ராமேசுவரத்தில் மஹாளய அமாவாசை:  1 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்

ராமேசுவரத்தில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு அக்னிதீர்த்தக் கடலில் சனிக்கிழமை ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் மறைந்த முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் செய்து புனித நீராடி வழிபாடு
மஹாளய அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் அக்னி தீர்த்தக்கடலில் சனிக்கிழமை திதி கொடுத்து புனித நீராடிய பக்தர்கள்.
மஹாளய அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் அக்னி தீர்த்தக்கடலில் சனிக்கிழமை திதி கொடுத்து புனித நீராடிய பக்தர்கள்.

ராமேசுவரத்தில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு அக்னிதீர்த்தக் கடலில் சனிக்கிழமை ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் மறைந்த முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் செய்து புனித நீராடி வழிபாடு நடத்தினர்.

மஹாளய அமாவாசையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட  பக்தர்கள் ராமேசுவரத்தில் குவிந்தனர். அதிகாலையில் அக்னி தீர்த்தக் கரையில்  மறைந்த முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து  புனித நீராடி வழிபாடு நடத்தினர். 

இதன் பின் கோயிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை வழிபட்டனர். 

மேலும்  கோதரண்டராமர் கோயிலில் ராமகிருஷ்ண மடம் விவேகானந்த குடில் சார்பில் சுவாமி பிரணவானந்தா தலைமையில் பக்தர்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது.

கன்னியாகுமரியில்: புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு, கன்னியாகுமரி, பாபநாசம்,  திருச்செந்தூர், குற்றாலத்தில் சனிக்கிழமை பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடி,  முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சனிக்கிழமை அதிகாலை முதலே ஏராளமானோர் புனித நீராடி, முன்னோருக்கு பலிகர்மம் செய்தனர். தொடர்ந்து, கடற்கரையில் உள்ள பரசுராம விநாயகர் கோயில், பகவதியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு வழிபாடு: இதையொட்டி, பகவதியம்மன் கோயில் அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அம்மனுக்கு வைர கிரீடம், வைர மூக்குத்தி, தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு வழிபாடு, பகலில் அன்னதானம், மாலையில் சாயரட்ச பூஜை, இரவில் அம்மன் பல்லக்கில் 3 முறை கோயிலை வலம் வருதல், வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு, அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

பாபநாசத்தில்: திருநெல்வேலி மாவட்டம்,  பாபநாசம் தாமிரவருணி ஆற்றிலும் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். பாபநாசம் சிவன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றன. 

கடலூர், மதுரை, சாத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் தாமிரவருணி ஆற்றில் குடும்பத்தினருடன் புனித நீராடி, தர்மம் செய்தனர். அமாவாசை தினத்தையொட்டி, தென்காசி, திருநெல்வேலியிலிருந்து தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

குற்றாலத்தில்: குற்றாலம் பேரருவியில் சனிக்கிழமை அதிகாலை முதல் பொதுமக்கள் நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். அதிகக் கூட்டம் காரணமாக, பேரருவியில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். வாகனங்களின் வருகையும் அதிகளவில் இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து, விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. கோயில் கடலில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் புனித நீராடியும், தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தும் வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com