சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 8-வது நாளாக உணவு வழங்கல்

சேலம் மாவட்டம், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் சங்ககிரி நகர் பகுதியில்
சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 8-வது நாளாக உணவு வழங்கல்

சேலம் மாவட்டம், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் சங்ககிரி நகர் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து காவலர்கள், பேரூராட்சி, ஊராட்சி தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், மருத்துவமனைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 8வது நாளாக காலை முதல் மாலை உணவுகளை வழங்கி வருகின்றனர். 

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ளதையடுத்தும், தமிழ்நாட்டில் மார்ச் 24ம் தேதி மாலை 6 மணி முதல் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து அத்தியாவசிய தேவைகளைத் தவிர மற்ற அனைத்து வாகனங்களும் சாலையில் இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சங்ககிரி நகரில் காவல்துறை பல்வேறு சோதனை சாவடிகளை அமைத்து 24 மணி நேர சுழற்சி அடிப்படையில்  கண்காணித்து வருகின்றனர். சங்ககிரி பேரூராட்சி நிர்வாக அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் காலை  5 மணி முதல் மாலை 6 மணி வரை நகரின் பல்வேறு தூய்மை பணிகள் சாலைகள், வீடுகள் உள்ள பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆரம்பச் சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் பணியாளர்கள் சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர். 

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவையடுத்து நகர் பகுதியில் தனியார் உணவு விடுதிகள், தேநீர் கடைகள் செயல்படாமல் உள்ளன. இந்நிலையில் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் வி.செல்வராஜ், செயலர் கே.கே.நடேசன், பொருளாளர் என்.மோகன்குமார், துணைத்தலைவர் ஆர்.ஆர்.மோகன்குமார், இணைச் செயலர் எம்.சின்னதம்பி, நிர்வாக குழு உறுப்பினர்கள், உறுப்பினர்கள் ஆலோசனை செய்து சங்ககிரி நகருக்காகத் தன்னலமற்ற சேவை செய்து வருபவர்கள் உணவு வழங்குவது என முடிவு செய்தனர். அதனையடுத்து மார்ச் 25ம் தேதி காலை தொடங்கி ஏப்ரல் 1ம் தேதி வரை காலை 5 மணிக்கு தேநீர், காலை உணவு, நண்பகலில் தேநீர், மாலையில் தேநீர், சுண்டல், காரவகைகளை லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலக வாகனத்தில் பாதுகாப்பு, சேவைப் பணிகளில் ஈடுபடுபவர்களின் இடத்திற்கே கொண்டு சென்று வழங்கி வருகின்றனர். 

லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பணியாளர்கள் 15 பேர் உணவு பணிகளுக்கென ஒதுக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.25 ஆயிரம் மதிப்பில் உணவு வழங்கும் பணிகள் நடைபெறுகின்றன என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். தற்போது சங்ககிரியையொட்டியுள்ள நாமக்கல் மாவட்டம், படைவீடு பேரூராட்சி பகுதிகளில்  பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கும், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஐவேலி  ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் உள்பட 250 நபர்களுக்கு தினசரி வழங்கப்படுகின்றன.  லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் உணவு வழங்கும் பணிகளைப் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com