2 பேரவைத் தொகுதிகள் இடைத் தேர்தல்: வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி

விக்கிரவாண்டி, நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கலுக்கு திங்கள்கிழமை (செப். 30) கடைசி நாளாகும். மேலும், வேட்புமனு பரிசீலனை, செலவினங்கள்

விக்கிரவாண்டி, நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கலுக்கு திங்கள்கிழமை (செப். 30) கடைசி நாளாகும். மேலும், வேட்புமனு பரிசீலனை, செலவினங்கள் உள்ளிட்டவற்றை கண்காணிக்க பொதுப் பார்வையாளர்களும் வரவுள்ளனர்.
விக்கிரவாண்டி, நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் அறிவிப்பு கடந்த 21-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த திங்கள்கிழமை வெளியானது. வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதுவரை எத்தனை பேர்: விக்கிரவாண்டி, நான்குனேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் சேர்த்து இதுவரை 20 வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். அதில், நான்குனேரி தொகுதியில் தேசிய மக்கள் கட்சி சார்பில் 4 மனுக்களும், சுயேச்சைகள் சார்பில் எட்டு மனுக்களும் அளிக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று, விக்கிரவாண்டி தொகுதியில் சுயேச்சையாக 7 மனுக்களும், நாம் தமிழர் கட்சி சார்பில் ஒரு மனுவும் என மொத்தம் 8 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இடைத் தேர்தலில் போட்டியிட இதுவரை 20 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பிரதான கட்சிகள்: ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளான அதிமுக, திமுக ஆகியன தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளன. நான்குனேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரின் பெயரை வெள்ளிக்கிழமை இரவு அறிவித்தது. சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களும் விடுமுறை தினங்கள் என்பதால் வேட்புமனு தாக்கல் நடைபெறவில்லை.
எனவே, பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான திங்கள்கிழமை தங்களது மனுக்களை தாக்கல் செய்யவுள்ளனர்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 1-ஆம் தேதியன்று நடைபெறுகிறது. 
வேட்புமனுக்களைத் திரும்பப் பெற அக்டோபர் 3-ஆம் தேதி கடைசி நாளாகும். வாக்குப் பதிவு அக்டோபர் 21-இல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24 -இல் நடைபெறும். 
பொதுப் பார்வையாளர்கள்: விக்கிரவாண்டி, நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பொதுப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் திங்கள்கிழமை முதல் தங்களது பணிகளைத் தொடங்கவுள்ளனர். வேட்புமனுக்கள் பரிசீலனை, தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அவர்கள் கண்காணிக்க உள்ளனர்.
பிரசாரம் சூடு பிடிக்கும்: வேட்புமனு தாக்கல் முடிவடைந்து அக்டோபர் 3-ஆம் தேதியன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர். 
குறிப்பாக, அதிமுக தலைவர்கள் எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கவுள்ளனர்.
முன்னதாக, தலைவர்களின் பிரசாரத்துக்கான போக்குவரத்து செலவு உள்ளிட்டவை வேட்பாளர்களின் கணக்கில் வராமல் விலக்குப் பெறுவதற்கான பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் அளிக்கவும் வரும் திங்கள்கிழமை கடைசி நாளாகும். அன்றைய தினம் எந்தெந்தக் கட்சிகள் சார்பில் எந்தெந்த தலைவர்கள் பிரசாரத்துக்காக பெயர்களை அளித்துள்ளார்கள் என்பதும் தெரிய வரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com