விமர்சிப்பதற்கு முன்பு என்னை நன்கு அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். எனவே அடுத்தவர் பணியை தேவையின்றி விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். நான் எப்போதும் இந்திய வானிலை ஆய்வு மையப் பணிகளில் தலையிடுவது கிடையாது. அதுகுறித்து தவறாக சித்தரித்ததும் கிடையாது. 

கடந்த 2 ஆண்டுகளாக வானிலை ஆய்வு மையத்துக்கு ஆதரவாகவே பேசி வருகிறேன். அதேநேரம் எனது தனிப்பட்ட முகநூலில் எதைப் பதிவிட வேண்டும், வேண்டாம் என்று எனக்கு யாரும் கட்டளையிடத் தேவையில்லை. அதில் யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது. நான் இந்தப் பக்கத்தைப் பயன்படுத்தும் வரை எனது சொந்த விருப்பங்களின் படி தான் இயங்கும். உங்கள் பணிகளை மட்டும் ஒழுங்காக பார்க்கவும். என் பணியில் நீங்கள் தவறு கண்டுபிடித்தால், உங்கள் பணியில் என்னால் 100-க்கும் மேற்பட்ட தவறுகளை சுட்டிக்காட்ட முடியும். நீங்கள் உங்கள் ஒருவிரலை அடுத்தவரை நோக்கி சுட்டிக்காட்டினால், இதர 3 விரல்கள் உங்கள் நோக்கி உள்ளது என்பதை மறந்துவிட வேண்டாம். 

ப்ளூ தக்காளி, எல்லோ தக்காளி, டம் டாம் டுமீல், பின்னி பெடலெடுக்குது, டிஷ் டொயின் டும் மாதிரி இன்னும் புதுப்புது வாசகங்கள் எனது பதிவில் நிச்சயம் இடம்பெறும். இது என் விருப்பம். இதை நான் விரும்பிச் செய்கிறேன். ஆனால், நீங்கள் வருமானத்துக்காகச் செய்கிறீர்கள். எனவே இந்த ஆத்மார்த்தமான பணி குறித்து எல்லாம் உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கடுமையாகச் சாடினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com