தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் ஆவணங்கள் திருத்தப்பட்டதா?: "நீட்' தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சிபிசிஐடி தீவிர விசாரணை

"நீட்' தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் உதித் சூர்யா தொடர்பான ஆவணங்கள் திருத்தப்பட்டதா என்பது குறித்து வெள்ளிக்கிழமை சிபிசிஐடி போலீஸார் ஆய்வு செய்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

"நீட்' தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் உதித் சூர்யா தொடர்பான ஆவணங்கள் திருத்தப்பட்டதா என்பது குறித்து வெள்ளிக்கிழமை சிபிசிஐடி போலீஸார் ஆய்வு செய்தனர்.

சென்னை, தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த மாணவர் உதித்சூர்யா (20), அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் ஆகியோரை "நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். தேனி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும், 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி பன்னீர்செல்வம் உத்தரவிட்டார். இதன்படி, தேனி மாவட்ட சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட உதித் சூர்யா மற்றும் வெங்கடேசன், சிறைத் துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி மதுரை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

இந்த நிலையில், தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணையின் போது உதித் சூர்யா, வெங்கேடசன், தேனி அரசு மருத்துக் கல்லூரி முதன்மையர் ராஜேந்திரன், கல்லூரி துணை முதல்வர் எழிலரசன் ஆகியோர் தனித் தனியே அளித்த வாக்குமூலங்கள், தனிப் படை போலீஸார் சமர்ப்பித்த ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், சிபிசிஐடி போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

மேலும் பலருக்கு தொடர்பு: சிபிசிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில் உதித் சூர்யா கடந்த 2017-ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றுள்ளார் என்பதும், ஏற்கெனவே 2 முறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்துள்ளார் என்பதும், சீனாவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, 2 மாதங்களில் படிப்பை கைவிட்டு திரும்பியுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. 

மகனை மருத்துவராக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்த வெங்கடேசனுக்கு, மருத்துவராக பணியாற்றி வரும் அவரது நண்பர் ஒருவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவதற்காக முகவர் ஒருவருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த முகவர் மூலம் மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள தேர்வு மையங்களில், மேலும் சிலர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி மருத்துவப் படிப்பில் சேர்ந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. வெங்கடேசனுடன் இடைத் தரகர் மட்டுமே தொடர்பில் இருந்துள்ளார். மும்பையில் உள்ள தனியார் பயிற்சி மையம் மூலம் நீட்  தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்துள்ளது.

உதித் சூர்யா சார்பில் தேர்வு எழுதியவர் குறித்த விவரத்தை இடைத் தரகர் தனக்கு தெரிவிக்கவில்லை என்று வெங்கடேசன் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இத்தகவலின் அடிப்படையில், வெங்கடேசனுக்கு இடைத்தரகருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்த மருத்துவர், இடைத்தரகர், நீட் தேர்வை ஆள்மாறாட்டம் செய்து எழுதிய நபர், தனியார் பயிற்சி மையம் ஆகியவற்றை குறித்து சிபிசிஐடி ஐ.ஜி.சங்கர் உத்தரவின் பேரில், தனிக் குழுக்கள் அமைத்து தமிழகம், கேரளம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு இடங்களில் விசாரணை நடைபெற்ற வருவதாக மதுரை சிபிசிஐடி காவல் துணை கண்காணிப்பாளர் காட்வின் ஜெகதீஷ்குமார் தெரிவித்தார்.

ஆவணங்கள் திருத்தப்பட்டனவா?: "நீட்' தேர்வு ஆள்மாறாட்டத்தில் உதித் சூர்யா சார்பில் நுழைவுத் தேர்வு, கலந்தாய்வு, கல்லூரி சேர்க்கை ஆகியவற்றில் போலியான நபரே பங்கேற்றிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையில், கல்லூரி சேர்க்கை நடைபெற்ற நாளில் கல்லூரி வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவு,  நீட் தேர்வு ஆள்மாறாட்டம் குறித்து கடந்த செப். 11-ஆம் தேதி தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பிய நபர், அதே நாளில் கல்லூரியில் மேற்கொண்டு படிப்பை தொடர விருப்பம் இல்லை என்று உதித் சூர்யா கல்லூரி நிர்வாகத்துக்கு அனுப்பியிருந்த கடிதம், கடந்த செப். 12-ஆம் தேதி உதித் சூர்யாவின் கல்லூரி வருகைப் பதிவேட்டில் செய்துள்ள திருத்தம் ஆகியவை குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தேனி அரசு மருத்துவக் கல்லூரி அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், உதித் சூர்யா தொடர்பான பதிவுகள் திருத்தப்பட்டுள்ளனவா என்பது குறித்து போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். 

இந்த வழக்கு தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் மற்றும் சிபிசிஐடி குழுக்கள் மூலம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், ஆள்மாறாட்டப் புகாரில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது என்றும் சிபிசிஐடி தென்மண்டல காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com