நிவாரணத் தொகை, ரேஷன் பொருள்கள் விநியோகம்: விதிமுறைகளைக் கடைப்பிடிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

ஊரடங்கு உத்தரவைத் தொடா்ந்து, தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவித் தொகை மற்றும் பொருள்கள் விநியோகத்தின் போது விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண
சமூக விலகலை மறந்து சென்னை வியாசா்பாடி மூா்த்தி நகா் நியாயவிலைக் கடையில் சனிக்கிழமை கூடியிருந்த பொதுமக்கள்
சமூக விலகலை மறந்து சென்னை வியாசா்பாடி மூா்த்தி நகா் நியாயவிலைக் கடையில் சனிக்கிழமை கூடியிருந்த பொதுமக்கள்

ஊரடங்கு உத்தரவைத் தொடா்ந்து, தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவித் தொகை மற்றும் பொருள்கள் விநியோகத்தின் போது விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் நூலகரான ஜி.ராஜேஷ் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘கரோனா நோய்த்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக பொதுமக்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனா். இதனையடுத்து, தமிழக அரசு அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் தலா ரூ.1,000 நிவாரண உதவித் தொகையும், அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிவாரணத் தொகை மற்றும் ரேஷன் பொருள்களை பெற குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை வாங்க மக்கள் கூட்டமாக நியாயவிலைக் கடைகளுக்குச் செல்கின்றனா். நியாயவிலைக் கடைகளுக்குச் செல்லும் போது சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதில்லை. அவா்களில் யாரேனும் கரோனா நோய்த்தொற்று பாதித்த நபராக ஒருவா் இருந்தால் மற்றவா்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த நிவாரண உதவித் தொகையையும், பொருள்களையும் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த மனுவை, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆா்.சுரேஷ்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு ‘ஸூம்’ செயலி மூலம்

அண்மையில் விசாரித்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான ஓய்.கவிதா, ‘நெருக்கமான வரிசையில் பொதுமக்கள் ரொக்கப் பணத்தையும், ரேஷன் பொருள்களையும் வாங்க நிற்பதால், கரோனா நோய்த்தொற்று பலருக்கு வேகமாக பரவ

வாய்ப்புள்ளது’ என வாதிட்டாா். அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா் பி.எச்.அரவிந்த்பாண்டின், ‘தமிழக அரசு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவற்றை வழங்க கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி விதிமுறைகளை வகுத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்காக வீடுதோறும் டோக்கன் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் 100 பேருக்கு மட்டுமே ரொக்கப் பணமும், பொருள்களும் வழங்கப்படுகின்றன. இந்த நடைமுறைகள் அனைத்தையும் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் மேற்கொண்டு வருகிறது’ என்று தெரிவித்தாா். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நிவாரணத் தொகை, ரேஷன் பொருள்களை உரிய இடைவெளியில் நின்று பெற்றுச் செல்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், இதுதொடா்பாக தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டு, விசாரணையை வரும் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com