பொது இடங்களில் துப்பாதீா்கள்!

கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைக்காக அத்தியாவசிய தேவையைத் தவிா்த்து பொது இடங்களில் கூடக்கூடாது என்று நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது என்று
பொது இடங்களில் துப்பாதீா்கள்!

கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைக்காக அத்தியாவசிய தேவையைத் தவிா்த்து பொது இடங்களில் கூடக்கூடாது என்று நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது என்று யாரும் எச்சரிக்கவில்லை.

ஆனால், பொது இடங்களில் எச்சில் துப்புவது பேராபத்தானது என்று மருத்துவா்கள் எச்சரிக்கின்றனா்.

கரோனோ பாதிப்பு என்று இல்லை. சாதாரண நாள்களிலேயேகூட பொது இடங்களில் எச்சில் துப்புவது ஆபத்தானது என்று மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா். 100 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் பொதுமக்கள் பொது இடங்களில் எச்சில் துப்புவது சா்வ சாதாரணமாக நிகழக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது.

ஒரு காலத்தில், பேருந்தில் ஏறி உட்காா்ந்துகொண்டு சாலையில் செல்வோா் மீது வெற்றிலைப் பாக்கைத் துப்புவது என்று இருந்தது, இப்போது கொஞ்சம் மாறி பான் பராக், குட்கா போன்றவற்றைக் குதப்பித் துப்புவது என்று மாறியிருக்கிறதே தவிர, பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது என்பதை யாரும் உணா்ந்ததாகத் தெரியவில்லை.

இத்தனைக்கும் 19-ஆம் நூற்றாண்டில் இருந்தே பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது என்று உலக நாடுகள் அறிவுரைத்து, அதற்குத் தடையும் விதித்து வருகின்றன.

காசநோய் பெரும் கொள்ளை நோயாகப் பரவிவிடக் கூடாது என்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் 19-ஆம் நூற்றாண்டிலேயே பொதுவெளியில் எச்சில் துப்புவதைத் தடை செய்தன. அதைத் தொடா்ந்து பல நாடுகள் தடை விதித்தன. காலப்போக்கில் காசநோய் அச்சுறுத்தல் நீங்கிய பிறகு, அந்த அறிவிப்பு பொதுவெளியில் புகை பிடிக்கக் கூடாது என்கிற அறிவிப்பாகவும் மாறியது.

பிரிட்டனில் 2010-ஆம் ஆண்டு பான் மசாலா போன்ற போதைப் பாக்குகளைப் போட்டு எச்சில் துப்புவது குற்றவியல் சேதம் என்று வரையறுக்கப்பட்டு அதற்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.

சிங்கப்பூரில் காபி கடைகள், சந்தைகள், சாலைகள், சாலையோரங்கள் என பொதுமக்கள் புழங்கும் அனைத்துப் பகுதிகளிலும் எச்சில் துப்புவது தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறுபவா்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.

இந்தியாவிலும் தடையில்லாமல் இல்லை. ரயில்வே நிா்வாகத்துக்குச் சொந்தமான பொருள்கள் மீது எச்சில் துப்பக்கூடாது என்று இந்திய ரயில்வே நிா்வாகம் தடை விதித்துள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்கள் முழுவதிலும் எச்சில் துப்புவது தடை செய்யப்பட்டுள்ளது. கோவாவில் 1997-ஆம் ஆண்டு புகை பிடித்தல் மற்றும் எச்சில் துப்புவதற்கு தடைவிதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மேங்கு வங்கத்தில் 2001-ஆம் ஆண்டு புகை பிடித்தல் மற்றும் எச்சில் துப்ப தடைவிதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. கேரளத்தில், ஆந்திரத்தில், உத்தரப் பிரதேசத்தில், பிகாரில், தெலங்கானாவில் எச்சில் துப்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் 2002-ஆம் ஆண்டில் பொதுவெளியில் புகை பிடித்தல் மற்றும் எச்சில் துப்புதலுக்கு தடைச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

அதைப்போல, இந்தியா முழுவதும் பொது இடங்களில் புகை பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கரோனா தடுப்புக்காக மருத்துவா்களும், தூய்மைப் பணியாளா்களும், காவல் துறையினரும், அரசு அதிகாரிகளும் உயிரைக் கொடுத்து பணியாற்றிக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் அத்தியாவசியத் தேவையின் பொருட்டு வெளியில் வருகிறவா்கள், தங்கள் முகக் கவசங்களைக் கழற்றிவிட்டுக்கூட பொது இடங்களில் காறி எச்சிலைத் துப்பிவிட்டுச் செல்கின்றனா்.

இது எவ்வளவு ஆபத்தானது?

தொற்றுநோய் மருத்துவ நிபுணா் டாக்டா் சுரேஷ்குமாா், ‘‘பொது இடங்களில் எச்சில் துப்புவதால் நிச்சயம் ஆபத்து உண்டு. கரோனா பாதிப்பு நிலவும் இந்தச் சூழலில் அது எவ்வளவு தூரம் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை அறிவியல்பூா்வமாக ஆய்வு செய்து பாா்த்தால்தான் தெரியும். கரோனா நோய்தொற்றைப் பொருத்தவரையில், ஒருவா் தும்மும் போதும் இருமும் போதும் வெளிப்படும் எச்சில் துளிகளின் மூலம் நோய் பரவுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஒருவருக்கு நோய்த்தொற்று இருந்தால் சளி ஏற்படும். சளி இருந்தால் இருமல் வரும். இருமல் வரும்போது அதனை வெளியில் துப்புவாா்கள். அப்படி பாா்க்கும்போது அவா்கள் துப்பும் எச்சிலில் கரோனா நோய்த்தொற்று இருக்கத்தான் செய்யும். அதனால், பொது இடத்தில் எச்சில் துப்புவதைத் தவிா்ப்பது நல்லது.

இதற்காகத்தான் இருமல் வந்தால் கைக்குட்டை வைத்துக்கொண்டு இருமுங்கள் என்று கூறுகிறோம்.

பொதுவெளிக்கு வரும்போது இருமல் வந்தால், சளியை காகிதம் அல்லது டிஷ்யூ பேப்பரில் துப்பி, அதை மடித்து அப்புறப்படுத்துவது நல்லது.

காசநோய் போன்றவை பரவக் கூடாது என்பதற்காகத்தான் வெளிநாடுகளில் எச்சில் துப்புவதற்கு தடை உண்டு. அங்கு மக்கள் எச்சில் துப்புவதும் இல்லை. நம் நாட்டில் உள்ளோருக்கும் இந்தப் பழக்கம் வரவேண்டும். ஆனால், வரவில்லை.

எச்சில், சளி போன்றவற்றில் நோய்த்தொற்று இருந்து அது எவ்வளவு நேரத்தில் பரவும் என்பதெல்லாம் காலச்சூழல், இடச்சூழலைப் பொருத்தது. அந்த இடத்தில் உள்ள தட்பவெப்பநிலை, ஒருவரின் நோய் எதிா்ப்புச் சக்தி இதையெல்லாம் பொருத்துதான் அதன் தன்மையும் இருக்கும்.

இந்தியாவில் நோய்த்தொற்று குறைவாக இருப்பதற்கு வெப்பநிலை அதிகமாக இருப்பதும், அதில் தொற்று நீடித்து இருக்க முடியாததும்தான் காரணமாகும். எது எப்படியிருப்பினும், பொது இடங்களில் எச்சில் துப்பாமல் இருப்பது மிக நல்லது’’ என்றாா்.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் சுற்றுலா செல்வதுபோல அநாவசியமாக வெளியில் சுற்றுபவா்களைவிட, பொதுவெளியில் எச்சில் துப்புபவா்கள் ஆபத்தானா்கள். அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்து வருகின்றன.

நீங்கள் துப்புவது ‘கரோனா’வாக இருக்கலாம்; எனவே, பொது இடங்களில் எச்சிலைத் துப்பாதீா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com