ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகம்: தமிழகத்தைப் புறக்கணிக்கும் நறுமணப் பொருள் வாரியம்

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் தமிழக ஏலக்காய் ஏல விற்பனை நிறுவனங்கள், ஏலக்காய் விவசாயிகள் சங்கம், வியாபாரிகள் மற்றும், ஏற்றுமதி நிறுவன முகவர்களை புறக்கணித்து, ஏலக்காய் மின்னணு
ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகம்: தமிழகத்தைப் புறக்கணிக்கும் நறுமணப் பொருள் வாரியம்

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் தமிழக ஏலக்காய் ஏல விற்பனை நிறுவனங்கள், ஏலக்காய் விவசாயிகள் சங்கம், வியாபாரிகள் மற்றும், ஏற்றுமதி நிறுவன முகவர்களை புறக்கணித்து, ஏலக்காய் மின்னணு ஏல விற்பனையை தொடங்க நறுமணப் பொருள் வாரியம் முடிவு செய்துள்ளது.

இடுக்கி மாவட்டத்தில் 1.25 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு தமிழகத்தைச் சேர்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏலக்காய் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு உற்பத்தியாகும் ஏலக்காய் நறுமணப் பொருள் வாரியம் சார்பில், இடுக்கி மாவட்டம் புத்தடி, தேனி மாவட்டம் போடி ஆகிய இடங்களில் 12 தனியார் ஏலக்காய் ஏல விற்பனை நிறுவனங்கள் மூலம் மின்னணு ஏல வர்த்தகம் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், கரோனா வைரஸ் பரவல் ஊரடங்கை முன்னிட்டு கடந்த மார்ச் 19-ம் தேதி முதல் ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகம் நிறுத்தப்பட்டது. இதனால், ஏலக்காய் வர்த்தம் முடங்கி ஏல நிறுவனங்களில் கொள்முதல் செய்த ஏலக்காய்களுக்கு வியாபாரிகள் பணம் செலுத்த முடியாத நிலையும், ஏல நிறுவனங்கள் சார்பில் விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்வதில் காலதாமதமும் ஏற்பட்டுள்ளது.

வர்த்தகத்தை தொடங்க முடிவு

தற்போது கேரள அரசு இடுக்கி மாவட்டத்தை கரோனா வைரஸ் பரவல் குறைந்த பச்சை நிற மண்டலமாக அறிவித்துள்ளது. இதனால், நறுமணப் பொருள் வாரியம் சார்பில் இடுக்கி மாவட்டம், புத்தடியில் மட்டும் மீண்டும் ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகத்தை தொடங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் நாளை (ஏப்20) புத்தடியில் உள்ள நறுமணப் பொருள் வாரிய அலுவலகத்தில் நடைபெறுகிறது.

தமிழகம் புறக்கணிப்பு

புத்தடியில் நறுமணப் பொருள் வாரியம் சார்பில் நடைபெறும் ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தம் குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்கு கேரளத்தில் செயல்பட்டு வரும் 7 தனியார் ஏலக்காய் ஏல நிறுவனங்கள், ஏலக்காய் விவசாயிகள் சங்கங்கள் மற்றும் வியாபாரிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் ஏலக்காய் ஏல நிறுவனங்கள், ஏலக்காய் விவசாயிகள் சங்கங்கங்கள், ஏற்றுமதி நிறுவன முகவர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு அழைப்பு இல்லை.

மேலும், தேனி மாவட்டம் கரோனா வைரஸ் பரவலில் சிவப்பு நிற மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், போடியில் மின்னணு ஏல வர்தகத்தை தொடங்கவும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரிகள், போடியில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களின் முகவர்கள் புத்தடியில் நடைபெறும் மின்னணு ஏல வர்த்தகத்தில் கலந்து கொள்ளவும், விவசாயிகள் ஏலக்காய்களை ஏல நிறுவனங்களுக்கு கொண்டு சென்று விற்பனைக்கு பதிவு செய்யவும் முடியாத நிலை உள்ளது.

விலை சரியும் வாய்ப்பு

புத்தடியில் நடைபெறும் ஏலக்காய் மின்னணு ஏல வர்தகத்தில் கேரளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் மட்டுமே கலந்து கொள்வதற்கு வாய்ப்பு உள்ளதாலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க குறைந்த எண்ணிக்கையில் மட்டும் வியாபாரிகள் அனுமதிக்கப்படுவர் என்பதாலும், கொள்முதலில் போட்டியின்றி கடந்த ஏப்.19-ம் தேதி வரை ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை விற்பனையான ஏலக்காய் விலை, கணிசமாக சரியும் வாய்ப்பு உள்ளது.

மேலும் தில்லி, கான்பூர், ஹைதராபாத் ஏலக்காய் சந்தைகள் மூடப்பட்டுள்ளதாலும், ஏற்றுமதி வாய்ப்பு இல்லாததாலும் வியாபாரிகள் குறைந்த விலைக்கு ஏலக்காய்களைக் கொள்முதல் செய்து, இருப்பு வைத்துக் கொள்ளும் நிலையே ஏற்படும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

வர்த்தகத்தை ஒத்திவைக்க வலியுறுத்தல்

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் இடுக்கி மாவட்டத்தில் மழை பொழிவு இல்லாததால் ஏலக்காய் விவசாயம் முடங்கியுள்ள நிலையில், தற்போது புத்தடியில் மட்டும் ஏலக்காய் வர்த்தகத்தை தொடங்குவதால் விலை சரிந்து விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வரும் மே 3-ம் தேதி வரை ஏலக்காய் வர்த்தகத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், உற்பத்தி செய்யப்பட்ட ஏலக்காய்களை புத்தடியில் உள்ள நறுமணப் பொருள் வாரியத்திற்குச் சொந்தமான கிடங்குகளில் கட்டணமின்றி இருப்பு வைத்துக் கொள்ளவும், விவசாயிகள் இருப்பு வைத்துள்ள ஏலக்காய்களுக்கு வங்கிகள் மூலம் பிணைக் கடன் வழங்கவும் நறுமணப் பொருள் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com