ஊரடங்கு: விலையின்றி மண்ணில் உரமாக்கப்படும் கேந்தி மலர்கள்!

ஊரடங்கு காரணமாக மலர் வணிகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால்
ஊரடங்கு: விலையின்றி மண்ணில் உரமாக்கப்படும் கேந்தி மலர்கள்!

ஊரடங்கு உத்தரவு காரணமாக மலர் வணிகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் திருநெல்வேலி மாவட்டத்தில் வயலில் வண்ணமயமாகப் பூத்துக்குலுங்கும் கேந்தி மலர்களுக்கு விலையில்லாததால் மண்ணில் உரத்திற்காக வெட்டி வீழ்த்தும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி பாசனத்தின் கீழ் உள்ள கால்வரத்து பாசனப் பகுதிகளில் பெரும்பாலும் நெல், வாழை, உளுந்து பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. மானாவாரி மற்றும் தோட்டப்பயிர்களாகப் பருத்தி, வெங்காயம், பாசிப்பயறு உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன. ஆனால், தகுந்த விலை கிடைக்காததாலும், பருவம் தவறிப் பெய்யும் மழையாலும் பயறுவகை மற்றும் காய்கனி வகை சாகுபடியில் போதிய வருவாய் கிடைக்காத சூழல் உருவாகியதால் மலர் சாகுபடி மீதான ஆர்வம் அதிகரித்தது.

இம்மாவட்டத்தில் பிச்சி, மல்லி, கேந்தி, சம்பங்கி, கோழிக்கொண்டை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மலர் வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. திருநெல்வேலி சங்கர்நகர், சிவந்திப்பட்டி, மானூர், பள்ளமடை, ஆளவந்தான்குளம், பல்லிக்கோட்டை, செட்டிக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் மல்லிகைப் பூ சாகுபடி மிகவும் அதிகமாக உள்ளது. இதேபோல, ராதாபுரம், சங்கரன்கோவில், ஆலங்குளம் வட்டார பகுதிகளிலும் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. பாவூர்சத்திரம், கீழப்பாவூர், மானூர் பகுதிகளில் கோழிக்கொண்டை, கேந்தி வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. திருநெல்வேலி, சங்கரன்கோவில், தக்கலைப் பகுதிகளில் உள்ள பூ சந்தைகளில் தினமும் பறிக்கப்படும் மலர்களைக் கொடுத்து வரவு வைத்து வாரந்தோறும் விவசாயிகள் வருவாய் பெற்று வந்தனர்.

சந்தைகள் மூடல்: கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் இம்மாதம் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பூக்களுக்கான சந்தைகள், கால்நடை சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. திருநெல்வேலி சந்திப்பு உள்பட அனைத்து இடங்களிலும் இயங்கி வந்த பூக்கடைகளில் ஒரு சில கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. வீடுகள் தோறும் சென்று பூ விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. கோயில்கள், விழாக்கள் என அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் மலர்களுக்கான தேவை இல்லை. கடந்த 25 ஆம் தேதி முதல் பூக்களை அறுவடை செய்து விற்பனை செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். 

உரமாகும் மலர்கள்: இதுகுறித்து பள்ளமடையைச் சேர்ந்த மலர் விவசாயி ராஜேந்திரன் கூறியது: எங்கள் பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மலர் சாகுபடி நடைபெற்று வருகிறது. நான் எனது வயலில் கடந்த மூன்று ஆண்டுகளாக மஞ்சள் கேந்தி மலர்களைப் பயிரிட்டு வருகிறேன். 40 நாளிகளில் மஞ்சள் கேந்தி பூக்கள் அறுவடைக்கு வரும். பயிர்ப் பராமரிப்பைப் பொருத்து அதிகபட்சம் 2 மாதங்கள் வரை தொடர்ந்து அறுவடை செய்துகொண்டே இருக்கலாம். நிகழாண்டில் பங்குனி உத்திர விழாவைக் கணக்கில் கொண்டு கடந்த மாசி மாதத்தில் கேந்தியை சாகுபடி செய்தோம். கடந்த வாரத்தில் அறுவடைக்குத் தயாராகியது. ஆனால், கரோனா வைரஸால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து கோயில்களிலும் பங்குனி உத்திரத் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டன. 

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பங்குனி உத்திர நாளில் ஒரு கிலோ கேந்திப்பூக்கள் அதிகபட்சம் ரூ.150 வரை விலை போகும். ஏனெனில் இந்த நாளில் சின்னஞ்சிறு கோயில்களில் கூட பிரமாண்ட மலர்மாலைகளைப் பக்தர்கள் உபயோகிப்பார்கள். நிகழாண்டில் விழா இல்லாததால் மலர் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். இதனால் வயலில் அறுவடை செய்யாமல் இருந்த மலர்களை பிடிங்கி கால்நடைகளுக்கும், சில இடங்களில் உரமாக்கவும் பயன்படுத்தி வருகிறோம். மல்லிகை செடிகளிலும் பூக்களைப் பறித்து விற்பனைக்கு அனுப்ப முடியாததால் செடிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, முற்றிலும் நஷ்டத்தைச் சந்தித்துள்ள மலர் விவசாயிகளுக்கு தமிழக அரசு கூடுதலாக நிவாரண உதவி அளிக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை வட்டாரங்கள் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் மலர் விவசாயிகள் குளிர்பதன கிட்டங்கி தொடங்க பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். முதல்கட்டமாக வாழைகளுக்கான குளிர்பதன கிட்டங்கி உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக மலர்களுக்கு ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

காய்கனி, பழங்களைச் சாகுபடி செய்துள்ள விவசாயிகளைக் காட்டிலும், மலர் விவசாயிகளுக்கு ஊரடங்கு உத்தரவால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். காய்கனி சந்தையைப் போல மலர் சந்தைகளுக்கு விலக்கு அளிக்க இயலாது எனத் தெரிவித்துள்ளனர். ஏனெனில் மலர்கள் அத்தியாவசிய பொருள்களின் பட்டியலில் வராது. நஷ்டமடைந்துள்ள மலர் விவசாயிகளுக்கு நிவாரணம் அளிப்பது குறித்து அரசுதான் முடிவெடுக்க முடியும். உயரதிகாரிகளுக்கு இந்தச் சூழல் குறித்துத் தெரிவிக்கப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com