ஓய்வு பெற்றவர்களை புதிய முறையில் கௌரவித்த மாநகர் போக்குவரத்துக் கழகம்

மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் நேற்றைய தினம் (31.03.2020) ஓய்வு பெற்ற 71 பணியாளர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று உரிய சான்றிதழ் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
ஓய்வு பெற்றவர்களை புதிய முறையில் கௌரவித்த மாநகர் போக்குவரத்துக் கழகம்


மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் நேற்றைய தினம் (31.03.2020) ஓய்வு பெற்ற 71 பணியாளர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று உரிய சான்றிதழ் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், மார்ச் 31ம் தேதி ஓய்வு பெற்ற மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர்களை கௌரவிக்க, அதிகாரிகள் புதிய யோசனையை மேற்கொண்டனர். இதற்கு ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த வரவேற்பு அளித்தனர்.

மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றிய, 25 ஓட்டுநர்கள், 17 நடத்துநர்கள், 11 தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள், 14 போக்குவரத்து மேற்பார்வையாளர்கள் மற்றும் 4 நிர்வாகப் பிரிவு அலுவலர்கள் உள்ளிட்ட 71 பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மார்ச் 31ம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெற்றனர்.

மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெறும் பணியாளர்கள் அனைவரும், தலைமையகத்தில் மேலாண் இயக்குநர் தலைமையில் நடைபெறும் பிரிவு உபசரிப்பு நிகழ்விற்கு அழைக்கப்பட்டு, உரிய ஓய்வுச் சான்றிதழ், பணிப்பாராட்டுச் சான்றிதழ் மற்றும் அன்பளிப்பு வழங்கி, சால்வை அணிவித்து கௌரவிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

தற்பொழுது கரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால், வழக்கமான நடைமுறையைப் பின்பற்ற வழி இல்லாமல் போனது.

இதன் காரணமாக, தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், திருவொற்றியூர், எண்ணூர் மற்றும் ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் ஓய்வு பெற்றுள்ள பணியாளர்களின் இல்லங்களுக்கு, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், துணை மேலாளர் மற்றும் அந்தந்த கிளை மேலாளர்கள், நேரில் சென்று, ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான ஓய்வூதியச் சான்றிதழ், பணிப் பாராட்டுச் சான்றிதழ், இனிப்பு மற்றும் சால்வை அணிவித்து பாராட்டி கௌரவித்தார்கள்.

பணியாளர்களின் இல்லங்களுக்கு அலுவலர்கள் நேரில் வந்து உரிய சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தது மிகவும் நெகிழ்ச்சி தந்ததோடு, நிர்வாகத் தரப்பிலான இந்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்க ஒன்று என்று ஓய்வு பெற்றுள்ள பணியாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் நன்றி தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com