திருவாரூர்: சாலையோர மரக்கன்றுகளின் நிலை என்ன?

திருவாரூர் மாவட்டத்தில், கஜா புயலுக்குப்பிறகு மரக்கன்றுகள் நடுவதில் ஏராளமான அமைப்புகள் தீவிரம் காட்டின.
மன்னார்குடி - நீடாமங்கலம் சாலையில் வைக்கப்பட்ட மரப்போத்துகள்
மன்னார்குடி - நீடாமங்கலம் சாலையில் வைக்கப்பட்ட மரப்போத்துகள்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில், கஜா புயலுக்குப்பிறகு மரக்கன்றுகள் நடுவதில் ஏராளமான அமைப்புகள் தீவிரம் காட்டின. தற்போது, ஊரடங்கு உத்தரவின் காரணமாக நடப்பட்ட மரக்கன்றுகள் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கஜா புயல் தாக்குதலால் டெல்டா மாவட்டங்களில் மரங்கள் சாய்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. இதையொட்டி திருவாரூர் மாவட்டத்திலும் பல இடங்களில் மரங்கள் வீழ்ந்ததால், பசுமை தொலைந்து சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. அத்துடன், விவசாயத்தைப் பிரதானமாகக் கொண்ட திருவாரூர் மாவட்டத்தில், ஏற்கனவே நகரமயமாக்கம், சாலை விரிவாக்கம், ரியல் எஸ்டேட் போன்ற காரணங்களால், இருக்கின்ற மரங்கள் மெல்ல அழிக்கப்பட்டிருக்கும் நிலையில், கஜா புயலால் வயது அதிகம் உடைய பல்வேறு மரங்கள் சாய்ந்தன.

மரங்களின் முக்கியத்துத்தைக் கணக்கில் கொண்டு, கடந்த ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடுவதை பல்வேறு அமைப்புகள் தீவிரமாக மேற்கொண்டன. பள்ளி, கல்லூரி வளாகங்கள், ஊராட்சிக்குட்பட்ட இடங்கள், சாலையோரங்கள், வீதியோரங்கள், பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணிகளில், தனியார் அமைப்புகள் ஆர்வம் காட்டின. மேலும், திருமணம், பிறந்தநாள்களில் மரக்கன்றுகள் பரிசாகத் தருவதும், மரக்கன்றுகள் நடும் மனப்பான்மையும் கடந்த ஆண்டு பிரபலமாகவே இருந்தது.

ஆனால், கோடைக் காலத்தில் இந்த மரக்கன்றுகள் எவ்வாறு வளரும், இதற்கான பராமரிப்பு சாத்தியமாகுமா என்ற கேள்வி எழுந்தபோது, பல்வேறு அமைப்புகளும் இதற்கென தனிக்குழுக்களை ஏற்படுத்தி, தண்ணீர் ஊற்றுவது, பராமரிப்பது உள்ளிட்ட பணிகளில் தனிக் கவனம் செலுத்தின. ஆனால், ஊரடங்கு உத்தரவு காரணமாக, சில மாதங்களில் நடப்பட்ட மரக்கன்றுகளின் நிலை மிகவும் மோசமாக இருக்கும் எனக் கவலை தெரிவிக்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

இதுகுறித்து திருவாரூர் தமிழ்ச்சங்க துணைச் செயலாளர் இரா. அறிவழகன் தெரிவித்தது

பொதுவாக, மழைக்காலத்தில் மரக்கன்றுகள் நடுவதில் பலருக்கு நாட்டம் ஏற்படுவது வழக்கம். அதன்பிறகு கோடைக் காலத்தில் அந்த மரக்கன்றுகள் பராமரிக்க ஆளின்றி, வெயிலில் காய்ந்து, ஆடு, மாடுகள் மேய்ந்து இருந்த இடம் தெரியாமல் போய்விடும். இதனாலேயே, நடப்படும் மரக்கன்றுகள் மரங்களாக வளர்வதில்லை. கோடைக் காலத்தில் தண்ணீர் இல்லாமல் காயும் மரக்கன்றுகளைக் காக்க முடியாததாலேயே, நடப்படும் மரக்கன்றுகள், மரக்கன்றுகளாகவே தங்கள் ஆயுளை முடித்துக் கொள்கின்றன.

மரப்போத்துகளுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் விடும் கிரீன் நீடா அமைப்பினர் 
மரப்போத்துகளுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் விடும் கிரீன் நீடா அமைப்பினர் 

மரம் வளர்ப்பது என்பது சாதாரண செயலல்ல. ஒரு குழந்தையை, நல்ல மனிதனாக வளர்ப்பதற்கு சமானம். மரம் வளர்ப்பது என்பதை ஒரு சடங்காகச் செய்யாமல் ஒரு குழந்தையை வளர்க்க மேற்கொள்ளும் முயற்சியோடு செய்ய வேண்டும். குழந்தை வளரத் தேவையான சூழல்களை உருவாக்குவது போல், நடப்படும் மரக்கன்றுகள் வளரும் சூழலைக் கண்டறிந்து நடவு செய்ய வேண்டும். நிறைய மரக்கன்று நட்டோம் என்றில்லாமல், இத்தனை மரங்களை வளர்த்துள்ளோம் எனும் சாதனையைப் புரிய வேண்டும். தற்போது, ஊரடங்கு உத்தரவு காரணமாக மரக்கன்றுகளுக்குத் தண்ணீர் விடும் பணிகள் தடைப்பட்டுள்ளன. இதனால், மரக்கன்றுகளின் வளர்ச்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கும்பட்சத்தில், மரக்கன்றுகளின் நிலை கேள்விக்குறிதான். மரக்கன்றுகளைப் பாதுகாக்கும் வகையில் ஏதாவது சிறப்புத் திட்டம் தீட்டுவது நல்லது என்றார்.

நெடுஞ்சாலை ஓரங்களில் மரப்போத்துகள்..

சில மாதங்களுக்கு முன் மன்னார்குடி - நீடாமங்கலம் நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் சுமார் 12 கிமீ தூரத்துக்கு கிரீன் நீடா அமைப்பு நெடுஞ்சாலைத்துறை உதவியுடன் ஆகியவை இணைந்து 2100 மரப்போத்துகளை நட்டது. பள்ளி, கல்லூரி மற்றும் வேளாண்மை கல்லூரி மாணவிகள், சாலைப் பணியாளர்கள், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தன்னார்வலர்கள் என 800-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று, சுமார் 4 மணி நேரத்தில் இந்த மரப்போத்துகளை நட்டிருந்தனர். நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் ஆலம், ஒதியம், வாதநாராயணா என நடப்பட்டிருந்த மரப்போத்துகளில் சில, தொடர்ச்சியாகப் பெய்த மழையால் துளிர்த்தன.

இந்நிலையில், வெயில் காலம் தொடங்கியதையடுத்து ஓரிரு வாரங்களுக்கு முன் டேங்கர் லாரி உதவியுடன் அனைத்து மரப்போத்துகளுக்கும் தண்ணீர் விடப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே, தற்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் தண்ணீர் விடும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு. ராஜவேலு தெரிவித்தது..

நடப்பட்ட மரப்போத்துகள், துளிர்த்துச் செழித்து வளர்ந்து நிற்கின்றன. மேலும், நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள போத்துகளுக்கு, இந்த கோடைக் காலத்தைக் கடப்பதற்குத் தண்ணீர் தேவை என்பதால், டேங்கர் லாரி மூலம் தண்ணீர் இட்டு வந்தோம். ஆனால், தற்போது ஊரடங்கு காரணமாக இந்தப் பணிக்கு டேங்கர் லாரியினர் தயக்கம் தெரிவிக்கின்றனர். இதனால், பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. ஊரடங்குக்குப் பிறகு, தண்ணீர் விடும் பணியைத் தீவிரமாக்க உள்ளோம். ஒருவேளை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், சில இடங்களில் புதிய போத்துகளை மீண்டும் நட வேண்டிய சூழல் உருவாகும் என்றார்.

ஊரடங்கு மனிதர்களுக்கு மட்டுமல்ல, மரக்கன்றுகளும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏராளமான மரக்கன்றுகளும், மரப்போத்துகளும், பராமரிக்கப்படாமல், தண்ணீரின்றி காய்ந்து வருவது சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com