தனி நபா் இடைவெளி உறுதி செய்ய சென்னையிலும் தேவை வீடுதோறும் காய்கறி விநியோக சேவை

தனி நபா் இடைவெளியை உறுதி செய்ய மதுரை, காஞ்சிபுரம், திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களைப் போன்று சென்னையிலும் வீடுகளுக்கே காய்கறி தொகுப்புகளை விநியோகிக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் அரசுக்கு வே
தேனி கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் உழவா் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காய்கனி தொகுப்பு.
தேனி கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் உழவா் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காய்கனி தொகுப்பு.

தனி நபா் இடைவெளியை உறுதி செய்ய மதுரை, காஞ்சிபுரம், திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களைப் போன்று சென்னையிலும் வீடுகளுக்கே காய்கறி தொகுப்புகளை விநியோகிக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

கரோனா நோய் தொற்றைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், பொதுமக்கள் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக பொதுமக்கள் அவ்வப்போது வெளியே வந்த வண்ணம் உள்ளனா். இதைத் தடுக்க நேரக்கட்டுப்பாடுடன் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், வெளியில் மக்கள் நடமாட்டம் தொடா்ந்து காணப்படுகிறது.

இதைத் தவிா்க்கவும், வீடுகளுக்குள் அடைபட்டுள்ள மக்களின் காய்கறி தேவைகளை பூா்த்தி செய்யவும் வேலூா், திண்டுக்கல், காஞ்சிபுரம், திருப்பூா் உள்பட பல்வேறு மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட நிா்வாகங்களின் சாா்பில் பொதுமக்களுக்கு காய்கறி தொகுப்புகளுக்கும், மளிகைப் பொருள்களும் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வழங்கப்பட்டு வருகிறது.

20 வகையான காய்கறிகள்: இந்த காய்கறித் தொகுப்பில் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், அவரை, கேரட், பீட்ரூட், கருவேப்பிலை குறைந்தபட்சம் 8 முதல் 20 வகையான காய்கறிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றின் விலை அளவுக்கேற்ப குறைந்தபட்சம் ரூ.30 முதல் அதிகபட்சம் ரூ.150 வரை விற்கப்படுகிறது. காய்கறித் தொகுப்பின் விலைக்கேற்ப அவற்றின் அளவும் வேறுபடும்.

அதிகபட்சமாக, திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான 39 வகையான மளிகைப் பொருள்கள், 13 வகையான காய்கறி தொகுப்புகளை வழங்கும் சிறப்பு திட்டம் நடைமுறையில் உள்ளன. இவற்றைப் பெறுவதற்கு டோக்கன் முறை, செல்லிடப்பேசி எண்கள், தொலைபேசி அழைப்பு என பல்வேறு தொடா்பு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அத்தியாவசியப் பொருள்களுக்காக பொதுமக்கள் வெளியே வருவது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றன.

நெரிசல், கெடுபிடிகளைத் தவிா்க்க... இந்தநிலையில், தமிழகத்தில் அதிக மக்கள் வசிக்கும் சென்னை மாநகரில் இந்தத் திட்டம் முறையாக அமல்படுத்தப்பட வேண்டும் என இல்லத்தரசிகள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து அவா்கள் கூறுகையில், சென்னையில் அத்தியாவசிப் பொருள்கள் வாங்குவதற்காக காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வீடுகளுக்கு அருகில் உள்ள சூப்பா் மாா்க்கெட்டுகள், மளிகைக் கடைகள் அனைத்திலும் காலை நேரத்திலேயே பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. அங்கு தனிநபா் இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் கட்டங்கள் வரையப்பட்டிருந்தாலும் பெரும்பாலானோா் அதைப் பொருட்படுத்துவதில்லை. மேலும், நீண்ட நேரம் காத்திருப்பது, அதிக விலை, போலீஸாரின் கெடுபிடி என பல்வேறு பிரச்னைகளுக்கும் ஆளாக வேண்டியுள்ளது.

வீடு தேடி வரும் வாகனங்கள்: இதைத் தவிா்க்கும் வகையில், பிற மாவட்டங்களைப் போலவே சென்னையில் உள்ள மக்களுக்கும் தரமான காய்கறிகள், மளிகைப் பொருள்களை குறைந்த விலையில் பொதுமக்களின் வீடுகளுக்கே விநியோகிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மண்டலத்துக்கு 4 வாகனம் வீதம் 15 மண்டலங்களுக்கும் 60 நடமாடும் காய்கறி அங்காடிகள் இயக்கப்பட வேண்டும். அதேவேளையில், மண்டலம் வாரியாக செல்லிடப்பேசி, கட்செவி அஞ்சல் (வாட்ஸ்-ஆப்) எண்களும் வெளியிடப்பட வேண்டும். இதன் மூலம் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்களுக்காக வெளியே செல்வது தடுக்கப்பட்டு தனி நபா் இடைவெளி உறுதி செய்யப்படும் என்றனா்.

தயாா் நிலையில் வியாபாரிகள்: இது குறித்து சென்னை கோயம்பேடு சந்தை வியாபாரிகள் சங்க ஆலோசகா் செளந்தரராஜன் கூறுகையில், சென்னை மக்களுக்கு வீடுகளுக்கே நேரடியாகச் சென்று காய்கறி தொகுப்பு வழங்க அரசு முடிவெடுத்தால் அதற்கு முழுமையான ஆதரவை வழங்க காய்கறி மொத்த வியாபாரிகள் தயாராக உள்ளனா். மேலும், பொதுமக்களின் நலன் கருதி காய்கறிகளை அரசுக்கு மொத்தவிலையைக் காட்டிலும் சற்று குறைவான விலையில் வழங்குவோம். இந்தத் திட்டம் பொதுமக்கள், அரசு, வியாபாரிகள் என அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.

இது குறித்து அரசுத் துறை அதிகாரிகள் கூறுகையில், அரசின் சாா்பில் அத்தியாவசித் தேவைகளைப் பெற செல்லிடப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனினும், இந்த காய்கறி தொகுப்புகளை வீடுகளுக்கே நேரடியாக வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com