ஈரோடு மாவட்டத்தில் 95,692 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்: ஆட்சியர்

ஈரோடு மாவட்டத்தில் 25,557 குடும்பங்களை சேர்ந்த 95,692 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் 95,692 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்: ஆட்சியர்

ஈரோடு மாவட்டத்தில் 25,557 குடும்பங்களை சேர்ந்த 95,692 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் கொல்லம்பாளையம், ரயில்வே காலனி, பி.பெ.அக்ரஹாரம், வீரப்பன்சத்திரம், அத்தானி, கருவள்வாடிபுதூர், கோபி மற்றும் சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு குறித்து ஆட்சியர் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் கடந்த மார்ச் 15 ஆம் தேதி முதல் கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஈரோடு மாவட்டம் வருகை தந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 83 நபர்கள் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் 32 நபர்களுக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 4 நபர்கள் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையிலும், 28 நபர்கள் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈரோடு சுல்தான்பேட்டை, கொல்லம்பாளைம் மற்றும் மாவட்டம் முழுவதும் 25,557 குடும்பங்கள் 95,692 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், அவர்கள் இருக்கும் இடத்திற்கே மாவட்ட நிர்வாகத்தின் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும் இவர்களை மருத்துவக்குழுக்கள் காலை மற்றும் மாலை இரு நேரங்களிலும் கண்காணித்து வருகின்றனர்.

அடுத்து வரும் நாட்கள் முக்கிய சவாலான நாட்கள் ஆகும். இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளி ஆட்களுடன் பழகுவதை தவிர்க்க வேண்டும். கரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தைப் பொருத்தவரையில் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு, பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தவறான தகவல்களை சமூக ஊடகம் மற்றும் வலைதளங்களில் பரப்புவோர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தவறான மருத்துவக் குறிப்புகளை குறுஞ்செய்தியின் மூலம்  பரப்புவோர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றார்.

முன்னதாக ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் ரயில்வே காலனி, பி.பெ.அக்ரஹாரம் பகுதிகளில் உள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து நாள்தோறும் மேற்கொள்ள வேண்டிய தன்சுத்தம் குறித்து அறிவுறுத்தினார். தொடர்ந்து வீரப்பன்சத்திரம் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாய விலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு, கரோனா வைரஸ் நோய் தடுப்பு நிவாரண உதவிகள் வழங்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அத்தாணி பகுதியில் உள்ள சரஸ்வதி திருமண மண்டபத்தில் சுமார் 17 நபர்கள், காசி யாத்திரை சென்று வந்த காரணத்தினால் சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை ஆகியோரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கருவள்வாடிபுதூர் மற்றும் கோபி, பண்ணாரி சோதனை சாவடி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை பணிகளை பார்வையிட்டு, அரசின் அனைத்து விதிமுறைகளையும் நடைமுறைப்படுத்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வுகளின்போது மாநகராட்சி ஆணையர் எம்.இளங்கோவன், கோபி வருவாய் கோட்டாட்சியர் ஜெயராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com