Enable Javscript for better performance
விவசாய மின் இணைப்புக்கு தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் பி.தங்கமணி- Dinamani

சுடச்சுட

  

  விவசாய மின் இணைப்புக்கு தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் பி.தங்கமணி

  By DIN  |   Published on : 29th September 2019 04:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  thangamani

   

  விவசாய மின் இணைப்புக்கு தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

  நாமக்கல்லில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 

  தத்கல் முறையில் ஆண்டுதோறும் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.  அதற்கான அரசாணை அக். 1-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.  அன்று முதல் அக். 31 வரையில் விவசாயிகள் மின் இணைப்பு கோரி விண்ணப்பிக்கலாம்.  தகுதியின் அடிப்படையில் 10 ஆயிரம் பேருக்கு இணைப்பு வழங்கப்படும்.

  கீழடி அகழ்வாராய்ச்சிப் பணி சரியான முறையில் செல்கிறது.  தமிழின் தொன்மை கருதி அதனை யாரும் அரசியலாக்க வேண்டாம் என அத்துறை அமைச்சரே கேட்டுக் கொண்டுள்ளார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானலும் கீழடிக்குச் செல்லலாம். அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்றிருக்கிறார்.

  நாமக்கல் மாவட்டத்துக்கு அரசு மருத்துவக் கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கெனவே நான் தெரிவித்துள்ளேன்.  வரும் ஆண்டில் மத்திய அரசு 75 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க உள்ளது.  அதனைக் கேட்டுப் பெறுவதற்கான முயற்சியை எடுப்போம்.  

  தமிழகம் முழுவதும் அரசு மதுபானக் கடைகளில் உள்ள மது அருந்தும் கூடங்களுக்கு,  திங்கள்கிழமை (செப். 30) பொது ஏலம் நடைபெறுகிறது. இதற்கான வைப்புத்தொகை விற்பனையைப் பொருத்து கடைக்கு கடை மாறுபடும். மாநிலம் முழுவதும் 5 ஆயிரம் எண்ணிக்கையில் இருந்த மது அருந்தும் கூடங்கள்,  தற்போது 2 ஆயிரம் எண்ணிக்கையிலேயே உள்ளன. விரைவில் அவையும் குறைக்கப்படும்.

  காற்றாலை மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கியதாக எழுந்த பிரச்னை குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.  அதனால் தற்போது அதில் கருத்துச் சொல்ல முடியாது. நீதிமன்றத் தீர்ப்புக்கு பின் விளக்கமாகத் தெரிவிக்கிறேன்.

  நீலகிரி மாவட்டம்,  அவலாஞ்சியில் பெய்த பலத்த மழையால் மின்சார ஊழியர்கள் பலர் பாதிக்கப்பட்டனர்.  இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கினார்.  அதனை பாதிக்கப்பட்டோருக்கு நேரில் வழங்கி ஆறுதல் கூறியதுடன்,  மழைக் காலத்தின் போது சிறப்பாகப் பணியாற்றிய மின் வாரிய ஊழியர்களைச் சந்தித்துப் பாராட்டியும் வந்தேன்.

  கொல்லிமலையில் நீர்மின்நிலையத் திட்டம் அறிவித்து ஓராண்டுக்கும் மேலாகி விட்டது.  அங்கு நிலம் கையகப்படுத்துவதில் பிரச்னை உள்ளது.  உச்ச நீதிமன்றம் அது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. அதனை முழுமையாகப் படித்து பார்த்தப்பின் பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai