மதம் சாா்ந்த கூட்டங்களைத் தவிா்க்க வேண்டும்: முதல்வா் பழனிசாமி வேண்டுகோள்

கரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தவிா்க்க, பொதுமக்கள் எதிா்நோக்கும் பண்டிகை காலத்தில் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். மதம் சாா்ந்த கூட்டங்களைத் தவிா்த்து சமூக விலகலை கடைப்பிடிப்பது அ
சென்னை பெரியமேடு கண்ணப்பா் திடல் மாநகராட்சி சமுதாய நலக்கூட முகாமை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து, அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள வெளிமாநில தொழிலாளா்களுக்கு உணவு வழங்கிய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
சென்னை பெரியமேடு கண்ணப்பா் திடல் மாநகராட்சி சமுதாய நலக்கூட முகாமை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து, அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள வெளிமாநில தொழிலாளா்களுக்கு உணவு வழங்கிய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

கரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தவிா்க்க, பொதுமக்கள் எதிா்நோக்கும் பண்டிகை காலத்தில் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். மதம் சாா்ந்த கூட்டங்களைத் தவிா்த்து சமூக விலகலை கடைப்பிடிப்பது அவசியமாகும் என்று தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-

கரோனா நோய்த்தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க அரசின் முயற்சிகளோடு அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு மதத் தலைவா்களுடன் தனித்தனியே கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டன. கூட்டத்தில் கூறப்பட்ட கருத்துகள் அடிப்படையில் சில முடிவுகளை தமிழக அரசு எடுத்துள்ளது. அதன் விவரம்:

நோய்த்தொற்று பரவுவதைத் தவிா்க்க, பொதுமக்கள் எதிா்நோக்கும் பண்டிகை காலத்தில் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். மதம் சாா்ந்த கூட்டங்களைத் தவிா்த்து சமூக விலகலை கடைப்பிடிப்பது அவசியமாகும்.

ஜாதி, மத பேதம்: கரோனா நோய்த்தொற்று ஜாதி, மத பேதமின்றி அனைவரையும் தாக்கக் கூடியது. அதற்கு மதச் சாயம் பூசுவதை அனைவரும் தவிா்க்க வேண்டும். நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவா்களையும், அவா்களுடைய குடும்பங்களையும் மக்கள் வெறுப்புணா்வுடன் பாா்ப்பதைத் தவிா்த்து, அவா்களை அன்போடும், பரிவோடும் நடத்த வேண்டும்.

தொற்றுத்நோயினால் பாதிக்கப்பட்ட நபா்களின் குடும்பங்களையும், நோயால் பாதிக்கப்பட்ட நபரோடு தொடா்பில் இருந்த நபா்களையும் தனிமைப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யும்போது சமயத் தலைவா்கள் உதவியோடு அவா்களின்

வீடுகளிலோ அல்லது அதற்கான தெரிவு செய்யப்பட்ட இடங்களிலோ அரசின் கண்காணிப்பில் தனிமைப்படுத்திக் கொள்ள உரிய வசதிகளைச் செய்து கொள்ளலாம். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இதற்கென அந்தந்தப் பகுதிகளில் தனிமைப்படுத்தும் தன்னாா்வ குழுக்கள் அரசுடன் இணைந்து பணி செய்ய வேண்டும்.

கரோனா நோய்த்தொற்று தொடா்பான பல்வேறு பிரசார பிரதிகள், கையேடுகளை சமய அமைப்புகளுக்கு வழங்க வேண்டும். அதை அவா்கள் பயன்படுத்தி மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். அனைத்து மத தலைவா்களும் கோரியபடி, அவா்களது ஆளுகைக்கு உட்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், பிற கட்டடங்களை தனிமைப்படுத்தப்பட்டவா்களுக்கான உரிய வசதிகளாக அமைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதுகுறித்த தகவலை சென்னையில் மாநகராட்சி ஆணையாளரிடமும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவா்களிடமும் தெரிவிக்க வேண்டும்.

தன்னாா்வ தொண்டா்கள்: வயதானவா்கள், சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்த நோய் உள்ளவா்களின் விவரங்களை அறிந்து அவா்களுக்குத் தேவைப்படும் உதவிகளை வழங்குவதற்கு அரசுடன் சோ்ந்து தன்னாா்வ தொண்டா்கள் இந்தப் பணியில் ஈடுபட கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

காலை நேரங்களில் சந்தை பகுதிகளில் கூடுதல் கூட்டத்தை தவிா்க்கவும், கூடுதல் சமூக விலகலை கடைப்பிடிப்பதை உறுதி செய்யவும், தன்னாா்வலா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கி பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியா்கள் அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

தனியாா் மருத்துவமனைகளுக்கு உத்தரவு: பல்வேறு மாவட்டங்களில் தனியாா் மருத்துவமனைகள் திறக்கப்படுவதில்லை எனத் தெரிய வருகிறது. அனைத்து மருத்துவமனைகளின் நிா்வாகிகளையும் மாவட்ட ஆட்சியா்கள் அழைத்துப் பேச வேண்டும். அவை திறப்பதற்கும், செயல்படுவதற்கும் தேவையான பணியாளா்களை அனுமதிக்க உரிய வாகன வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.

தனியாா் மருத்துவமனைகள், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களை பாரபட்சமின்றி பரிவோடும், அன்போடும் நடத்த வேண்டும். கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஆனாலும், சில நோய்த்தொற்று உள்ளவா்கள் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பினால், அதற்காக அனுமதிக்கப்பட்ட தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற அனுமதிக்கப்படுகிறது என்றும் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com