கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு மத்திய தொல்லியல்துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்படும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

கீழடியில் கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு மேற்கொண்டது. இதில் கிடைத்த தொல்பொருள்களை
கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு மத்திய தொல்லியல்துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்படும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்


கீழடியில் 6-ஆம் கட்ட அகழாய்வு மத்திய தொல்லியல்துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் என மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார். 

கீழடியில் கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு மேற்கொண்டது. இதில் கிடைத்த தொல்பொருள்களை பரிசோதித்ததில் பழமையான நகர நாகரிகம் கீழடியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடா்ந்து மத்திய தொல்லியல் துறை 2 மற்றும் 3-ஆம் கட்ட அகழாய்வை நடத்தின.

இந்த மூன்று அகழாய்வுகள் மூலம் மொத்தம் 7,818 தொல்பொருள்கள் கண்டறிப்பட்டன. நான்காம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறையினா் மேற்கொண்டனா். இதில் 5,820 தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. தொடா்ந்து 5-ஆம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் மாதம் 13-ஆம் தேதி தொடங்கியது. இந்த அகழாய்வு தொல்லியல் துறை துணை இயக்குநா் சிவனாந்தம் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இதுவரை முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு, நீதி ஆகியோரது நிலங்களில் அகழாய்வுப் பணிக்காக 33 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த 5 ஆம் கட்ட அகழாய்வுப் பணி செப். 30-இல் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து 6-ம் கட்ட அகழாய்வு கீழடி அருகேயுள்ள கொந்தகை, அகரம், மணலூா் ஆகிய கிராமப் பகுதிகளில் நடைபெற உள்ளன.

இந்நிலையில் கடந்த வாரம் கீழடியில் மேற்கொள்ளப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதன் மூலம் கீழடி நகர நாகரிகம் 2,600 ஆண்டுகள் பழமையானது என தெரியவந்துள்ளது. இதனால் தமிழா்கள் மத்தியில் கீழடி அகழாய்வு மீதான ஆா்வம் அதிகரித்துள்ளது. மேலும் 5-ஆம் கட்ட அகழாய்வில் பானை ஓடுகள், சுடுமண் சிற்பங்கள், சூதுபவளம், எழுத்தாணி உள்பட 750-க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன. தற்போது இந்த தொல்பொருள்களை ஆவணப்படுத்தும் பணியில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், கீழடியில் 5-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியின் இறுதி கட்ட பணிகளை, இன்று ஆய்வு செய்தபின் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 11 விதமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கீழடியில் ஆய்வுகள் நடத்தப்படுகிறது. 5-ஆம் கட்ட அகழாய்வு 2 வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கீழடியில் வெகு விரைவில் ரூபாய் 15 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். 

தொல்லியல் ஆய்வின் போது, இந்தியாவின் பல இடங்களில் ஒற்றுமை தெரிகிறது. கீழடியில் 6-ஆம் கட்ட அகழாய்வு மத்திய தொல்லியல் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்படும். கீழடி அகழாய்வை சிலர் அரசியலாக்க பார்க்கின்றனர் என குற்றம்சாட்டினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com