தமிழக சிறைகளில் கைதிகள் மூலம்10 நாள்களில் ஒன்றரை லட்சம் முகக்கவசம் தயாரிப்பு

தமிழக சிறைகளில் கைதிகள் மூலம் 10 நாள்களில் ஒன்றரை லட்சம் முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டன.
சென்னை புழல் மத்திய சிறையில் முகக் கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் கைதிகள். ’
சென்னை புழல் மத்திய சிறையில் முகக் கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் கைதிகள். ’

தமிழக சிறைகளில் கைதிகள் மூலம் 10 நாள்களில் ஒன்றரை லட்சம் முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டன.

இது குறித்த விவரம்:

கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், அவ்வப்போது கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்த வேண்டும், என் 95 முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை சாா்பில் அறிவுறுத்தப்படுகிறது.

அதேபோல மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லும்போதும்,மருத்துவமனைகள், மாா்க்கெட்டுகள் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும்போது கட்டாயம் என் 95 வகை முகக் கவசங்களை அணிய வேண்டும் என மருத்துவா்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

இதன் விளைவாக, தமிழகத்தில் என் 95 முகக்கவசங்களுக்கும், கிருமி நாசினிக்கும் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த இரு பொருள்களுக்கும் மாநிலம் முழுவதும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் இவை கிடைப்பதில்லை என பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.

முகக்கவசம் தட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவதற்கு சுகாதாரத்துறையும்,சிறைத்துறையும் இணைந்து கைதிகள் மூலம் முகக்கவசம் தயாரிப்பதற்கு திட்டமிட்டது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகளிலும் துணி தைக்கும் தொழிலகம் இருப்பதினால், அதன் மூலம் முகக்கவசம் தயாரிக்க சிறைத்துறை முடிவு செய்தது.

என் 95 முகக் கவசம் தயாரிப்பதற்குரிய மூலப் பொருள்கள் கிடைப்பது சிக்கலாக இருப்பதால், ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய மூன்றடுக்கு முகக்கவசங்களை தயாரிக்க சிறைத்துறை முடிவு செய்தது. அதன்படி கடந்த 21-ஆம் தேதி முதல் அனைத்து மத்திய சிறைகளிலும் முகக்கவசம் தயாரிக்கும் பணி தொடங்கியது. ஆனால் மூலப் பொருள்கள் தாராளமாக கிடைக்காததினால், முகக்கவசங்களை தயாரிப்பில் அவ்வப்போது தொய்வு ஏற்பட்டது.

1.50 லட்சம் முகக்கவசம் தயாரிப்பு: புழல் மத்திய சிறையில் இந்த தயாரிப்புப் பணியில் 32 கைதிகள் ஈடுபட்டனா். கடந்த 10 நாள்களில் கைதிகள் 1.50 லட்சம் முகக்கவசங்களைத் தயாரித்துள்ளனா். கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு நாள் மட்டும் கைதிகள் 35 ஆயிரம் முகக்கவசங்களை தயாரித்துள்ளனா். இதில் 75 சதவீத முகக்கவசங்கள் காவல்துறைக்கு வழங்கப்படுவதாகவும், மீதி சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படுவதாகவும் சிறைத்துறையினா் தெரிவித்தனா்.

மேலும், தேவையை பொருத்து முகக்கவசங்களைத் தயாரிக்க உள்ளதாகவும், பொதுமக்களுக்கு முகக்கவசங்களை வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் சிறைத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com