கொடைக்கானலில் விரைவில் தொல்லியல் ஆய்வு: அமைச்சர் க. பாண்டியராஜன் தகவல்

கொடைக்கானலில் விரைவில் தொல்லியல் ஆய்வுத் தொடங்கப்படும் என தமிழக தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் தெரிவித்தார்.
தமிழக அமைச்சர் 'மாஃபா' பாண்டியராஜன்
தமிழக அமைச்சர் 'மாஃபா' பாண்டியராஜன்

கொடைக்கானலில் விரைவில் தொல்லியல் ஆய்வுத் தொடங்கப்படும் என தமிழக தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் தெரிவித்தார்.

கொடைக்கானலில்  செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியது:

தொல்லியல்துறை சார்பில் தமிழகத்தில் 70-இடங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கீழடியில் 5 ஆம் கட்ட ஆய்வுக்கு பிறகு 6-ஆம் கட்ட ஆய்வுப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். 

கீழடியை தமிழர் நாகரிகம் என்று சுருக்காமல் இந்திய நாட்டின் மொத்த நாகரிகத்தின் தொடக்கமாகவும், உலக நாகரிகத்துக்கான முன்னோடி என்றும் கருதலாம். 

ஆதிச்சநல்லூரில் விரைவில் அருங்காட்சியம் அமைக்கப்படும். காவிரிக்கரை, வைகைக்கரை நாகரிகத்தை ஆய்வு செய்தது போல தாமிரவருணி ,ஆற்றங்கரை நாகரிகம் விரைவில் ஆய்வு செய்யப்படவுள்ளது.

கொடைக்கானல் மலைப் பகுதிகளான தாண்டிக்குடி, பேத்துப்பாறை, பூம்பாறை, அடுக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள தொல்லியல் சின்னங்கள் 7 கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.  

மிகவும் முற்பட்ட கற்காலத்தின் ஆயுதங்கள் அடங்கிய குறிஞ்சி நில நாகரிகமாக கொடைக்கானல் உள்ளது.  இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் முதல் மூன்று லட்சம் ஆண்டுகளைவிட முந்தைய நாகரிகமாக இருக்கலாம். 

கொடைக்கானல் மலைப் பகுதியில் உள்ள பாண்டியன் காலத்து கோட்டை போல 7 கோட்டைகளை தமிழக அரசு மீட்டுள்ளது. நாட்டிலேயே கோட்டைகளின் பூமியாக தமிழகம் உள்ளது. விரைவில் கொடைக்கானல் பகுதிகளையும் ஆய்வு செய்து வரலாற்றில் இணைக்க சிறப்பு குழுவை நியமித்து ஆய்வுக்குள்படுத்தப்படும்.

தமிழ் மொழி வளர்ச்சிக்கு சொற்குவைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இத் திட்டத்தின் மூலம் உலகெங்கிலும் உள்ள 10 ஆயிரம் மாணவர்கள், 670 துறைகளில் உள்ள அறிஞர்கள், சிந்தனையாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் இணைந்து புதிய தமிழ்சொற்களை கண்டறியும் "சொற்போர் இயக்கம்' உருவாகியுள்ளது. உலகிலுள்ள வேறு எந்த மொழியிலும் இல்லாத அளவுக்கு 10 லட்சம் சொற்கள் கண்டறியப்பட்டு, தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடுவோம். இதற்கு ஊடகங்களின் பங்களிப்பும் வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com