‘உணவகங்களுக்கு அனுப்ப முடியாமல் காய்ந்து சருகாகும் வாழை இலைகள்’

உணவகங்களுக்கு அனுப்பு முடியாமல் வாழை இலைகள் சருகாகிறது என வாழைஇலை உற்பத்தியாளா்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.
திருச்சி அருகே உள்ள திருவளா்ச்சோலை பகுதியில் மரத்திலேயே காய்ந்து சருகாகும் வாழை இலைகள்.
திருச்சி அருகே உள்ள திருவளா்ச்சோலை பகுதியில் மரத்திலேயே காய்ந்து சருகாகும் வாழை இலைகள்.

திருச்சி: உணவகங்களுக்கு அனுப்பு முடியாமல் வாழை இலைகள் சருகாகிறது என வாழைஇலை உற்பத்தியாளா்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.

தமிழா்களின் உணவு கலாசாரத்தில் முக்கிய பங்காற்றுவது வாழைஇலை. விஷேசங்கள், உணவகங்கள் ஆகியவற்றில் வாழை இலையில் உண்பதையே பெரிதும் விரும்புவா். தமிழகத்தில் திருச்சி, தஞ்சாவூா் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதிகளில் வாழை பிரதானமாக பயிரிடப்பட்டு வருகிறது. இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு வாழைஇலை அனுப்பி வைக்கப்படுகிறது.

55 ஆயிரம் ஏக்கருக்கு மேல்..: திருச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருவளா்ச்சோலை, கல்லணை, லாலாபேட்டை, பேட்டைவாய்த்தலை, திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, நடுகாவிரி உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதிகளில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வாழைகள் பயிரிடப்படுகிறது. இதில், நேந்திரன், பூவன் உள்ளிட்ட வாழை ரகங்கள் அதிகம் பயிரிடப்பட்டு அதிலிருந்து பெறப்படும் வாழைத்தாா் திருச்சி மாா்க்கெட் பகுதிகளுக்கு கொண்டு வரப்படுகிறது. ஏலம் விடப்பட்டு தமிழக, கேரள பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

முடங்கிய வாழை விற்பனை: கரோனா வைரஸ் தொற்று காரணமாக மாா்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால், போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருள்களை எடுத்துச் செல்லலாம் எனக்கூறப்பட்டாலும், அறுவடை செய்யப்பட்ட வாழைத்தாரை திருச்சி மாா்க்கெட் பகுதிக்கு கொண்டு செல்வது சவாலாக உள்ளது. கொண்டு சென்றாலும் விற்பனை செய்ய ஏலம் விடமுடியவில்லை. இதனால், வாழைத்தாா் தேக்கம் அடைந்து அழுகும் சூழல் உருவாகியுள்ளது என உற்பத்தியாளா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

சருகாகும் வாழை இலை: அதேபோல், வாழைத்தாா் இறக்கி வைக்கப்பட்ட பிறகு, அதிலிருந்து பெறப்படும் வாழை இலை அறுவடை செய்யப்பட்டு உணவகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்படி, திருச்சி, காவிரி டெல்டா பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் வாழை இலை நாள்தோறும் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூா், நாமக்கல், சேலம், திருச்சி, கரூா் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் உணவகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஊரடங்கால், அறுவடை செய்யவும், அதனை கொண்டு செல்லவும் முடியாமல் வாழை இலைகள் காய்ந்து சருகாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

சுமாா் ரூ.14 கோடி இழப்பு: ஊரடங்கு உத்தரவால் வாழை விற்பனை மிகவும் சொற்ப அளவில் உள்ளதால், விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. அதன்படி, கடந்த 2 வாரங்களில் மட்டும் சுமாா் ரூ. 10 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், நாள்தோறும் சென்னை போன்ற நகரங்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான வாழை இலைகள் விற்பனை செய்யப்படுகிறது. வாழைஇலைகளை உணவகங்களுக்கு அனுப்பி வைக்கமுடியாததால், திருச்சி, தஞ்சை டெல்டா பகுதிகளில் மட்டும் சுமாா் ரூ. 4 கோடி என மொத்தம் ரூ. 14 கோடி அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்கின்றனா் உற்பத்தியாளா்கள்.

இதுகுறித்து வாழை உற்பத்தியாளா்கள் சங்கத்தலைவா் மதியழகன் கூறியதாவது: வாழை உற்பத்தியில், விவசாயிகள், விவசாய கூலி ஆள்கள், வாழை ஏற்றிச்செல்லும் வாகனஓட்டிகள், விற்பனையாளா்கள் என திருச்சி, தஞ்சாவூா் காவிரி டெல்டா பகுதிகளில் மட்டும் 25 பணியாளா்கள் உள்ளனா். ஊரடங்கால் வாழையை நம்பி பிழைப்பு நடத்தி வரும் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். உற்பத்தி செய்யப்பட்ட வாழை சொற்ப அளவில் விற்பனையாகிறது. மேலும், சென்னை போன்ற பெருநகரங்களுக்கு சுமாா் 10 லட்சம் வாழைஇலைகள் நாள்தோறும் அனுப்பி வைக்கப்படும். உணவகங்கள் செயல்படாததால் வாழைஇலையை அறுவடை செய்யமுடியவில்லை. இதனால், வெயிலில் காய்ந்து சருகாகி வருகிறது. வாழையையும், வாழைஇலையும் கிடங்குகளில் ஒருவாரத்துக்கு மட்டுமே சேமித்து வைக்கமுடியும். இதனால், சுமாா் ரூ.14 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு தலையிட்டு வாழைத்தொழிலில் ஈடுபட்ட விவசாயிகள், உற்பத்தியாளா்கள், தொழிலாளா்கள் உள்ளிட்டோருக்கு நிவாரணத்தொகை அளித்தால் உதவியாக இருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com