

சென்னை: நாட்டில் நிலவும் அசாதாரண சூழலை உச்சநீதிமன்றமே உணர்ந்து தீர்வுகாண முன்வருகின்ற நேரத்தில் - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதைப் பற்றியும் கவலைப்படாமல் நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ரத்து செய்திருப்பது கண்டனத்திற்குரியது என்று திமுக பொருளாளரும் நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கரோனா நோய்த் தொற்றைக் காரணம் காட்டி நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரை மத்திய பா.ஜ.க. அரசு ரத்து செய்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“இந்திய - சீன உறவு மிக மோசமான நிலையில் இருக்கிறது” என்று ஒருபுறம் நாட்டின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியுள்ளார். எல்லையில் பிரச்சினை - இன்னொரு பக்கம் தலைநகர் தில்லியின் எல்லையில் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்து விவசாயிகள் இரவு பகலாக தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தும் போராட்டம் என்று மிக தலையாய பிரச்னைகள் இன்றைக்கு அணிவகுத்து நிற்கின்றன.
இப்பிரச்னைகள் குறித்தெல்லாம் விவாதிக்க வேண்டிய மிக முக்கியமான காலகட்டத்தில் - நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரை நடத்த மத்திய பா.ஜ.க. அரசு விரும்பவில்லை என்பது மிகுந்த கவலையளிக்கிறது.
“விவசாயிகள் போராட்டம் தேசிய பிரச்னையாக மாறலாம்” என்று எச்சரித்துள்ள உச்சநீதிமன்றம் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது. நாட்டில் நிலவும் அசாதாரண சூழலை உச்சநீதிமன்றமே உணர்ந்து தீர்வுகாண முன்வருகின்ற நேரத்தில் - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதைப் பற்றியும் கவலைப்படாமல் நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ரத்து செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
நம் நாட்டின் இதயம் ஜனநாயகம்தான். அந்த இதயம் நாடாளுமன்றத்தில் நடைபெறும் அர்த்தமுள்ள விவாதங்களின் மூலம்தான் துடித்துக் கொண்டிருக்கிறது என்பதை ஏனோ பிரதமர் நரேந்திர மோடி உணர முன்வராதது கவலையளிக்கிறது.
இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் குளிர்காலக் கூட்டத்தை ரத்து செய்வது குறித்துக் கலந்து ஆலோசனை கூட நடத்தாமல் - எதேச்சதிகாரமாக முடிவு எடுத்து “நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நடக்காது” என்று அறிவிப்பது ஏற்றுக்கொள்ள இயலாத நடைமுறை என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.