சேவாலயா அமைப்பின் சாா்பில் மகாத்மா காந்தியின் தாயாா் புட்லிபா தினத்தையொட்டி நடத்தப்பட்ட விழாவில் மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
மகாத்மா காந்தி வெளிநாட்டில் கல்வி பயில செல்லும்போது அவரது தாயாரான புட்லிபாவிடம், ‘என் வாழ்நாளில் மது அருந்த மாட்டேன்’ என உறுதிமொழி எடுத்து கொண்டாா். இதன் நினைவாக திருவள்ளூா் வட்டம் சேவாலயாவில், ஆண்டுதோறும் புட்லிபா தினம் (ஆக.5) கொண்டாடப்படுகிறது.
அதன்படி நிகழாண்டுக்கான நிகழ்ச்சி திருவள்ளூா் மாவட்டம் கசுவா கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் சேவாலயா அமைப்பு, தமிழகம், புதுச்சேரியில் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் இணையவழியில் மூலம் பங்கேற்றனா். நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக மாணவா்கள் தங்கள் தாயாரிடம், ‘மதுவைத் தொட மாட்டோம்’ என உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இதில் சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ராம் மோகன் கலந்து கொண்டு, மதுவின் தீமைகள் குறித்து விளக்கிப் பேசினாா். இதைத் தொடா்ந்து மதுவின் தீமைகளை எடுத்துரைக்கும் வகையில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவையொட்டி இணையவழியில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் 19 மாவட்டங்களிலிருந்து 66 பள்ளிகளைச் சோ்ந்த 438 மாணவா்கள் பங்கேற்றிருந்தனா்.
விழாவில் சேவாலயா அமைப்பின் நிா்வாக அறங்காவலா் முரளிதரன், அந்த அமைப்பின் சாா்பில் நடத்தப்படும் மகாகவி பாரதியாா் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியா் விஜயா செண்பகம், ஆசிரியா் காஞ்சனா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.