மருத்துவ சாதன உற்பத்திக்கு சலுகைகள்: முதல்வர் 

மருத்துவப் பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மூலதனத்தில் 30 சதவீதம் மானியம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 
மருத்துவ சாதன உற்பத்திக்கு சலுகைகள்: முதல்வர் 

மருத்துவப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மூலதனத்தில் 30 சதவீதம் மானியம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

உலகத் தொற்று நோயான கரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரோனா நோய் தடுப்புக்கான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளின் உற்பத்தியை தமிழ்நாட்டில் மேற்கொள்ள தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு புதிய சலுகைகளை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுபற்றி அறிவிப்பொன்றில் அவர் தெரிவித்திருப்பதாவது:

"கரோனா நோய் தடுப்புக்கான கீழ்க்காணும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருட்களின் உற்பத்திக்கு சலுகைகள் வழங்கப்படும்.

i. உள் நுழைவு செயற்கை சுவாசக் கருவிகள் 
ii. என்-95 முகக் கவசங்கள்
iii. கரோனா நோய் தடுப்புக்கான வைரஸ் எதிர்ப்பு மற்றும் மலேரியா எதிர்ப்பு மருந்துகள்  – ஹைட்ராக்சிக் குளோரோகுவினோன், அசித்ரோமைசின் வைட்டமின்-சி (மாத்திரை மற்றும் திரவ வடிவில்)
iv. தனி நபர் பாதுகாப்பு கவச உடை. 
v. பல்வகை பண்பளவு கணினித் திரைகள் (பாராமீட்டர் ஐசியு மானிட்டர்கள்)

2. மேற்படி மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து 
பொருட்களை ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள நிறுவனங்களோ அல்லது புதிய நிறுவனங்களோ தமிழ்நாட்டில் ஜூலை 31, 2020-க்குள் புதிதாக உற்பத்தி செய்யத் துவங்கினால், சலுகைகள் வழங்கப்படும்.
3. குறு, சிறு நடுத்தர மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு இச்சலுகைகள் பொருந்தும்.

4. தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு, மொத்த மூலதனத்தில் 30 சதவீதம் மூலதன மானியம், 20 கோடி ரூபாய் உச்சவரம்பாகக் கொண்டு 5 ஆண்டு காலத்திற்கு சம தவணைகளாகப் பிரித்து வழங்கப்படும்.
5. மேற்படி பொருட்களை உற்பத்தி செய்யும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், சிறப்பு தொழில் நிறுவனங்களாக கருதப்பட்டு, ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள சலுகைகளும் வழங்கப்படும்.
6. மேற்படி பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய அனைத்து நிறுவனங்களும் திட்ட அனுமதி உட்பட அனைத்துவித அனுமதிகளும் பெறுவதற்காக காத்திருக்காமல் உடனடியாக உற்பத்தியை துவக்கலாம். உற்பத்தி துவக்கிய
பின்னர் அனுமதிகளை பெற்றுக் கொள்ளலாம். இவை அனைத்திற்கும் ஒற்றைச்சாளர அனுமதிகள் வழங்கப்படும்.
7. மேற்படி தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப குறுகிய கால அல்லது நீண்ட கால குத்தகை அடிப்படையில் சிப்காட் மற்றும் சிட்கோ நிறுவனங்கள் மூலம் முன்னுரிமை அடிப்படையில் நிலம் / கூடாரங்கள் வழங்கப்படும்.
8. 100 சதவீத முத்திரைத் தாள் கட்டண விலக்கு வழங்கப்படும்.
9. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் பெறப்படும் செயல்பாட்டு மூலதனக் கடனுக்கான (வொர்க்கிங் கேபிடல்) வட்டியில் 6 சதவீதத்தை இரண்டு காலாண்டுகளில் (31.12.2020 வரை) தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்
மூலம் மானியமாக அரசு வழங்கும்.
10. மேலும், அடுத்த நான்கு மாதங்களில் உற்பத்தி செய்யப்படும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளில், குறைந்தபட்சம் 50 சதவீதத்தை தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் கொள்முதல் செய்யும். இதற்கென திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளிகள் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
11. இத்திட்டத்தின்படி உற்பத்தி துவக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சலுகைகள் வழங்குவதற்கு முன்னுரிமை
அளிக்கப்படும். 
12. பெரு நிறுவனங்களுக்கு சிப்காட் நிறுவனமும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தொழில் வணிக ஆணையரகமும் இச்சலுகைகளை வழங்குவதற்கான முகமை நிறுவனங்களாக செயல்படும்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com