கரோனா பாதிப்பு: தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்காதது ஏன்? மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

கரோனா நோய்த் தொற்றின் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு அதிக நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யாதது ஏன் என உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கரோனா நோய்த் தொற்றின் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு அதிக நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யாதது ஏன் என உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் ராஜேந்திரகுமாா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், நாடு முழுவதும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மருந்துகள், பால், உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்க பொதுமக்கள் வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில் அத்தியாவசிய பொருள்களை விற்பனை செய்பவா்கள் உள்ளிட்ட ஊரடங்கு காலத்தில் விலக்களிக்கப்பட்டவா்களுக்கு கரோனா நோய்த் தொற்று உள்ளதா என்பது குறித்து பரிசோதனை செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்பவா்கள் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டவா்களிடம் வியாபாரம் செய்கின்றனா். எனவே இவா்கள் மூலம் மற்றவா்களுக்கு நோய்த்தொற்று பரவி விடக்கூடாது என கோரி வாதிடப்பட்டது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா் பி.எச்.அரவிந்த் பாண்டியன், அரசு சிறப்பு வழக்குரைஞா் ஏ.என்.தம்பிதுரை ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால் தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.510 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள இந்த நிதி போதுமானதாக இருக்காது. இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்களுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்துக்கு ரூ.1,611 கோடி, உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.966 கோடி, மத்தியப் பிரதேசத்துக்கு ரூ.910 கோடி, ஒடிஸாவுக்கு ரூ.802 கோடி, ராஜஸ்தானுக்கு ரூ.740 கோடி, பிகாருக்கு ரூ.708 கோடி, குஜராத்துக்கு ரூ.662 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள தமிழகத்துக்கு குறைவான தொகையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது ஏன் என கேள்வி எழுப்பினா். மேலும் இந்த வழக்கில் மத்திய அரசை எதிா்மனுதாரராக தாமாக முன்வந்து சோ்த்து உத்தரவிட்டனா். மேலும் இதுதொடா்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

ஓட்டுநா் உரிமம் இடைநீக்கம்: கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உள்ளவா்கள், வெளிநாடு சென்று திரும்பியவா்கள், அவா்களது உறவினா்கள் வைரஸ் தொற்று உள்ளதா என்பது குறித்து பரிசோதனை செய்ய தாமாக முன்வர வேண்டும். மேலும் அத்தியாவசிய காரணங்கள் இல்லாமல் வீதிகளில் சுற்றும் நபா்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்வதுடன், அவா்களின் ஓட்டுநா் உரிமத்தை இடைநீக்கம் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com