களைகட்டி வரும் இணையவழி இலக்கியக் கூட்டங்கள்!

இந்த ஊரடங்கு காலத்தில், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கூட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ளனர் இலக்கியச் செயற்பாட்டாளர்கள்.
களைகட்டி வரும் இணையவழி இலக்கியக் கூட்டங்கள்!

பொதுமக்களின் மொத்த இயக்கமும் முடங்கிப் போனதைப் போலவே, தமிழ்நாடு முழுவதும் சிறியதும் பெரியதுமாக நடந்து வந்த இலக்கியக் கூட்டங்களும் முடங்கியுள்ள இந்த ஊரடங்கு காலத்தில், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கூட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ளனர் இலக்கியச் செயற்பாட்டாளர்கள்.

கடந்த 20 நாட்களில் இம்முறை பரவிப் பரவி இப்போது ஏறத்தாழ எல்லா மாவட்டங்களிலும், தினமும் கூட இணையவழிக் கூட்டங்கள் களைகட்டத் தொடங்கியிருக்கின்றன.

குமரி மாவட்டத்து இலக்கியவாதிகள் சிலர் தொடங்கி வைத்த இக்கூட்டங்கள், மெல்ல ராஜபாளையம், திருச்சி, நாமக்கல் எனப் பரவியிருக்கிறது. குமரியில் மட்டும் இதுவரை 11 இலக்கியக் கூட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். 

இதுகுறித்து நாகர்கோயில் தூய சவேரியார் கத்தோலிக்கப் பொறியியல் கல்லூரியின் நூலகரும், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்டச் செயலருமான முனைவர் எம். விஜயகுமார் கூறியது:

ஏற்கெனவே கல்விப் புலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த இணையச் செயலிகள்தான். புதிதொன்றும் இல்லை. 'ஜூம்', 'கூகுள் ஹேங்அவுட்ஸ்', 'கூகுள் மீட்', 'கோடூ மீட்', 'ஸ்கைப் பார் பிசினஸ்', 'பிக் புளூ பட்டன்', 'ஸ்லேக்', 'சிஸ்கோ வெப்எக்ஸ்' என செயலிகள் ஏராளம் உள்ளன. இவற்றில் 'ஜூம் க்லௌடு மீட்டிங்' என்ற செயலி எளிதானதாக இருக்கிறது.

இதைத்தான் நாங்கள் பயன்படுத்துகிறோம். புதன்கிழமை வரை 11 மெய்நிகர் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. 'வெர்சுவல் மீட்டிங்' என்பதை 'மெய்நிகர்' கூட்டம் எனத் தமிழ்ப்படுத்தியிருக்கிறோம். தினமும் இரவு 7 மணிக்கு எங்கள் கூட்டங்கள் தொடங்குகின்றன.

அமெரிக்காவில் இருந்து ஆர்.எம். பெருமாள், கொச்சினில் இருந்து நீலபிரியன், கொல்கத்தாவில் இருந்து டெரன்ஸ் சாமுவேல் என மாநிலம் கடந்தும், நாடு கடந்தும்கூட பங்கேற்கிறார்கள்.

40 நிமிடங்கள் இலவசமாக நடத்திக் கொள்ள முடியும். அதற்கு மேல் என்றால் பணம் கட்ட வேண்டும். குறைந்தபட்சம் 3 பேரும் அதிகபட்சம் 100 பேரும் பங்கேற்கலாம். எங்கள் கூட்டங்களில் வந்து போவோராக 100 பேர் இருந்தாலும் சராசரியாக 40 பேர் தினமும் பங்கேற்கிறார்கள்.

எங்கள் தொடர்புகளில் உள்ள ராஜபாளையம் கண்மணி ராசா, திருச்சி கலியமூர்த்தி, ராசிபுரம் நாணற்காடன், சேலம் ராஜா, கோவை ப.பா. ரமணி போன்றோர் அந்தந்தப் பகுதிகளில் கூட்டங்களை தனித்தனியே நடத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

குமரி மாவட்டத்தில் 'இலைகள்' என்ற அமைப்பினர் வாரம் தோறும் இலக்கியக் கூட்டத்தை நடத்தி வருகிறார்கள். வீட்டிலியே அடைந்து கிடக்கும் இந்தக் காலத்தில் இதுபோன்ற செயலிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறார் விஜயகுமார்.

தருமபுரியில் 'அறி(வு)முகம்' என்ற பெயரில் மாதக் கூட்டங்களாக நடைபெற்று வந்த நூல் அறிமுகக் கூட்டங்கள், புதன்கிழமை முன்னோட்டத்துடன் 'ஜூம் க்ளௌடு மீட்டிங்' செயலி மூலம் தொடங்கியிருக்கின்றன. வியாழக்கிழமை முதல் பிற்பகல் 3 மணிக்கு தினமும் கூட்டத்தைத் தொடர்ந்து நடத்துவது இங்குள்ளோரின் திட்டம்.

இதுகுறித்து தருமபுரி மாவட்டம் சந்தைப்பட்டி அரசுப் பள்ளி ஆசிரியரும், தகடூர்ப் புத்தகப் பேரவையின் ஒருங்கிணைப்பாளருமான இ. தங்கமணி கூறியது:

புதன்கிழமை முன்னோட்டத்திலேயே 56 பேர் பங்கேற்றார்கள். வியாழக்கிழமை முதல் தினமும் பிற்பகல் 3 மணிக்கு இணையவழியில் சந்திக்கிறோம். தினமும் 5 நூல்களை 5 பேர் அறிமுகப்படுத்துவார்கள். ஒருவர் கூட்டத்தை நடத்துவார்.

மற்றவர்கள் இடையிடையே பேசுவதைக் கட்டுப்படுத்த செயலியில் வசதி உள்ளது. கூட்டத்தை நடத்துபவர் மற்றவர்களை 'மியூட்' செய்வார். யாரேனும் பேச விரும்பினால் அதனைக் குறிக்கும் வசதியும் செயலியில் உள்ளது.

நகரம் தாண்டி ஊர்ப்பகுதிகளில் இணையவசதி குறைவான பகுதிகளிலும் இந்தச் செயலி நன்றாக வேலை செய்கிறது என்பது பெரும்பலம்.

'ஜூம்' செயலியைப் பயன்படுத்துவதும் எளிது. 'ஆன்ட்ராய்டு செல்போன்' பயன்படுத்துவோர் கூகுள் பிளே ஸ்டோரில் 'ஜூம் க்ளௌடு மீட்டிங்' என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கூட்டம் நடத்த விரும்புவோர் 'சைன் இன்' செய்து கொள்ளலாம். அதுவும் கூட எளிதாக பெயர், மின்னஞ்சல் முகவரி கொடுத்தாலே போதும் ஐடி, பாஸ்வேர்டு போன்றவை மின்னஞ்சலுக்கு வந்துவிடும். நேரத்தை முடிவு செய்து பதிவிட்டு லிங்க்கைப் பெறலாம். நண்பர்களுக்கு அனுப்பி வைக்கலாம். கூட்டத்தை நடத்தலாம். எந்தச் செலவும் இல்லை.

கூட்டங்களில் பங்கேற்க மட்டும் விரும்புவோர் 'சைன்இன்' செய்யத் தேவையில்லை. செயலியைப் பதிவிறக்கம் செய்து கொண்டால் போதும். நண்பர்கள் அனுப்பும் லிங்கில் வரும் ஐடி மற்றும் பாஸ்வேர்டைப் பதிவிட்டால் கூட்டத்தில் பங்கேற்கலாம். காதொலிக் கருவியை (இயர் போன்) இணைத்துக் கொண்டால் பேச்சு தெளிவாகக் கிடைக்கும்.

ஊரடங்கு முடியும் வரை தினமும் அறி(வு)முகம் கூட்டம் ஜூம் செயலியில் தொடரவுள்ளோம். வழக்கமாக அறி(வு)முகம் கூட்டத்தில் நேரடியாகக் கலந்து கொள்வோரைக் காட்டிலும் வெளியூர், வெளிநாடுகளில் இருந்தும் பங்கேற்பார்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி என்கிறார் தங்கமணி.

இணையம் நிறைய கெடுதலைத் தந்திருக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டு வரும் சூழலில் இதுபோன்ற கூட்டங்கள் நம்பிக்கையைத் தருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com