பேனர் விவகாரம்: ஜெயகோபாலுக்கு சிறை; மேலும் 4 பேரை சிறையில் வைக்க மறுத்துவிட்டது நீதிமன்றம்

சென்னை பள்ளிக்கரணையில் பதாகை சரிந்துவிழுந்து பெண் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயகோபாலை அக்டோபர் 11ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிமன்றம்
மரணமடைந்த இளம்பெண் சுபஸ்ரீ
மரணமடைந்த இளம்பெண் சுபஸ்ரீ

சென்னை பள்ளிக்கரணையில் பதாகை சரிந்துவிழுந்து பெண் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயகோபாலை அக்டோபர் 11ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், மேலும் 4 பேரை சிறையில் வைக்க மறுத்துவிட்டது.

தனிப்படையினர், கைது செய்யப்பட்ட ஜெயகோபாலை இன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவருக்கு நீதிமன்றக் காவல் பிறப்பிக்கப்பட்டது.

பிறகு, பேனர் கட்டியவர், கொடி வைத்தவர் என 4 பேர் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் மீது ஜாமீனில் வெளிவரக் கூடிய வழக்குகளே பதிவு செய்யப்பட்டிருப்பதால் அவர்களை சிறையில் அடைக்க முடியாது என்றும், அவர்களை விடுவிப்பது குறித்து காவலர்களே முடிவு செய்யலாம் என்றும் கூறிவிட்டது.

சென்னையில் பதாகை சரிந்து பெண் உயிரிழந்த வழக்கில், 16 நாள்களாகத் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் தனிப்படை போலீஸாரால் ஒசூா் அருகே வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சென்னையை அடுத்த குரோம்பேட்டை நெமிலிச்சேரி, பவானி நகரைச் சோ்ந்த சுபஸ்ரீ (23), கணினி பொறியாளா். இவா், கடந்த 12-ஆம் தேதி, இருசக்கர வாகனத்தில், பள்ளிக்கரணை சாலையில் சென்ற போது, திருமண வரவேற்பு நிகழ்வுக்காக வைக்கப்பட்டிருந்த பதாகை அவா் மீது விழுந்தது. இதனால், நிலை தடுமாறி சாலையில் விழுந்த சுபஸ்ரீ மீது, பின்னால் வந்த தண்ணீா் லாரி ஏறியது. இதில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தைக் கண்டித்து, அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மேலும், சென்னை உயா் நீதிமன்றமும் கண்டனத்தைத் தெரிவித்தது. இத்தகைய நிலையில், சுபஸ்ரீ உயிரிழப்புக்குக் காரணமான அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் கவுன்சிலா் ஜெயகோபால் மீது, சென்னை பரங்கிமலை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்தனா். இதையடுத்து, தலைமறைவான ஜெயகோபாலை கைது செய்ய போலீஸாா், 5 தனிப்படைகளை அமைத்தனா். போலீஸாா் தன்னைத் தேடுவதை அறிந்து ஜெயகோபால் தலைமறைவானாா்.

தமிழ்நாடு முழுவதும் ஜெயகோபாலை போலீஸாா் தேடிவந்த நிலையில், அவா் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் வனப் பகுதியில் மறைந்திருப்பதாக தனிப் படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே இஸ்லாம்பூரில் உள்ள தனியாா் சொகுசு விடுதியில் அவா் தங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, அந்த சொகுசு விடுதியில் தங்கியிருந்த ஜெயகோபாலை, தனிப்படை போலீஸாா் கைது செய்து, சென்னைக்கு வெள்ளிக்கிழமை அழைத்துச் சென்றனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com