
காஞ்சி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதியின் பூர்வாசிரமத் தந்தை கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி (96) உடல் நலக்குறைவால் சனிக்கிழமை காலமானார்.
திருவள்ளூரை அடுத்த பெரியபாளையம் அருகே உள்ள தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி (96). இவரது மனைவி அம்பாலட்சுமி. இவர்களுக்கு எம்.கே.ஸ்ரீதரன், எம்.கே.குமார், எம்.கே.பிரபாகர், எம்.கே.ரகு ஆகிய மகன்களும், எம்.ராதா, பி.உமா, பி.வரலட்சுமிஆகிய மகள்களும் உள்ளனர். கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி வேதபாட சாலையில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அப்போது, அருகில் உள்ள கோயில்களில் புரோகிதம் செய்து வந்தார்.
கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி உடல் நலக்குறைவால் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சனிக்கிழமை காலை 11 மணிக்கு காலமானார்.
இவரது இறுதிச் சடங்கு திருவள்ளூர் அருகே பெரியபாளையத்தை அடுத்த தண்டலம் கிராமத்தில் நடைபெறும். தற்போது கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரியின் உடல் ஆன்மிகவாதிகள், உறவினர்கள், பொதுமக்கள் பார்வைக்காக அவரது சொந்த இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்கு அந்த கிராமத்தில் உள்ள மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு நடைபெற உள்ளது. தொடர்புக்கு-9444928104.
துணை முதல்வர் இரங்கல்: கற்றறிந்த வேத பண்டிதரான கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள், ஆசிரியராகப் பணியாற்றிய சிறப்புக்குரியவர். காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதியின் பூர்வாசிரமத் தந்தை என்ற பெருமையுடன் அவருக்கு வேதம் கற்றுக் கொடுத்த ஆசானாகத் திகழ்ந்தார். அவரது மறைவு காஞ்சி பக்தர்களுக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் என்று தனது இரங்கல் செய்தியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.